Saturday, April 12, 2008

மியன்மாரில் ஜனநாயகம் அதிபர் புஷ் ஏமாற்றம்.

மியன்மாரின் புதிய அரசியல் சட்டச் சீர்திருத்தத்திற்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும். மியன்மார் இராணுவ அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்படவுள்ள இந்தச் சட்டச் சீர்திருத்தத்தை ஜனநாயக ஆதரவாளர்கள் நிராகரித்துள்ளனர்.

தொடர்ந்து இராணுவ ஆட்சியை அமைத்துக் கொள்ளும் வகையிலேயே இந்தப் புதிய அரசியல் சட்டச் சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், வரும் 2010ஆம் ஆண்டு ஜனநாயக முறையிலான தேர்தல் நடைபெறுவதற்கு இந்த அரசியல் சட்டச் சீர்திருத்தம் வழிவகுக்கும் என்று இராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். என்றாலும் தற்போது வீட்டுக் காவலில் உள்ள சமாதானத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளரும் மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவியுமான ஆங் சாங் சூகி 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்தப் புதிய அரசியல் சட்டம் தடை விதித்து இருக்கிறது.

இதன் மூலம் தங்களது முதன்மையான எதிரியை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் திட்டத்தை இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் புஷ், மியன்மாரில் ஜனநாயக நடைமுறைகள் குறித்துத் தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் வெளிப்படையான போக்கைக் கடைப்பிடிக்கும்படியும் ஜனநாயக முயற்சிகளுக்கு விடைகாணும்படியும் இராணுவ ஆட்சியாளர்களை புஷ் கேட்டுக் கொண்டார்.

மே மாதம் 10ஆம் தேதி அரசியல் சட்டச் சீர்திருத்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று இராணுவ ஆட்சியாளர் அறிவித்திருந்தாலும் அதில் வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர் பட்டியல், வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் உட்பட தேர்தலைப் பற்றிய முக்கியமான எந்தவொரு தகவலையும் இதுவரைக்கும் வெளியிடவில்லை.

தேர்தல் பொறுப்பாண்மைக் குழுத் தலைவர் ஆங் டோ நேற்று இந்த வாக்கெடுப்பு குறித்து தொலைக் காட்சியில் அறிவித்தபோது, இரண்டே இரண்டு வரிகளில் மட்டுமே அதனைக் குறிப்பிட்டதாகவும் நைபிடாவ் என்னும் நகரில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் இந்த தேதி முடிவு செய்யப்பட்ட தாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே, அரசியல் சட்டச் சீர்திருத்தத்தை நிராகரிக்கும்படி மியன்மார் மக்களை கேட்டுக் கொண்ட ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (என்எல்டி) கட்சி 194 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தேசச் சட்டச் சீர்திருத்தத்தை வாக்காளர்கள் முழுமையாக படித்துத் தெரிந்து கொள்வதற்கு மிகக் குறுகிய கால அவகாசத்தைத் தருவதற்குரிய வகையிலேயே வாக்கெடுப்புக்குரிய நாளை இராணுவ ஆட்சியாளர் அறிவித்திருப்பதாகக் குற்றம் சாட்டியது.

நேற்று தான் சட்டச் சீர்திருத்த நகல் வெளியிடப்பட்டது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில்தான் அது வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க நூல் நிலையங்களின் விற்பனைக்காக மிகவும் குறைந்த அளவில்தான் அந்த சட்டத் திருத்த நகல்கள் இருப்பதாக என்எல்டி குறை கூறியுள்ளது.

நேற்று முதல் விற்பனைக்கு அந்த சட்ட நகல் வந்திருப்பதால் அதனை வாங்கிப் படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குரிய கால இடைவெளி மக்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று என்எல்டி கட்சியின் பேச்சாளர் சொன்னார்.

0 comments:

Free Blog CounterLG