Thursday, April 17, 2008

ஆலடி அருணா கொலை வழக்கு: 2 பேருக்கு தூக்கு தண்டனை- நீதிபதி பரபரப்பான தீர்ப்பு

“தண்டனை பெற்றவர்கள் பிரபல ரவுடிகள்,நெல்லை கோர்ட்டில் விதிக்கப்பட்ட 2-வது தூக்கு தண்டனை, நீதிவென்றது- எஸ்.ஏ.ராஜா பேட்டி ,”

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, 31-12-2004 அன்று சொந்த ஊரான ஆலடிப்பட்டி அருகே வாக்கிங் சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் அவரது நண்பர் பொன்ராஜும் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பாலமுருக, ஆட்டோ பாஸ்கர், அழகர், பெனடிக்ட், ஆறுமுகம், பரமசிவன், கண்ணன், ரவிக்குமார் அர்ச்சுனன், தனசிங் ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் வேல்துரை, பாலமுருகன், அழகர், எஸ்.ஏ.ராஜா, ஆறுமுகம், கண்ணன், தனசிங், பரமசிவன், டாக் ரவி, அர்ச்சுனன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். பென்னி குஜராத்தில் போலீசார் சுற்றி வளைத்த போது விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டான். ஆட்டோ பாஸ்கர் விசாரணையின் போது சேர்மாதேவி போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டான்.

எஸ்.ஏ. ராஜா உள்பட 10 பேர் மீது நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி பாஸ்கரன் நேற்று தீர்ப்பு கூறினார். வேல்துரை, பாலமுருகன், அழகர் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்றும், எஸ்.ஏ.ராஜா, ஆறுமுகம், கண்ணன், தனசிங், பரமசிவன், அர்ச்சுனன் ஆகிய 6 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு நீதிபதி பாஸ்கர், குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்தார். அவர் முன்பு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

1-வது குற்றவாளி வேல்துரை மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு குறைந்த பட்சம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

2-வது குற்றவாளி பாலமுருகன், ஆலடி அருணாவை கொலை செய்தது, சாக்ரடீசை கொல்ல முயன்றது, அவர்களை வழிமறித்தது ஆகிய 3 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையும், அதிகபட்சம் மரண தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

3-வது குற்றவாளி அழகர் ஆசிரியர் பொன்ராஜை கொலை செய்தது, சாக்ரடீசை கொல்ல முயன்றது, வழிமறித்தது ஆகிய 3 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குறைந்தபட்சம் ஆயுள்தண்டனை, அதிக பட்சம் மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

வேல்துரை "நீதிபதியை பார்த்து என் மீது போட்டது பொய் வழக்கு. எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

பாலமுருகன், "எனது குடும்பம் கஷ்டமான குடும்பம். எனக்கு திருமணம் ஆகவில்லை. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

அழகர், "எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த வழக்கில் எனக்கு சம்பந்தம் இல்லை. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க கருணை காட்டுங்கள்'' என்றார்.

அரசு வக்கீல் செல்வராஜ் எழுந்து, "குற்றவாளிகள் குற்றம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளது. இவர்கள் குறைந்தபட்ச தண்டனை கேட்பதில் நியாயம் இல்லை. எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பாஸ்கர் தனது தீர்ப்பை கூறினார். அவர் கூறியதாவது:-

வேல்துரை அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததற்காக அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம்கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பாலமுருகன், அழகர் ஆகிய 2 பேரும் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த, தமிழக அமைச்சராகவும், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்த ஆலடி அருணாவை கொலை செய்துள்ளனர்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி இவர்கள் இருவரையும் உயிர்பிரியும் வரை தூக்கில் இடவேண்டும். எஸ்.ஏ. ராஜா உள்பட 6 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி பாஸ்கர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தூக்குத்தண்டனை பெற்றவர்கள் பிரபல ரவுடிகள்

ஆலடி அருணா தொடர்பான வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற அழகர் (வயது 29), திருப்பூர் அடுத்து கருவம் பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன். பிரபலரவுடி. இவர் சிறுவயது முதல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வந்தார். பின் வாலிபரானதும், ஏராளமான கொலை வழக்குகளில் சிக்கினார்.

மதுரையில் உள்ள தாதா கும்பலோடு சேர்ந்து கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்.் `குவாட்டர்' மது வாங்கி கொடுத்தால் கொலை செய்யும் குணமுடையவர் என்று பரபரப்பாக பேசப்படுபவர். இவர் மீது பல வழக்குகளில் பிடிவாரண்டும் உள்ளது.

பாலா என்ற பாலமுருகன் (29). நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன். பிரபலரவுடியான இவர் நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டத்துரையின் நண்பன். கட்டத்துரை சென்னையில் கொலை செய்யப்பட்ட போது பாலமுருகனும் உடனிருந்து காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

நெல்லை கோர்ட்டில் விதிக்கப்பட்ட 2-வது தூக்கு தண்டனை

நெல்லை கோர்ட்டில் 1998-ம் ஆண்டு நீதிபதி பேச்சுமுத்து என்பவர் கொலை வழக்கில் எதிரிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கினார். நாகர்கோவிலில் கோர்ட்டுக்குள் புகுந்து நீதிபதி முன்பு அய்யாவு என்பவரை வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கை நெல்லை கோர்ட்டில் விசாரித்த நீதிபதி பேச்சுமுத்து எதிரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஆலடி அருணா கொலை வழக்கில் எதிரிகளுக்கு நீதிபதி பாஸ்கர் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.

ஆலடி அருணா கொலை வழக்கில் நீதிவென்றது: விடுதலையான எஸ்.ஏ.ராஜா பேட்டி

ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வடக்கன்குளம் கல்வி நிறுவன தலைவர் எஸ்.ஏ.ராஜா கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 2 யுத்தத்தில் பங்கேற்று நாட்டுக்காக சேவை செய்தேன். அதன்பிறகு வெளிநாடு சென்று சம்பாதித்து இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். ஆலடி அருணா கொலை வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

என்னை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது கூட எதற்காக இந்த விசாரணை என்றுகூட சொல்லவில்லை. என் அருகில் நின்ற வேல்துரைக்கு கூட நான் யார் என்று அப்போது தெரியாது.

ஆனால் ரூ. 5 லட்சம் கொடுத்து ஆலடி அருணாவை கொலை செய்ய சொன்னதாக வழக்கு போட்டார்கள். இதில் எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. கடந்த 3 வருடம் 4 மாதங்களாக நான் நிம்மதி இழந்து வேதனையோடு இருந்தேன்.

இப்போது நீதிதேவன் கண் திறந்து நல்ல தீர்ப்பு தந்துள்ளார். நீதி வென்றுள்ளது. தமிழக அரசின் நேர்மையான செயல்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள சான்று இது, இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேல்துரை கூறும்போது:-

என் மீது பொய்யான வழக்கு போட்டார்கள். நீதிபதி கொலை வழக்கில் இருந்து என்னை விடுவித்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டியது தவறு. விரைவில் நான் விடுதலையாகி வருவேன்.

தூக்கு தண்டனை கைதிகள் கதறல்

ஆலடி ஆருணா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா (எ) பாலமுருகன், அழகர் ஆகிய 2 பேரும் தீர்ப்பை கேட்டதும் தங்கள் கைகளால் முகத்தை மூடி கதறி அழுதனர். உடனடியாக போலீசார் அவர்களை பாதுகாப்பாக ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

(நன்றி- மாலைமலர்)

சேது சமுத்திரம் வழிபாட்டு இடம் அல்ல: உச்ச நீதிமன்றம்

“இந்த இடத்தை (ராமர் சேது) வழிபாட்டு இடம் என்று யார் சொன்னது? கடலின் நடுப்பகுதிக்குச் சென்ற யார் வழிபடப் போகிறார்கள்?,”
புதுடில்லி: சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராகக் கூறப்பட்டு வரும் சமய காரணங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருக்கிறது.ராமர் சேது பாலம் அல்லது ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படும் அந்த இடத்தை வழிபாட்டு இடமாக அழைப்பதில் உச்ச நீதிமன்றம் தனது மகிழ்ச்சியின்மையைத் தெரிவித்திருக்கிறது.

“இந்த இடத்தை (ராமர் சேது) வழிபாட்டு இடம் என்று யார் சொன்னது? கடலின் நடுப்பகுதிக்குச் சென்ற யார் வழிபடப் போகிறார்கள்?,” என்று நீதிமன்ற குழுவில் இடம்பெற்ற தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அந்த இடத்திற்கு மக்கள் போகிறார்கள், வழிபடுகிறார்கள் என்று சொல்லாதீர்கள் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.ராமர் சேது இந்துக்களுக்கான வழிபாட்டு இடம் என்பதால் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதித்து அந்த இடத்தைப் பாதுகாக்கும்படி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு மேற்கூறியவாறு தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்துக்கள் புனித தலமாக கருதும் ராமர் சேதுவை பழங்கால நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்கு ஊறு விளைவிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.இது வழிபாட்டுக்குரிய இடம் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நானும் ஒவ்வோர் ஆண்டும் அங்கு வழிபடச் செல்கிறேன். நீதிபதி அவர்களே! உங்கள் நம்பிக்கை என்ன என்பதல்ல கேள்வி. இது நாட்டிலுள்ள மக்களின் நம்பிக்கை என்று அப்போது சுப்ரமணிய சுவாமி கூறினார்.ராமேஸ்வரத்துக்கு தென்கிழக்கில் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடல்பகுதியில் காணப்படும் 30 கிலோமீட்டர் நீள மேட்டுப் பகுதியே ராமர் சேது என அழைக்கப்படுகிறது. முன்னதாக இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை விளக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.இந்நிலையில், சுப்ரமணிய சுவாமி தவிர இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்த மற்றவர்கள் சார்பில் வேணுகோபால், அருண் ஜேட்லி ஆகியோர் வழக்கறிஞர்களாக ஆஜராயினர்.

மத்திய அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய விளக்கத்தை மீட்டுக் கொண்டது என்றாலும் நீதிமன்றம் ஆணையிட்ட புதைபொருள் ஆய்வு விசாரணைகள் இன்னும் நடப்பில் உள்ளன என்றும் அவர்கள் நினைவுபடுத்தினர்.ஆனால் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையை நீதிமன்றத்திற்கு வலியுறுத்திச் சொல்ல மனுதாரர்களுக்கு அனுமதியில்லை என்றும் நீதிபதிகள் குழு சொன்னது.

நன்றி- தமிழ் முரசு

மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் இருக்கும் மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ்-1 வகுப்பு, அதாவது பதினோராம் வகுப்பில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீட்டை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தர விட்டுள்ளது.
69 சதவீத இடஒதுக்கீட்டை கடைபிடிக்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. அரசுப்பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு உயர் கல்வி நிலையங்களில் தற்போது நடைமுறையில் உள்ளது போன்று, 11 வது வகுப்பிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசின் நிலையாகும்.

IPL கிரிக்கெட் போட்டிகள் வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன.


உலக விளையாட்டு வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் இந்திய பிரிமியர் லீக்(IPL) கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் வெள்ளிகிழமை இந்தியாவின் பெங்களூர் நகரில் தொடங்குகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நிர்வகிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம்(BCCI) இதுவரை தேசிய,மாநில மற்றும் மாவட்ட அளவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தி கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது.

கிரிக்கெட் விளையாட்டை மேலும் வர்த்தக ரீதியில் வளர்க்கும் நோக்குடன் இந்தியன் பிரீமியர் லீக்(IPL) எனும் ஒரு அமைப்பை உருவாக்கி, தனியார் கிரிக்கெட் சங்கங்களை தொடங்கி அதில் சர்வதேச வீரர்களுடன் இந்திய வீரர்களும் பங்கேற்கும் போட்டித் தொடரை நடத்தும் நவடிக்கையில் இறங்கியுள்ளது. வர்த்தக ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பல சர்ச்சைகளையும் ஏறடுத்தியுள்ளது.

ஏகப்பட்ட பண முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தப் போட்டிகளில் தொழிலதிபர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை ஈடுபட்டுள்ளனர். சில வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஏலத்தின் மூலம் சந்தைகளில் பொருட்கள் வாங்கப்படுவது போல வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: சிறுமி கொலை வழக்கில் கார் டிரைவருக்கு தூக்கு தண்டனை.

சென்னை அம்பத்தூரில் நடந்த இந்த பயங்கர கொலை வழக்கு பற்றி, கோர்ட்டில் கூறப்பட்ட விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா கோவில் புறையுர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன், இவரது மகன் வெங்கடேசன் (வயது 26). இவர் வேலைத் தேடி கடந்த 2005-ம் ஆண்டு சென்னை அடுத்த அம்பத்தூருக்கு வந்தார். அம்பத்தூரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் லோகநாத தெருவைச் சேர்ந்த ஷீபா எலிசபெத் (வயது 30) இவரது கணவர் பிரபாகரன் இறந்துவிட்டார். இவருக்கு ரெபேக்கா (வயது 9) என்ற மகளும், சாமுவேல் (6) என்ற மகனும் உண்டு. ரெபேக்கா 4-ம் வகுப்பும், சாமுவேல் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஷீபா, தனது வீட்டில் அனாதை இல்லம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த அனாதை இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி வந்தனர்.

இந்நிலையில், அனாதை இல்லத்தில் கட்டுமானப்பணிகள் நடைப்பெற்று வந்தது. கொத்தனார் வெங்கடேசன், அனாதை இல்லத்தில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். அப்போது குன்றத்தூர் மனஞ்சேரி பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த அருள் என்பவரின் மனைவி ஷகிலா (வயது 29) என்பவர், அனாதை இல்லத்தில் சமையல் வேலைக்கு வந்து சேர்ந்தார்.

இவருக்கும், வெங்கடேசனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அனாதை இல்லத்திற்கு கார் டிரைவர் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. இதனை அறிந்த வெங்கடேசன், கார் ஓட்ட டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கினார். சான்றிதழை அனாதை இல்ல நடத்துனர் ஷீபா எலிசபெத்திடம் கொடுத்து, கார் டிரைவர் வேலையில் சேர்ந்தார். இதற்கு ஷகிலா உதவி செய்தார்.

வெங்கடேசனும், ஷகிலாவும் இடையே உள்ள கள்ளக்காதல் தொடர்பு, அனாதை இல்ல நிர்வாகி ஷீபா எலிசபெத்துக்கு தெரிய வந்தது. அவர் இருவரையும் அழைத்து கண்டித்தார். ஆனாலும், அவர்கள் இருவரும், திருந்தவில்லை. இதனால், ஷகிலாவை அனாதை இல்லத்தை விட்டு வெளியேறும்படி ஷீலா எலிசபெத் கூறினார்.

ஆனால், ஷகிலா அதற்கு மறுத்துவிட்டு, ஷிபா எலிசபெத்தை கொலை செய்வேன் என மிரட்டினார். இதனால், பயந்துபோன ஷீபா எலிசபெத், கடந்த 27-3-2006 அன்று, ஷகிலாவின் தந்தையை அனாதை இல்லத்திற்கு வரவழைத்து, நடந்த சம்பவங்களை கூறி, ஷகிலாவை தந்தையுடன் அனுப்பிவிட்டார்.

இதனால் வெங்கடேசன் ஆத்திரம் அடைந்தார். ஷீபா எலிசபெத்தை பழிவாங்க நினைத்தார். 28-3-2006 அன்று காலை 11 மணியளவில், ஷீபா எலிசபெத்தின் மகள் ரெபேக்கா சைக்கிள் ஓட்டி பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன், "எரியும் மெழுகுவர்த்தியை கையில் பிடித்துக்கொண்டே சைக்கிள் ஓட்டு பார்க்கலாம்'' என்று கேட்டார். களங்கமில்லாத சிறுமி ரெபேக்கா, கையில் எரியும் மெழுகுவர்த்தியை பிடித்துக்கொண்டே சைக்கிள் ஓட்டினார்.

அப்போது திடீர் என்று வெங்கடேசன், மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து, அவள் மீது பின்னால் சென்று ஊற்றி விட்டார். இதனால், ரெபேக்கா உடலில் தீ பற்றி எரிந்தது. அவள் அலறினாள். அவளது சத்தத்தை கேட்டு, ரெபேக்காவின் தம்பி சாமுவேல் ஓடி வந்தான். அவன் மீதும் வெங்கடேசன் மண்எண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றான். ஆனால் சிறுவன் சாமுவேல் லேசான தீக்காயத்துடன் தப்பி ஓடி விட்டான்.

தீக்காயம் அடைந்த இருவரையும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெபேக்கா இறந்து விட்டார். ரெபேக்கா சாகும் முன்பு, "வெங்கடேசன்தான் தன் மீது தீ வைத்தார்'' என்று நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தார்.

இந்த கொலைப்பற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனையும், ஷகிலாவையும் கைது செய்தனர். இருவர் மீதான வழக்கு, பூந்தமல்லி விரைவு நீதி மன்றம் எண் 3-ல் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்த நிலையில் வழக்கு நடைபெற்றபோது ஷகிலா ஜாமீனில் வெளியே வந்தார். 2008-ம் ஆண்டு ஜனவரியில், ஷகிலாவை அவரது கணவர் அருள் கொலை செய்துவிட்டார். இதனால், சிறுமி கொலை வழக்கில், வெங்கடேசன் மீது மட்டும் விசாரனை நடைப்பெற்றது. இவ்வழக்கில், சிறுவன் சாமுவேல், வெங்கடேசனுக்கு எதிராக சாட்சியளித்தான்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி அசோகன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:-

குழந்தை என்றும் பாராமல் இரக்கமில்லாமல் கொலை செய்த வெங்கடேசனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன், மேலும் இது போல சமுதாயத்தில் குற்றங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவே, இ.பி.கோ. 302 பிரிவின் கீழ், மரணதண்டனை விதிக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. எனவே இவருக்கு தூக்குதண்டனை விதிக்கிறேன். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.மோகன் ஆஜரானார்.

கொலை நகராகும் சென்னை : அதிர்ச்சி தகவல்.


சென்னை நகரில் கடந்த ஆண்டு மட்டும் 135 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு சென்னை நகரில் மட்டும் 135 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இது குறித்து காவல்துறை நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதம் 22 கொலைகளும், செப்டம்பர் மாதத்தில் 18 கொலைகளும் நடைபெற்றிருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, குடும்ப சண்டை, நிலப்பிரச்னை, தவறான நடத்தை போன்றவை, காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னையில் வந்து தங்கி இருப்பவர்களாலும் பிரச்னைகள் ஏற்பட்டு கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலை நாட்டு நாகரீக மோகம் சென்னை மக்களிடம் வெகுவாக அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாகவே, பாலியல் சம்பந்தமான கொலைச் சம்பவங்கள் சென்னையில் பெருகி வருவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் ஜோதி இன்று இந்தியா வருகை!

புதுதில்லி, ஏப். 16: வரலாறு காணாத பாதுகாப்புடன், ஒலிம்பிக் ஜோதி வியாழக்கிழமை இந்தியாவிற்கு எடுத்து வரப்படவுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி தொடங்கப்படவுள்ள ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஒலிம்பிக் ஜோதி உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

5 கண்டங்கள், 21 முக்கிய நகரங்கள், 1,37,000 கிலோ மீட்டர் தொலைவு கடக்கவுள்ள ஒலிம்பிக் ஜோதி, 130 நாள்கள் பயணமாகி, இறுதியாக போட்டி தொடங்கவுள்ள பெய்ஜிங் தேசிய ஸ்டேடியத்தில் ஏற்றப்படும்.

அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜோதி 72 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. இதன் எடை 985 கிராமாகும்.

கடும் தட்ப-வெப்பம், சூறாவளி காற்று, குறைந்த அழுத்தம் போன்ற எதையும் தாங்கிச் செல்லும் வகையில் ஒலிம்பிக் ஜோதி வடிவமைக்கப்பட்டுள்ளது அதன் சிறப்பம்சமாகும்.

இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதி இந்தியா வரும்பொழுது, அதன் தொடர் ஓட்டத்தில் 47 வீரர்கள் உட்பட 70 பேர் பங்கேற்கின்றனர்.

காங்கோவில் வீடு மீது விமானம் மோதியதில் 21 பேர் பலி.


ஆப்பிரிக்காவில் காங்கோ நாட்டில் இருந்து ஒரு விமானம் புறப்பட்டபோது, அது வீடுகள் மீது மோதியது. இதில் 21 பேர் பலியானார்கள். இறந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா, அல்லது வீடுகளில் வசித்தவர்களா? என்பது தெரியவில்லை.79 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஆப்பிரிக்காவில் உள்ளது காங்கோ நாடு. இந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கோமா நகரில் இருந்து ஒரு தனியார் விமானம் 7 சிப்பந்திகள் மற்றும் 79 பயணிகளுடன் புறப்பட்டது. இந்த விமானம் மத்திய காங்கோவில் உள்ள கிசன்கானி என்ற நகருக்கு புறப்பட்டது. அப்போது பலத்த மழை பெய்தது. ஓடுபாதையில் சென்ற விமானம் அதை விட்டு விலகி, எல்லைச்சுவரை இடித்துக்கொண்டு வெளியேறி, வீடுகள் மீது இடித்தது.இந்த விபத்தில் 21 பேர் பலியானார்கள். இவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்தவர்களா? அல்லது வீடுகளில் இருந்தவர்களா? என்பது தெரியவில்லை.55 பயணிகள் காயம்விமானத்தில் இருந்தவர்களில் 55 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அந்த நகரில் உள்ள 2 ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.விமானம் தரையை விட்டு உயரக் கிளம்பவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி ஆஸ்பத்திரிகளில் சேர்த்தோம் என்று விமானக் கம்பெனி டைரக்டர் டிர்க் கிராமர்ஸ் தெரிவித்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு எரிமலை ஒன்று வெடித்ததால், அதில் இருந்து கிளம்பிய எரிமலைக்குழம்பு விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் பாய்ந்ததால், விமானநிலையத்தின் ஓடுபாதையில் 3-ல் ஒரு பகுதி பாதிக்கப்பட்டு, பயனற்றுப்போய்விட்டது. இதனால் விமானங்கள் ஓடுபாதையில் ஓடி உயரக்கிளம்புவது சிரமமாக உள்ளது.டயர் வெடித்தது ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட விமானப் பயணிகளில் ஒருவர் நிருபர்களிடம் கூறுகையில், "விமானம் உயரக்கிளம்புவதற்காக வேகம் எடுத்தபோது, விமானத்தின் டயர்களில் ஒன்று வெடித்தது. விமானம் வீடுகள் மோதிய இடத்தில் கரும்புகை எழுந்தது. மக்கள் வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி தீயை அணைத்தனர்'' என்றார்.

காங்கோ நாட்டில் விமானப்பாதுகாப்பு மிகமோசமான அளவில் இருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்துக்கு சொந்தமான கம்பெனியை கடந்த வாரம்தான் ஐரோப்பிய ஒன்றியம் கறுப்பு பட்டியலில் சேர்த்தது. அந்த கம்பெனியின் விமானங்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு தடை விதித்தது.

தூத்துக்குடி மாநகராட்சி ஆகிறது, தமிழகத்தில் மாநகராட்சிகள் எண்ணிக்கை

சென்னை, ஏப்.17-தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றுடன் வேலூரும் மாநகராட்சியாக மாறும் என்று அறிவிக்கப்பட்டது.10-வது மாநகராட்சிஇப்போது தூத்துக்குடி நகராட்சியும் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக ஆகிறது. இதன் மூலம் மொத்த மாநகராட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருகிறது.

இது தொடர்பாக தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-இன்று மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தூத்துக்குடி நகரம் விளங்குகிறது. பெருகிவரும் தொழிற்சாலைகளாலும், வளர்ந்து வரும் துறைமுகத்தாலும், அமையவுள்ள சேது சமுத்திர கால்வாய் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளாலும், இந்நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமுள்ள கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்த வேண்டியுள்ளது. ஆகவே, தூத்துக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

பின்னர் மற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கான புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து, பள்ளிக் குழந்தைகள் உட்பட 44 பேர் பலி!




வதோதரா, ஏப்.17- குஜராத் மாநிலம் வதோதரா அருகில் நர்மதை ஆற்றுக்குள் அரசு பஸ் கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த 41 பள்ளிக் குழந்தைகள் உட்பட 44 பேர் பலியாகினர்.

60 அடி ஆழம்
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள தார்கோல் என்ற இடத்தில் இருந்து நேற்று காலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகளும் பயணம் செய்தனர். அனைவரும் தேர்வு எழுதுவதற்காக சென்று கொண்டு இருந்தனர். பொடேலி அருகே காலை 6.30 மணி அளவில் அந்த பஸ் வந்தது.

பொடேலி கிராமம் வழியாகத்தான், நர்மதை ஆற்றில் இருந்து சர்தார் சரோவர் அணைக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் பாலம் மீது பஸ் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 60 அடி ஆழத்துக்கு கீழே ஓடிக்கொண்டு இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது. அதனால் பஸ்சுக்குள் இருந்த பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளும் தண்ணீருக்குள் மூழ்கினர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் வதோதரா மாவட்ட கலெக்டர் விஜய் நெஹ்ரா, போலீஸ் சூப்பிரண்டு விஸ்வகர்மா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. மீட்பு பணிகள் வசதிக்காக சர்தார் சரோவர் அணைக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது.



ஆற்றுக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்த 44 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 41 பேர் பள்ளிக் குழந்தைகள். டிரைவர், கண்டக்டர் இருவரும் பலியாகி விட்டனர். இது தவிர, 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். ஆற்றுக்குள் மூழ்கி கிடந்த பஸ், கிரேன் மூலமாக வெளியே எடுக்கப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த முதல் மந்திரி நரேந்திர மோடி, பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். மேலும் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு லட்சம் நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிட்டார்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க 5 உறுப்பினர்களை கொண்ட உயர்மட்ட கமிட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிட்டியில் இரண்டு அரசு செயலாளர்கள் மற்றும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். விபத்து குறித்த அனைத்து தகவல் களையும் இந்த கமிட்டியினர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

லோக்சபா அஞ்சலி
இதற்கிடையே, பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான பொடேலி பள்ளியில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி குழந்தைகள் பயணம் செய்த அரசு பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த சம்பவம், குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவம், பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. நேற்று பாராளுமன்றம் கூடியதும், `குஜராத்தில் நர்மதை ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்ததால் பலியான பள்ளி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.

இந்து கடவுள்கள் அவமதிப்பு: நடிகர் சரவணன் படத்தின் தொடக்க விழாவுக்கு போலீஸ் தடை

இந்து கடவுள்கள் அவமதிப்பு: நடிகர் சரவணன் படத்தின் தொடக்க விழாவுக்கு போலீஸ் தடை

சென்னை: நடிகர் சரவணன் நடிக்கும் 'வணக்கம்மா' திரைப்படத்தின் தொடக்க விழா பூஜைக்கான அழைப்பிதழ்கள் மற்றும் போஸ்டர்கள் இந்துக் கடவுள்களை அவமதிப்பதாகக் கூறி இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இன்று நடைபெறவிருந்த அப்படத்தின் பூஜைக்கு போலீசார் தடை விதித்தனர்.


'வணக்கம்மா' என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள புதிய படத்தில் நடிகர் சரவணன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மதன்பாப், தியாகு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுவாதி என்ற புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.


இப்படத்துக்காக ராமன், அனுமன் வேடத்தில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழ்களும், போஸ்டர்களும் இந்து கடவுள்களை அவமதிப்பாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டினர்.


இந்நிலையில் இன்று இப்படத்தின் தொடக்க விழாவுக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொடக்க விழாவில் பங்கேற்க திரையுலக பிரபலங்கள் பலரும் அங்கு வந்தனர்.


இவ்விழாவைக் கண்டித்து இந்து முன்னணியினரும் அங்கு திரண்டதால் இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று படத்தின் தொடக்க விழாவுக்கு தடை விதித்தனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் ஹரிராம், கடவுள் பற்றி எந்த விமர்சனமும் படத்தில் இல்லை. யார் மனதையும் புண்படுத்தும் காட்சிகளும் படத்தில் இருக்காது என்றார்.





ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதி.

ஏப்ரல் 26-ம் தேதி ஒலிம்பிக் தீபம் ஜப்பான் வருகிறது. ஒலிம்பிக் தீப ஓட்டம் நகனோ நகரில் நடைபெறவுள்ளது.

ஒலிம்பிக் தீப ஓட்டத்தின்போது இடையூறு ஏற்படாமல் இருக்க ஜப்பான்  தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அன்று நடைபெறவிருந்த சிறப்பு நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதாக ஜப்பானிய அதிகாரிகள் கூறினர்.

இன்று (ஏப்ரல் 16-ம் தேதி) பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படும் ஒலிம்பிக் தீபம் ஏப்ரல் 17-ம் தேதி இந்தியாவுக்கு வரும். இந்த ஒலிம்பிக் தீபம் ஆகஸ்ட் 8-ம் தேதி சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்து சேரும்.  அன்று ஒலிம்பிக் துவக்க விழா  கோலாகலமாக நடைபெறும்

பிரியங்காவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது: கி.வீரமணி

பிரியங்காவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது: கி.வீரமணி


வேலூர் சிறையில் நளினியை சந்தித்து உரையாடிய பிரியங்காவின் மனிதநேயம் பாராட்டுக்குரியது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பகை எண்ணம், பழி உணர்வு, கோபம் ஆகியவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. இந்த உணர்வு என்னை ஆட்கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என நளினி சந்திப்பு குறித்து பிரியங்கா கூறியுள்ளதும், இதே கருத்தை ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளது அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்திட இந்திய அரசு முன்வர வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தவேண்டும். ராணுவ நடவடிக்கையால் இலங்கை பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது, அரசியல் தீர்வே உகந்தது என்பதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




இந்திய-ஈரான் குழாய் எரிவாயு திட்டம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் முரளி தியோரா.

ஈரான் குழாய் எரிவாயு திட்டம் தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஈரான் மற்றும் பாகிஸ்தானுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை கொண்டு வருவதற்கான கட்டணத்தை இறுதி செய்வதில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு இறுதியில் இது தொடர்பாக நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும் இந்தியா பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 23,24-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் துருக்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் இந்திய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் துறைச் செயலாளர் எம்.எஸ்.சீனீவாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ஈரான் எரிவாயு திட்டத்தில் சீனாவும் பங்கேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

Free Blog CounterLG