Monday, April 21, 2008

கட்டுமானப் பொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம் - ப.சிதம்பரம்

கோபி, ஏப். 22- கட்டுமானப் பொருள்களான இரும்பு, சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் ஆலை அதிபர்களின் ஏகபோகம்தான். அரசின் முழு சக்தியையும் பயன்படுத்தி இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றார் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.

மத்திய அரசின் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் கோபியில் நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.என்.நல்லசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் சிதம்பரம் மேலும் பேசியதாவது: பொருளாதாரத்தில் இந்தியா வளர்ந்து இருந்தாலும் உணவு உற்பத்தியில் இன்னும் தன்னிறைவைப் பெறவில்லை. இந்தியாவில் பருப்பு, சமையல் எண்ணெய், விவசாயத்துக்கு தேவைப்படும் உரம், கச்சா எண்ணெய் ஆகியவை நம்முடைய தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இந்த பொருள்களின் விலையை அந்தந்த நாடுகள்தான் நிர்ணயம் செய்கின்றன. அந்த விலையை கொடுத்து நாம் வாங்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

கச்சா எண்ணெய் 75 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய், பாமாயில், யூரியா, கோதுமை உள்ளிட்ட பொருள்களின் விலை 2004-ல் இருந்ததைவிட பன்மடங்கு தற்போது உயர்ந்துள்ளது. பருத்தி ஏற்றுமதியைத் தடை செய்ய சிலர் கூறுகின்றனர், ஆனால், ஏற்றுமதி செய்தால்தான் இறக்குமதி செய்ய முடியும். 2002-ல் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.550 வழங்கப்பட்டது. தற்போது ரூ.775 வழங்கப்படுகிறது. நெல்லுக்கு விலை கூடினால் அரிசி விலை உயரும், கரும்புக்கு விலை கூடினால் சர்க்கரை விலை கூடும். விவசாயப் விளை பொருள்களுக்கு விலையைக் கூட்டினால் நுகர்வோருக்கு விலை உயரும். பொருள்களை இறக்குமதி செய்யும் போது பணவீக்கத்தையும் இறக்குமதி செய்கிறோம். இந்தியா வளர்ந்து வரும் நாடு. இதனால் நாட்டின் நுகரும் அளவும் அதிகரிக்கிறது. உள்நாட்டு சந்தையில் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு கட்டாயமாக நடவடிக்கை எடுக்கும். விலைவாசியை முதலில் மட்டுப்படுத்த முயற்சி செய்து பின்னர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பருப்பு, எண்ணெய் வாங்கிவர வெளிநாடு விரையும் தமிழக அதிகாரிகள்

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கப்படும் தமிழ்நாட்டில், இதர பொருட்களும் போதிய அளவுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

துவரம் பருப்பு போன்ற பயறு வகைகள், பாமாயில் உற்பத்தி இந்தியாவில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தேவையை நிறைவேற்ற பயறு வகைகளை மியன்மார் (பர்மா) நாட்டில் இருந்தும், பாமாயிலை மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் நேரடியாக தமிழக அரசே இறக்குமதி செய்யுமேன தமிழகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்காக, உணவு வழங்கல் துறை ஆணையர், நுகர்வோர் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் அடங்கிய குழு இம்மாதம் 24ல் வெளிநாடுகளுக்குச் செல்கிறது.

இதற்கிடையே துவரம் பருப்பு பற்றாக்குறையை ஈடுகட்ட, கனடாவில் இருந்து சமையல் பருப்பை இறக்குமதி செய்து சோதனை முறையில் குறைந்த விலையில் பொது விநியோக திட்டத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் தலைமைச் செயலகத்தில் சனிக் கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
சமையல் எண்ணெய், அரிசி இருப்பு வைப்பதில் வியாபாரிகளுக்கு உடனடியாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு அதை தீவிரமாக அமல்படுத்துவது,மொத்த விற்பனையாளர், சில்லறை வணிகர்கள், சரக்குகளை இருப்பு வைக்க வரம்பு;கோதுமை. ரவை, மைதா ஆகியவற்றை பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வது; உணவுப் பொருட் களைப் பதுக்குவதையும் வெளி மாநிலங்களுக்கு கடத்துவதையும் தடுக்க தீவிர கண்காணிப்பு;நீண்டகாலத் தீர்வாக, தமிழ் நாட்டில் நெல் உற்பத்தி திறனை அதிகரிப்பது; பயறு, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியைப் பெருக்குவது ஆகியவை அரசு எடுத்துள்ள முடிவுகள்.

ஹிலாரியை விலக்கிக் கொள்ள கட்சித் தலைவர்கள் திட்டம்

நியூயார்க், ஏப். 21- அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஜன நாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் ஹிலாரி கிளின்டன், அவரது போட்டியாளரான ஒபாமாவிடம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் போட்டியில் இருந்து விலகுமாறு ஹிலாரி யைக் கேட்டுக் கொள்ளலாமா என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் யோசித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடக்கவுள்ளது. அந்நாட்டில் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என இரண்டு கட்சிகள் மட்டுமே உள்ளன. அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதியுள்ள வேட்பாளர்கள் யார் என்பதைத் தீர்மானிக்க அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு திரட்டுகின்றனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடிய வேட்பாளராக, மெக்கைன் என்பவரை அக்கட்சி முடிவு செய்துவிட்டது. ஆனால் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியான ஹிலாரிக்கும், ஒபாமாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை இருவரும் பல மாநிலத்தில மேற்கொண்ட பிரசாரத்தில், ஒபாமாவைவிட ஹிலாரி பின்தங்கியிருக்கிறார். வரும் செவ்வாய்க்கிழமை பென் சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு அதிகம் கிடைக்காவிட்டால், போட்டியில் இருந்து அவரை விலக்கிக் கொள்ளலாமா என்று ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் யோசித்து வருகின்றனர்.

சென்னை ஆஸ்பத்திரியில் இறந்ததாக கருதப்பட்டவர் உயிர் பெற்ற அதிசயம்

சென்னை ஆஸ்பத்திரியில் இறந்ததாக கருதப்பட்டவர் உயிர் பெற்ற அதிசயம்

விபத்தில் படுகாயம் அடைந்து, சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரைக் கட்டிப்பிடித்து உறவினர்கள் அழுத போது அவர் உயிர் பெற்ற அதிசயம் நடந்தது.

இந்த அபூர்வ சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விபத்தில் காயமடைந்தவர்

சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த காந்திநகர் 3-வது தெருவைச் சேர்ந்த மணவாளன் என்பவரின் மகன் குட்டி என்கிற புருஷோத்தமன். (வயது 27). கடந்த 16-ந் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கினார். ஏதோ ஒரு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரது நிலைமை மோசமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார்கள். இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இறந்ததாக தகவல்

அங்கு குட்டி என்கிற புருஷோத்தமனுக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மதியம் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் வெளியானது.

இது பற்றி அறிந்த குட்டியின் உறவினர்களும், நண்பர்களும் இரவோடு, இரவாக குட்டிக்கு அஞ்சலி செலுத்தி கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். அவரது இறுதிச் சடங்குக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குட்டியின் மரணம் பற்றி அவரது உறவினர்களுக்கும் சொல்லி அனுப்பினார்கள்.

உயிர் பிழைத்த அதிசயம்

நேற்று காலையில் குட்டியின் உறவினர்கள் அவரது உடலைப் பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். அங்கு குட்டியைக் கட்டி பிடித்து அவர்கள் கதறி அழுதனர்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. குட்டியின் கை, கால்கள் அசைந்தன. கண்களும் திறந்தன. இதனைப் பார்த்து குட்டியின் உறவினர்கள் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் விரைந்து வந்து குட்டியை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மகிழ்ச்சி வெள்ளம்

இறந்ததாக கூறப்பட்ட குட்டி கண் விழித்து பார்த்தார், உயிர் பிழைத்து விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல கூடுவாஞ்சேரி மற்றும் நந்திவரம் பகுதியில் பரவியது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன.

கூடுவாஞ்சேரி மற்றும் நந்திவரம் பகுதியில் இந்த அதிசய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் அதிபர் இநதியா வருகிறார்

ஈரான் அதிபர் இநதியா வருகிறார்

ஈரான் அதிபர் முதல் முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். அவர் அடுத்த வாரம் இலங்கை செல்லும் வழியில் இந்தியா வருகிறார்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்துவருவதாக கூறி அந்நாட்டின் மீது ஐ.நா.பாதுகாப்பு சபை மூலமாக அந்நாட்டுக்கு பல தடைகளை அமெரிக்கா கொண்டுவந்துள்ளது. அணூ ஆயுத திட்டத்தை கைவிடாவிட்டால் ஈரான் நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரான் விஷயத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று இந்தியா வற்புறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இலங்கை செல்லும் வழியில் ஈரான் அதிபர் முகம்மது அஹமதிநிஜாத் இந்தியாவுக்கு வருகிறா. இவர் இந்தியாவுக்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை செல்லும் வழியில் குறுகிய பயணமாக அஹமதிநிஜாத் இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகிறார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்தார்.

ஈரான் ஒரு பழமை நாகரீகம் கொண்ட நாடு. இந்தியா வரும் ஈரான் அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். ஈரான் மிகவும் செல்வாக்கு மிகுந்த நாடு என்றும் அவர் கூறினார்.

மற்ற நாடுகளை காட்டிலும் ஈரானுடன் இந்தியா நல்ல உறவுகளை வைத்துக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஈரான் விஷயத்தில் தூதரக நடவடிக்கைகள் மூலம் பேச்சு நடத்த வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு எம்.கே.நாராயணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வருகிற 28 ம் தேதி இரண்டு நாள் பயணமாக ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் இந்தியா மற்றும் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில்

தண்டனை முடிஞ்சது; ரிலீஸ் எப்போ? கேட்கின்றனர் 'சிறைப் பறவைகள்'


தமிழகத்தில் சென்னை புழல், வேலூரில் 2 பெண்கள் சிறை, சென்னை புழல், மதுரை, கோவை, திருச்சி, பாளையங்கோட்டை உட்பட 9 மத்திய சிறைகள், 14 கிளை சிறைகள், 1 சிறுவர் சிறை, 1 திறந்த வெளி சிறை, 6 சிறப்பு கிளை சிறைகள் உள்ளன. 9 மத்திய சிறைகளிலும் சராசரியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர். கொலை, ஆதாயக்கொலை, கற்பழித்து கொலை, பரோலில் சென்று தப்பிய வழக்கு என கைதிகளுக்கு ஆயுள் (20 ஆண்டுகள்), 10 ஆண்டுகள் என குற்றங்களுக்கு ஏற்ப கோர்ட் மூலம் தண்டனை கிடைக்கிறது. சிறையில் நன்னடத்தையுடன் இருக்கும் ஆயுள் கைதிகளின் தண்டனை காலம் குறைக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறையில் கழித்தால் போதும். நன்னடத்தை விதிமுறைப்படி அண்ணாதுரை பிறந்த நாளில் பொதுமன்னிப்பு அளித்து கைதிகள் பலரை விடுதலை செய்வது வழக்கம். நன்னடத்தையுடன் சில கைதிகள் நடந்து கொண்டாலும் அவர்கள் நன்னடத்தை பட்டியலில் சேர்க்கப்படுவது இல்லை. கொலை கைதி மீது கற்பழிப்பு குற்றம் சேர்ந்திருந்தாலும், போலீசாரை தாக்கி விட்டு தப்பியதாக வழக்கு இருந்தாலும் நன்னடத்தை பட்டியலில் அவர் இடம் பெற மாட்டார். இதுபோல் பல காரணங்களால் கைதிகளுக்கு நன்னடத்தைப்படி பொதுமன்னிப்பு வழங்கப்படுவது கிடையாது. கைதி ஒருவரை பொதுமன்னிப்பில் விடுவிக்க கலெக்டர் தலைமையில் "பரிந்துரை குழு' அமைக்கப்பட்டுள்ளது. இதில் கைதியின் சொந்த மாவட்ட கலெக்டர், சிறைத்துறை கண்காணிப்பாளர், மண்டல நன்னடத்தை அலுவலர், செஷன்ஸ் நீதிபதி, சமூக பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் உறுப்பினர்கள். பரிந்துரை குழுவிடம் செல்லும் பொதுமன்னிப்பு மனுக்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட்டு சட்ட வல்லுனர்கள் ஆலோசனைக்கு பின் முடிவெடுக்கப்படும். பொதுமன்னிப்பு கோராத கைதிகள், தண்டனை காலம் முடிந்த பிறகும் சட்டப்படியான விடுதலைக்காக பரிந்துரை குழுவின் தடையில்லா சான்று பெற வேண்டும். கைதிகள் மீதான கோரிக்கை மனுக்களை தனித்தனியாக பரிந்துரைக்குழு பரிசீலிக்கும். இதற்காக கூடுதல் அவகாசம் பரிந்துரைக்குழுவுக்கு தேவைப்படுவதால் தண்டனை காலம் முடிந்த பிறகும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். மதுரை மத்திய சிறையில் மட்டும் பல்வேறு வழக்குகளில் 8 கைதிகள் தண்டனை காலம் முடிந்தும் விடுதலையின்றி ஓராண்டு முதல் இரண்டாண்டுகள் வரை சிறையில் உள்ளனர். வயதான கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி கூறினார். மதுரை உட்பட மாநிலம் முழுவதும் தண்டனை காலம் முடிந்தும் பரிந்துரைக்குழுவின் தாமதத்தால் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

சதாம் செய்த இரு பெரிய தவறுகள்!

சதாம் செய்த இரு பெரிய தவறுகள்!

கடைசிவரை அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாத இரும்பு மனிதராகத் திகழ்ந்த இராக் அதிபர் சதாம் ஹுசைன் மீது அமெரிக்காவுக்கு கோபம்வர அவர் செய்த இரு பெரும் தவறுகளே காரணம் என இராக்கிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ரஞ்சித்சிங் கல்ஹா தெரிவித்துள்ளார்.

அவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள, "தி அல்டிமேட் பிரைஸ்' என்ற புத்தகத்தில் இந்தத் தகவலை அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்க டாலரின் புழக்கத்தைக் கடுமையாக எதிர்த்துவந்த சதாம் ஹுசேன், 2000-ம் ஆண்டு தங்களது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியத்துக்கு அமெரிக்க டாலரை வாங்க மறுத்தார்.

அத்துடன் உடனடியாக 10 பில்லியன் வைப்பு நிதியாக இருந்த அமெரிக்க டாலரை அப்படியே யூரோவுக்கு மாற்றி மேலும் தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தார். இதனால் சதாம் ஹுசேன் மீது அமெரிக்காவின் ஆத்திரப்பார்வை திரும்பியது.

இராக் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியதும் அவ்வழியை ஈரானும் பின்பற்றியது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளும் இராக்கின் அமெரிக்க டாலர் புறக்கணிப்பு வழியை பின்பற்றத் தொடங்கின. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துடன் சதாமின் மீதான கோபத்தையும் அதிகரித்தது.

சதாமின் இதுபோன்ற நடவடிக்கையை தங்களுக்கு அவர் விடுக்கும் நேரடி சவாலாவும் அமெரிக்கா ஒருகட்டத்தில் எண்ணத் தொடங்கியது. இதன்பின்னரும் சதாமை வாலாட்டவிட்டால் அது தனக்கு பெரும் துன்பமாகவே முடியும் என்றும் அமெரிக்கா கருதியது.

அன்று முதல் சதாமுக்கு எதிராக அமெரிக்கா தருணம் பார்த்து காய் நகர்த்த ஆரம்பித்தது. இருப்பினும் இதற்கெல்லாம் சதாம் ஹுசேன் அஞ்சவில்லை. தனது அமெரிக்க டாலர் நிராகரிப்பை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

இரண்டாவது தவறு:இதுபோன்ற நிலையில் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தும் விதமாக சதாம் ஹுசேன் மற்றொரு செயலில் ஈடுபட்டார். தங்களது நாட்டில் அமெரிக்காவை சாராத எண்ணெய் கம்பெனிகளுக்குதான் ஒப்பந்தத்துக்கு அனுமதி என்பதுதான் அது. சதாமின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஒருகணம் தூக்கிவாறிப்போட்டதுடன் அவர் மீதான கோபத்தை கடுமையாக்கியது.

எனினும் இதனால் சதாமுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அவரை அனுசரித்து போகவேண்டிய கட்டாய நிலைக்கே அமெரிக்கா ஆளாகியிருந்தது. காரணம், தங்களது பெரும்பகுதி எரிபொருள் தேவைக்கு அமெரிக்கா இராக்கை சார்ந்திருந்ததே ஆகும்.

இருப்பினும் சதாம் ஹுசேனை பழி தீர்க்கவேண்டும் என்பதில் மட்டும் அமெரிக்கா குறியாக இருந்தது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டது என ரஞ்சித்சிங் கல்ஹா, தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி அரேபியா மன்னரை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி

சவூதி அரேபியா மன்னரை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி

சவூதி அரேபியாவுக்கு இரு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சனிக்கிழமை அந்நாட்டு மன்னர் அப்துல்லாவைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு வர்த்தக உறவை மேலும் வலு ப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். இந்தியாவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்த அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சவூதி மன்னர் அப்துல்லா, பிரணாப் முகர்ஜியிடம் உறுதியளித்தார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்.20) பிரணாப் முகர்ஜி, சவூதி வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது எரிசக்தித்துறை, கல்வித்துறை, முதலீட்டுத்துறை, வர்த்தகத்துறை ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருதலைவர்களும் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 15-ல் பிளஸ் 2' தேர்வு முடிவு?

மே 15-ல் பிளஸ் 2' தேர்வு முடிவு?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற "பிளஸ் 2' தேர்வு முடிவுகள் வரும் மே 15-ம் தேதி வெளியாகலாம் என்று தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரையில் நடைபெற்றது. அதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மொழிப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தி முடித்து, முதன்மைப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தாள்கள் தற்போது திருத்தப்படுகின்றன.

விடைத்தாள் திருத்தும் பணி சில தினங்களில் பூர்த்தியாகிவிடும். அதன் பின் அரசுத் தகவல் தொகுப்பு மையத்துக்கு அனுப்பப்படும். அங்கு கம்ப்யூட்டர் உதவியுடன் எந்தத் தாள் யாருடையது என்று பதிவு செய்து, அத்தாளுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் ஆகியவை பதிவு செய்யப்படும்.

"பிளஸ் 2' விடைத்தாள் திருத்தும் பணியைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான தேர்வுத் தாள் திருத்தும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

"பிளஸ் 2' தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில், பாதிக்கு மேல் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தேர்வுத் தாள் திருத்தும் பணி பூர்த்தியாகி, முடிவுகள் முறையாக அறிவிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி மே 15-ம் தேதி தேர்வு முடிவு வெளியாகலாம் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாயின. இந்த முறை அதற்கேற்ப திருத்தும் பணி நடைபெறும்.

பொறியியல், மருத்துவம் ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் மே முதல் வாரத்திலேயே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி., உள்ளிட்ட 10-ம் வகுப்புத் தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இரு தினங்களுக்கு முன் தொடங்கியுள்ளது. அநேகமாக ஒரு சில நாள்களில் இப்பணியும் பூர்த்தியாகிவிடும் எனத் தெரிகிறது.

27 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவு!

உயர் கல்வி படிப்பதற்காக இதர பிற்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு இந்த ஆண்டே 27 ‌விழு‌க்காடு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து‌ள்ளது.

பொ‌றி‌யிய‌ல், மருத்துவம், நிர்வாகம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு 27 ‌விழு‌க்காடு ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதை எ‌தி‌ர்‌த்து தொடர‌ப்ப‌ட்ட வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், 'மத்திய அரசு உத்தரவு செல்லும்' என்று உறு‌‌தி செ‌ய்தது. இதில் கிரீமிலேயர் (வசதி படைத்தோருக்கு ஒதுக்கீடு) பற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் கடந்த 10ஆ‌ம் ந் தேதி தீர்ப்பளித்தது.

இந்த நிலையில் இந்த கல்வி ஆண்டு (2008-2009) முதலே 27 ‌விழு‌க்காடு ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேற்று உத்தரவிட்டு‌ள்ளது.

இதற்கான கடிதத்தை மனித வளத்துறை அனைத்து மத்திய அரசு நிதி உதவி பெறும் ஐ.ஐ.எம். (நிர்வாக இயல் கல்லூரிகள்) மற்றும் ஐ.ஐ.டி. (என்ஜினீயரிங் உயர் கல்வி கல்லூரி) ஆகியவற்றுக்கு எழுதி இருக்கிறது.

இந்த கடிதத்தில், "ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 வ‌ிழு‌க்காடு தவிர 15 ‌விழு‌க்காடு தாழ்த்தப்பட்டோருக்கும், 7.5 ‌விழு‌க்காடு மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்'' என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஆராய்ச்சி துறையில் ஈடுபட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

27 ‌விழு‌‌க்காடு ஒதுக்கீடு சரியாக அமல் செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விசேஷ அதிகாரம் படைத்த ஆணைய‌‌த்தை மத்திய அரசு அமைத்து‌ள்ளது.

மே. வங்கத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து முழு அடைப்பு : இயல்புநிலை பாதிப்பு!



விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டாதாக குற்றம்சாட்டி மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு நடத்தியதால் மேற்கு வங்க மாநிலத்தில் இயல்பு நிலை பாதிக்கப்ட்டது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, இந்திய சோஷலிச ஐக்கிய மையத்தைச் (எஸ்.யூ.சி.ஐ.) சேர்ந்த தொண்டர்கள் பல்வேறு இடங்களில் ரயில் பாதையில் மறியல் செய்தனர். இதனால் ஹவ்ரா, சியால்டக் ஆகிய கோட்டங்களில் நீண்ட தூர ரயில், புற நகர் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

தனியார் பேருந்துகள், கார்கள், டாக்சிகளும் ஓடவில்லை. இதனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கும் கொல்கட்டா சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

அதே நேரத்தில் சுரங்கபாதை ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்படவில்லை. நேதாஜி சுவாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் விமானங்களின் சேவையும், இங்கிருந்து புறப்படும் விமான சேவையும் வழக்கம் போல் நடைபெறுகின்றது. விமான பயணிகள் முழு அடைப்பு தொடங்குவதற்கு முன்னரே விமான நிலையத்திற்கு வந்து குவிந்து விட்டனர். இதனால் கூட்டம் நிரம்பி வழிவதாக விமான நிலைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

கொல்கட்டாவில் கடைகள், தினசரி சந்தைகள், தனியார் அலுவலகங்கள், வங்கி, நிதி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன.

இதுவரை விரும்பதகாத சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று சட்டம்-ஒழுங்கு ஐ.ஜி ராஜ் கனோஜியா தெரிவித்தார்.



உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் தவறிவிட்டன என்று மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், இந்திய சோஷலிச ஐக்கிய மையமும் (எஸ்.யூ.சி.ஐ) இணைந்து கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.

கடை அடைப்பு போராட்டத்தை பற்றி மம்தா பானர்ஜி கூறுகையில், “நாங்கள் விலை உயர்வு குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த போதிலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டன. மத்திய அரசு விலை உயர்வால் மக்கள் படும் கஷ்டங்களை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இதனால் மாநிலம் தழுவிய கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றோம். விலை உயர்வால் பொதுமக்களுக்கு கடுமையான சுமை ஏற்பட்டுள்ள நிலையிலும், இதை பற்றி கவலைப்படாமல் இருக்கின்றனர். பணவீக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசும் கவலைப்படாமல் இருக்கின்றது” என்று குற்றம் சாட்டினார்.

'ஊராட்சித்தலைவர் மாநாடு புறக்கணிப்பு ஏன்'


டெல்லியில் வரும் 22ம் தேதி துவங்கும் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த தமிழக அரசு, அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் தயாரித்து உள்ளதாகவும், அதில் 'ஊராட்சிகளை' மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்கு உரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியதாகவும், அதில் ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், முதல்வரின் கடிதத்தில் குறிப்பிட்ட ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படாததால், டெல்லி மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதே கருத்தை வலியுறுத்தி மேற்குவங்க அரசும், டெல்லியில் நடைபெறும் ஊராட்சித் தலைவர் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி ஒருநாள் தரவரிசை: 2ம் இடத்தில் சச்சின்



சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 2வது இடத்தில் உள்ளார். ஒருநாள் அணிகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்டது.

இதில் பேட்ஸ்மென் பிரிவில் தென்ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் 792 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 777 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் 770 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 728 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், தென்ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா (தலா 127 புள்ளி) முதல் 2 இடங்களையும், நியூசிலாந்து (113 புள்ளி) 3வது இடத்தையும், இந்தியா (113) 4வது இடத்தையும் பிடித்துள்ளன.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் நியூசிலாந்து கேப்டன் டேனியர் வெட்டோரி முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் நாதன் பிராக்கன், நியூசிலாந்தின் ஷேன் பாண்ட் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதிமுக பேரவையில் இருந்து வெளிநடப்பு



உடுமலைப்பேட்டையில் நடந்து வரும் திமுக உட்கட்சி தேர்தல் ஏற்பாடுகளின் போது ஏற்பட்ட கலவர சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சட்டபேரவையில் இருந்து அதிமுகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.

இன்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது, உடுமலைப்பேட்டையில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக திமுகவினர் இடையே நடந்த மோதலில், காவல்துறை டிஎஸ்பி ஈஸ்வரன் மீது நடந்த தாக்குதல் குறித்து விவாதிக்க அனுமதியளிக்குமாறு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ஆவுடையப்பனிடம் அனுமதி கோரினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிதியமைச்சர் க.அன்பழகன், கட்சி தொடர்பான பிரச்சனைகளை விவாதிக்க அவையில் அனுமதி தரக்கூடாது என்றார்.

இதை ஆமோதிக்கும் வகையில், கட்சி தொடர்பான பிரச்சனைகளை சட்டப் பேரவையில் விவாதிக்க அனுமதியளிக்க முடியாது என சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

இதையடுத்து அதிமுக கொறாடா செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், அரசுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நேபாள அரசர் இந்தியாவில் தஞ்சம்(?)

நேபாள மன்னர் ஞானேந்திரா இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தஞ்சமடையலாம் என்று கூறப்படுகிறது. நேபாளத்தில் அரசியல் நிர்ணயசபை தேர்தல் நடத்தப்பட்டு மாவோயிஸ்டுகள் பெருமளவில்வெற்றி பெற்றுள்ளனர். அங்கு மாவோயிஸ்ட்டுகள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ள நிலையில், மன்னர் ஆட்சி ரத்து செய்யப்பட உள்ளது.

இதனையடுத்து நேபாள மன்னர் ஞானேந்திரா தனது குடும்பத்தினரோடு இந்தியாவில் தஞ்சமடையவிருப்பதாக கூறப்படுகிறது. அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிகார் நகரில் தஞ்சமடையக்கூடும் என்று கூறப்படுகிறது.

மன்னர் ஞானேந்திராவின் மருமகள் ஹிமானி இந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேபாள மன்னரிடமிருந்து புகலிடம் கேட்டு எந்த கோரிக்கையும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

இன்னும் 100 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அடி உயரும் வங்காளதேசம் முழுவதுமாக மூழ்கிவிடும்(?)


லண்டன், ஏப். 21.இன்னும் 100 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து விடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வங்காளதேசம் முற்றிலுமாக மூழ்கி விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. பூமி வெப்பமாகி வருவது பற்றியும் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடலின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வராம் ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் ஐரோப்பிய புவி அறிவியல் சங்க மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஞ்ஞானிகள், இன்னும் 100 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் 4 அடி உயரும் என்று அறிக்கை மூலம் தங்கள் கணிப்பை வெளியிட்டுள்ளனர்.இது குறித்து இந்த மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பிரவுட்மேன் கடல்சார் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வெட்லானா ஜெவ்ரேஜ்வா கூறியதாவது:-
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக கடல் நீர்மட்டம் சீராக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் 2 செ.மீ. மட்டுமே கடல் நீர்மட்டம் உயர்ந்தது. 19ஆம் நூற்றாண்டில் 6 செ.மீ. உயர்ந்தது. ஆனால், பனிபாளங்கள் உருகியதன் காரணமாக, 20ஆம் நூற்றாண்டில் கடல் நீர்மட்டம் 19 செ.மீ. உயர்ந்தது.

இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரை, கடல் நீர்மட்டம் அதிகமாக உயரும். ஏனென்றால், பனிப்பாறைகள் உருகி வருகின்றன. பனிப்பாளங்கள் நகர்ந்தபடி மறைந்து வருகின்றன. தண்ணீர் வெப்பமடைந்து வருகிறது. இந்த காரணங்களால், இந்த தூற்றாண்டு முடியும்போது, அதாவது சுமார் 100 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து விடும். சீதோஷ்ணநிலை மாற்றம் பற்றி ஆராயும் குழு, கடல் நீர்மட்டம், அரை அடி முதல் 2 அடிவரை உயரும் என்று கணித்துள்ளது. அது சரியல்ல. அதைவிட அதிகமாகவே உயரும்.இவ்வாறு அவர் கூறினார். பிரவுட்மேன் கடல்சார் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த சைமன் ஹோல்கேட் என்ற விஞ்ஞானியும் இதே கருத்தை தெரிவித்தார்.

சீதோஷ்ணநிலை மாற்றம் மற்றி ஆராய்ந்த குழுவின் கணிப்பு சரியல்ல என்றும் அவர் கூறினார். கடல் நீர்மட்டம் எவ்வளவு உயரும் என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே மாறுபட்ட கருத்து இருந்தபோதிலும் எந்த பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதில் அவர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளளனர். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். வெள்ளத் தடுப்பு வசதிகளை செய்து கொள்ள வசதி இல்லாத வங்காளதேசம் போன்ற நாடுகள், முற்றிலுமாக மூழ்கி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.சீனாவில் கடல் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தால், அங்கு 7 கோடிக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வெளியேற வேண்டி இருக்கும் என்றும், வியட்நாம் நாட்டில் 10 சதவீத மக்கள் வெளியேற வேண்டி இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

புது விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற 5 வயது விஞ்ஞானி

இங்கிலாந்து நாட்டில் பக்ஸ்டன் நகரைச் சேர்ந்த சாம் என்ற 5 வயது சிறுவன், புதிய விதமான துடைப்பத்தை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளான்.
இன்னும் சொல்லப் போனால், அவன் 3 வயதிலேயே இதை கண்டுபிடித்து விட்டான். அப்போதெல்லாம் அவனது தந்தை இரண்டு துடைப்பங்களை பயன்படுத்தி வந்தார்.
பெரிய பொருள்களை பெருக்க ஒரு துடைப்பமும், தூசி போன்ற சிறிய பொருள்களை பெருக்க மற்றொரு துடைப்பமும் பயன்படுத்தி வந்தார். அதை பார்த்த சாம், ஒரு ரப்பர் பாண்டு எடுத்து வந்து, இரண்டு துடைப்பங்களையும் ஒன்றாக கட்டி போட்டான்.
இதன் மூலம் புதிய வகை துடைப்பத்தை கண்டுபிடித்தான். இதைக் கொண்டு, பெரிய பொருள்களையும், தூசி போன்ற சிறிய பொருள் களையும் ஒரே நேரத்தில் பெருக்கலாம்.
தனது கண்டுபிடிப்பை தந்தையை அழைத்து காண்பித்தான். அசந்து போன அவர், அவனுக்காக காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். 5 வயதிலேயே கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றவன் என்ற பெருமையை அச்சிறுவன் பெற்றுள்ளான்

பெண்களால் நடத்தப்படும் தொலைக்காட்சி அலைவரிசை


புதுடில்லி, ஏப். 20- பாசிட்டிவ் தொலைக்காட்சி குழுமத்தின் ஒரு பகுதியாக முழுக்க முழுக்க பெண்களால் செயல்படுத்தப்படும் போகஸ் (Focus) தொலைக்காட்சி என்ற அலைவரிசை இன்னும் சில தினங்களில் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது. 24 மணி நேர செய்தி அலைவரிசையாக இது இருக்கும். இரு மொழிகளில் ஒளிபரப்பப்படும். பெண் பத்திரிகையாளர் மனோ ரஞ்சனா தலைமையில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஏராளமான பெண்கள் இதில் பணியாற்றுகின்றனர். மொத்தம் நூறுபேரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலையில் அலுவலகம் வரும் பெண்கள் செய்தி சேகரிக்க தொலைக்காட்சி புகைப்படக் கருவியுடன் அவசரமாக புறப்பட்டு செல்கின்றனர். ஏற்கெனவே 17 பெண்கள் கொண்ட குழுவில், பெண்கள் பிரச்சினை தொடர்பாக 7000 நிகழ்ச்சிகளை தொகுத்து வைத்துள்ளனர். கனடாவில் டபிள்யூ நெட், பிரிட்டனின் லிவிங் சேனல், அமெரிக்காவின் லைப்டைம் தொலைக்காட்சி போன்றவையும் முழுக்க முழுக்க பெண்களால் செயல்படுத்தப்படுகின்றன. நாங்கள் தேர்வு செய்துள்ள பெண்களுக்கு மருத்துவம், பேஷன், வாழ்க்கை முறை போன்ற நிகழ்ச்சியில் ஆர்வம் இல்லை, அரசியல், புலனாய்வு போன்றவற் றில் தான் ஆர்வமாக உள்ளார். ஒருவேளை மருத்துவம், பேஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆண்களை தேர்வு செய்யும் நிலை ஏற்படலாம் என்று நகைச்சுவையாக கூறுகிறார் மனோரஞ்சனா. நொய்டாவில் உள்ள போகஸ் தொலைக்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்டு பிரம்மாண்டமான தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தப்படுகிறது

பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும்: பிரதமர் மன்மோகன்சிங் உறுதி

புதுடில்லி, ஏப். 20- நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் சிதம்பரமும் தெரிவித்தனர்.
இந்தியாவின் முதலாவது சுதந்திரப் போரின் 150 ஆவது நிறைவு விழாவினையொட்டி நினைவு நாணயம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்த பல வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன. விரைவில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்றார். நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகையில், பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்காக ஒரே நாளில் அதிசயம் நிகழ்ந்துவிடாது. இறக்குமதி செய்யப் படும் பொருள்களின் விலையை அரசால் கட்டுப் படுத்த முடியாது எனினும் சர்வதேச அளவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை, வரும் வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது. இவற்றின் விலை சர்வதேச அளவில் கடுமையாக உயர்ந்து உள்ளது என்று கூறினார்.

Free Blog CounterLG