Monday, April 14, 2008

மாரத்தான் சிறுவன் பூடியா சிங்கின் பயிற்சியாளர் சுட்டுக் கொலை.

புவனேசுவரம், ஏப். 13: ஒரிசாவில் 65 கி.மீ. தொடர் ஓட்டமாக ஓடி சாதனை படைத்த ஆறு வயது சிறுவன் பூடியா சிங்கின் முன்னாள் பயிற்சியாளர் பிராஞ்சி தாஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜூடோ பயிற்சியாளராக இருந்த பிராஞ்சி தாஸ், புவனேசுவரத்தில் பிஜேபி கல்லூரி பகுதியில் அமைந்துள்ள ஜூடோ மையத்தில் பயிற்சியை முடித்துவிட்டு, தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த சிலர், பிராஞ்சி தாஸ் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் கழுத்து, இதயம் மற்றும் கால் பகுதியில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

2006-ம் ஆண்டு ஆறு வயது சிறுவன் பூடியா சிங்கின் திறமையைக் கண்டறிந்து அவனுக்கு பயிற்சி அளித்து புரியிலிருந்து புவனேஸ்வரம் வரை 65 கி.மீ. தொலைவை தொடர் ஓட்டமாக ஓடி சாதனை படைக்கச் செய்தார். அப்போது முதல் பிரபலமான அவர் மீது, குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுந்தன.

இந்நிலையில் அவரைச் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘கலைஞர் களஞ்சியம்': கலிபோர்னியா பல்கலை. வெளியீடு.

சென்னை, ஏப். 13: முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளின் தொகுப்பான ‘கலைஞர் களஞ்சியம்' என்ற நூலை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள தெற்காசிய ஆய்வு மையத்தின் ‘தமிழ் பீடம்' வெளியிட்டுள்ளது. இந்த நூலை சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் கருணாநிதியிடம் வழங்குகிறார்.

அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஏப். 15) மாலை 5 மணிக்கு இதற்கான விழா நடைபெற இருப்பதாக திமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக ஐஐடியின் நுழைவுத்தேர்வு

இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக ஐஐடியின் நுழைவுத்தேர்வு
இந்தியாவிற்கு வெளியே முதல் முறையாக துபாயில் இந்தியாவின் மிகப்பெரும் உயர்கல்வி நிறுவனமான ஐஐடியின் நுழைவுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 182 மாணவர்கள் பங்கேற்றனர்.

துபாயில் இந்நுழைவுத்தேர்வு இந்திய உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 5.5 மில்லியன் இந்திய மக்களின் தாயகமாக விளங்கும் வளைகுடாவில் சிபிஎஸ்இ அனுமதி பெற்ற பள்ளிகள் பல இயங்கி வருகின்றன.

கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை: இந்து மக்கள் கட்சி கண்டனம்

கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தடை விதிப்பதா? சித்திரை பிறப்பையொட்டி, இந்துக் கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். இந்தாண்டு பஞ்சாங்கம் படிக்க, தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக தடை விதித்துள்ளது. இதனால், பல கோயில்களில் பஞ்சாங்கம் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நாத்திக போக்கை கண்டிக்கிறோம்.
இருப்பினும், கோயில்களில் இந்து அமைப்புகளால் தடையை மீறி பஞ்சாங்கம் படிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் விரிவான செய்திக்கு.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080413105640&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

பொறியியல் பட்டதாரியா நீங்கள்?

பொறியியல் பட்டதாரியா நீங்கள்?

சென்னை, ஏப். 13: தமிழகத்தில் காலியாக உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு 2) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆட்டோமொபைல் பொறியியல் அல்லது அது தொடர்பான படிப்பைப் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தொழில்நுட்பப் பணியாளர்கள், இதர பணியாளர்களுக்கான காலியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படாமல் உள்ளன.
13ஆண்டுகளாக... சென்னை அயனாவரத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் 60 பேர் இருக்க வேண்டிய இடத்தில் 30 பேர் மட்டுமே உள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 7 பேர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2 பேர் மட்டுமே உள்ளனர். இதே நிலை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காணப்படுகிறது.
""1995-க்குப் பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணியாளர் நியமனம் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளில் ஊழியர்கள் ஓய்வு, பதவி உயர்வு என சென்றுவிட்ட நிலையில் தமிழக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன'' என்றார் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர்.
விரிவான செய்திக்கு

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080413140450&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=

கோல்கத்தா - டாக்கா ரயில் சேவை தொடங்கியது

கோல்கத்தா - டாக்கா இடையேயான மொய்த்ரி எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்கியது.பெங்காலி புத்தாண்டு தினத்தையொட்டி இன்று இச்சேவை தொடங்கியது.

கோல்கத்தா ரயில் நிலையத்தில் இன்று காலை 7.10 மணியளவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடி அசைத்து இந்த ரயில் சேவையை துவக்கி வைத்தார்.இந்த ரயில் சேவை துவக்க விழாவில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இந்த சேவை இயக்கப்படும்.இரவு 10.30 மணிக்கு டாக்கா சென்றடையும் இந்த ரயில், டாக்காவிலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கோல்கத்தாவுக்கு இரவு 9 மணிக்கு வந்தடையும்.

விழாவில் இந்த ரயில் சேவையை துவக்கி வைத்துப் பேசிய பிரணாப் முகர்ஜி, இந்த நிகழ்ச்சி தனது வாழ்வில் மறக்க முடியாத நினைவில்கொள்ளத்தக்க ஒன்று எனக் கூறினார்.

முன்னதாக கோல்கத்தா ரயில் நிலையத்திலிருந்து டாக்காவுக்கு புறப்பட்ட ரயில், நாடியா மாவட்டத்தில் நுழைந்தபோது தண்டவாளத்தில் அமர்ந்திருந்த ஒரு கும்பல் ரயிலை மறித்து, பங்காளதேஷ் அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும் என கோஷம் எழுப்பியது.இதனால் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸார் விரட்டியடித்தப் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.

நேபாள தேர்தல் : மாவோயிஸ்ட் 43 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி!

நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி முழுமையான ஜனநாயகத்திற்கு வித்திடும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவுள்ள தேச சட்டப் பேரவையை தேர்வு செய்யும் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

நேபாள தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 240 இடங்களில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 73 தொகுதிகளில் மாவோயிஸ்ட் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா தலைநகர் காட்மாண்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மாவோயிஸ்ட் கட்சி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் 240 ஆண்டுகளாக நீடித்த மன்னராட்சிக்கு முடிவுகட்டும் இத்தேர்தலில் மன்னராட்சிக்கு ஆதரவான கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. முடிவுகள் அனைத்தும் வெளிவருவதற்கு 10 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் மடு மற்றும் மாந்தை பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்


இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் சண்டைகளினால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தைச் சேர்ந்த மடு மற்றும் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து 6500 பாடசாலை மாணவர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வெள்ளாங்குளம் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

உயிலங்குளம் ஊடான மன்னார் மாவட்டத்தின் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திற்கான பாதை மூடப்பட்டிருப்பதனால், மன்னார் நகரில் அமைந்துள்ள அந்த மாவட்டத்தின் அரச செயலகத்திற்கும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையிலான நிர்வாக ரீதியிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரண உதவிச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் அரசாங்க அதிபர் நீக்கிலாஸ்பிள்ளை கூறுகின்றார்.

ஆசிரியப் பற்றாக்குறை, மாணவர்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச பாட நூல்கள் சென்று கிடைக்காமை போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இந்த மாணவர்கள் முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது குறித்த மேலதிக தகவல்களை எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.

மலேசிய பிரதமர் பதவி விலக வேண்டும் - முன்னாள் பிரதமர் மஹத்திர் மொகமத்


மலேசியாவில் செல்வாக்கு மிகுந்த முந்நாள் பிரதமர் மஹதிர் மொகமத் அவர்கள் தமக்கு அடுத்து பிரதமராக வந்த அப்துல்லா படாவி அவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.

அவர் உடன் பதவி விலகாமல் முன்னர் சொன்னது போல அடுத்தாண்டுத் தொடக்கம் வரை இழுத்தடித்தாரென்றால் பிரதான ஆளும் கட்சி இரண்டாக உடைந்து போகும் என்று முந்நாள் பிரதமர் மஹத்திர் மொகமத் எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம் நடந்த தேர்தலில் ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் என்றுமில்லாத அளவுக்குக் கண்ட தோல்விகளை அடுத்து பிரதமர் அப்துல்லா படாவியைக் கடுமையாக விமர்சித்து வருபவர்களில் முந்நாள் பிரதமரும் ஒருவர்.

தனக்கடுத்த பிரதமராக வர படாவியைத் தேர்ந்தெடுத்த மஹத்திர் அவர்களே இவ்வாறு அவரை இப்போது கடுமையாக விமர்சிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்யாவில் அதிகாரப் பகிர்வு அமைச்சரவை



கென்ய அதிபர் ம்வேய் கிபாக்கி அவர்கள் அதிகாரப் பகிர்வு அமைச்சரவையை அறிவித்துள்ளார். கூட்டரசின் அமைச்சரவை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து வாரக்கணக்கில் நடந்த பேரப்பேச்சுக்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
புதிய பிரதமாராகப் பதவியேற்கவுள்ள எதிரணித் தலைவர் ரைலா ஒடிங்கா சகிதம் அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து எழுந்த வன்முறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கென்யர்கள் பலியான பின்னணியில் இரண்டு தலைவர்களும் கடந்த பிப்ரவரியில் அதிகாரப்கிர்வுக்கு உடன்பாடு கண்டனர்.

ஜிம்பாப்வே தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு



ஜிம்பாப்வேவில் நடந்த பொதுத்தேர்தலின் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை எதிர்த்து வழக்குத் தொடரப்போவதாக அந்நாட்டின் பிரதான எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

23 தொகுதிகளின் வாக்குகளை மீண்டும் எண்ணும் படி தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. அடுத்த சனிக்கிழமை இது ஆரம்பமாகவுள்ளது.

ஒன்பது தொகுதிகளின் முடிவுகள் மாறினால் அதிபர் முகாபேயின் ஸானு பி எஃப் கட்சி இழந்த நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

அரசாங்கம் தேர்தல் முடிவுகளில் மோசடி செய்ய முயல்கிறது என பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் கூறுகிறது.

அதிபர் தேர்தலின் முடிவுகள் தேர்தல் நடந்து இரண்டு வாரங்களாகியும் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ம.தி.மு.க செயலாளர் வை.கோ அவர்கள் தமிழ் மக்கள் முன் சிறப்புரை நிகழ்த்தினார்




நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ம.தி.மு.க செயலாளர் திரு. வை.கோபாலசாமி அவர்கள் தமிழ் மக்கள் முன் சிறப்புரை நிகழ்த்தினார்


திடிரென ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டத்தில் மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தமிழீழப் போராட்டம் பற்றி உணர்வுடன் பேசினார்
அடிக்கடி மக்களின் கைதட்டலுக்கு மத்தியில் சுமார் ஒரு மணி நேரம் தென்னாபிரிக்கா, இஸ்ரேல் , கொசோவா விடுதலை பற்றியும் ஆழ்ந்த உரை நிகழ்த்தினார்.


தமிழீழம் கனவல்ல விரைவில் மலரும் எனக்கூறிய வை.கோ உலகெங்கம் பரந்து வாழும் புலம் பெயர் தமிழ் மக்களின் வரலாற்று கடமை பற்றி கூறுகையில் வாழ்நதோம் செத்தோம் என வாழ்ந்து விட்டு போகாமல் அனைவரும் தம்மால் ஆன பங்களிப்பை செய்யும்படியும் வலியுறுத்தினார்.


தம்பி பிராபாகரன் எந்த ஒரு நாட்டின் உதவியும் இன்றி விரல்விட்டு எண்ணகக்கூடிய போராளிகளுடன் ஆரமபித்து இன்று உலகம் வியக்கத்தக்க வகையில் போரட்டத்தை வழிநடத்தி செல்கின்றார்.


மேலும் எந்த ஒரு விடுதலை இயக்க தலைவர்களுடனும் ஒப்பிட முடியாதளவிற்கு அற்புதமான தலைவர் தம்பி பிரபாகரன் என தன் மதிப்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொண்டார்.





பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு புதிய பெயர் -முதல்வர் கலைஞர் உத்தரவு.

சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்துக்கு 'சவுந்திர பாண்டியனார் அங்காடி காவல் நிலையம்' என்ற புதிய பெயரை வைக்க வேண்டும் என்று முதல்வர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தின் பெயர்ப் பலகை மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கே.கே. நகர் காவல்நிலையம் என்று இருப்பதை இனி கலைஞர் கருணாநிதி நகர் காவல் நிலையம் என்று அழைக்கும்படி மாநகரக் காவல் துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், தி.நகர். துணை ஆணையாளர் அலுவலகம், தி.நகர் உதவி ஆணையாளர் அலுவலகம் என்று அழைக்கப்பட்டவை தியாகராயர் நகர் துணை ஆணையர் அலுவலகம், தியாகராயர் நகர் உதவி ஆணையர் அலுவலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு.

நாடு முழுவதும் உள்ள கிராம பள்ளிகளில் மேல் நிலைப் படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகள் ஒரு லட்சம் பேருக்கு பாரத ஸ்டேட் வங்கி தலா ரூ. 1001 ரொக்கப் பரிசு வழங்கும் என அவ்வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலகச் சுற்றுக்கு இந்தியா தகுதி.

டெல்லி: ஜப்பானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் ஜோடி அபார வெற்றி பெற்றதன் மூலம் டேவிஸ் கோப்பை உலக குரூப் தகுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஜப்பானுக்கு எதிரான ஆசிய ஓஸியானியா மண்டல 2வது சுற்று தகுதிப் போட்டி டெல்லியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் சுற்றில் போஹன் போபண்ணாவும், பிரகாஷ் அமிர்தராஜும் வெற்றிபெற்று இந்தியாவுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

நேற்று நடந்த இரட்டையர் போட்டியில் ஜப்பானின் சட்டோஷி இவாபுச்சி- தாகௌகஸூகி ஜோடியை எதிர்த்து இந்தியாவின் நட்சத்திர ஜோடியான லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடி விளையாடியது.சமீப காலமாக இருவரும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வருகின்றனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தங்களது தனிப்பட்ட பூசல்களை மறந்து விட்டு அபாரமாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை 7-6(2), 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பயஸ்-பூபதி ஜோடி வெற்றி பெற்றது. இதையடுத்து 3-0 என்ற கணக்கில் ஜப்பானைத் தோற்கடித்து உலகத் தகுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பரில் அப்போட்டி நடைபெறும்.2 ஆண்டுகளுக்குப் பின் இந்த தகுதியை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயஸ்-பூபதி இடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் நேற்றைய விளையாட்டில் ஒற்றுமையுடன் செயல்பட்டவிதம், இனி தொடர்ந்து இந்த ஜோடி நீடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும், இந்த போட்டிக்கு முந்தைய நாளில் மகேஷ்பூபதியை பற்றி பயஸ் கூறிய கருத்து சர்ச்சையை எழுப்பியதால் நேற்றைய போட்டியில் பயஸ்-பூபதி ஜோடிக்குள் மாற்றங்கள் தென்படலாம் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

கடந்த 2006ம் ஆண்டில் நடந்த தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் கடைசியாக இருவரும் ஜோடியாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பு - பலர் ஓட்டம்!

நெல்லை: தூத்துக்குடியின் பிரபல தாதாக்கள் ஜெயக்குமாரும், கவிக்குமாரும் சென்னையில் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், நெல்லையில் ரவுடிகளின் பட்டியைல போலீஸார் தூசு தட்டி எடுத்து வருகின்றனர். இதனால் என்கெளன்டருக்குப் பயந்து பல ரவுடிகள் தலைமறைவாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டி வருவதை அடுத்து ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரித்து அவர்களின் செயல்பாடுகளை போலீசார் கண்காணிக்க தொடங்கினர்.

ஆள் கடத்தல், கட்ட பஞ்சாயத்து, கூலிப்படையாக செயல்படுபவர்கள், போதை பொருட்கள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை கடத்துபவர்கள் போன்றவற்றில் ஈடுபடுவோரை சுட்டு பிடிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலும் போலீசார் ரவுடிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். நெல்லையில் பிடிபட்ட கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல ரவுடி செந்திலும் கூலிப்படையாக செயல்பட்டு 10க்கும் மேற்பட்ட கொலைகளை செய்துள்ளார். மாவட்டத்தில் நடந்த கொலைகளிலும் கூலிப்படையினரின் பங்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.பணத்துக்காக கொலை செய்யும் கூலிபடையை சேர்ந்த ரவுடிகள் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் புதிய குற்றவாளியாக இருப்பதால் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

சிலர் பழைய குற்றவாளிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டு தங்களது பகுதியை விட்டு வேறு பகுதிக்கு சென்று குற்றச் செயல்களின் ஈடுபடுகின்றனர். இவ்வாறு பணத்துக்காக கொலை செய்யும் கூலிப்படையினரை தனியாக அடையாளம் காண டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து கூலிப்படையினர் பட்டியலை போலீசார் ரகசியமாக தயாரித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தாங்கள் என்கெளன்டர் மூலம் போட்டுத் தள்ளப்படுவோமோ என்று பயந்து பல பிரபல ரவுடிகள் பதுங்க ஆரம்பித்துள்ளனர். பலர் மாவட்டத்தை விட்டே இடம் பெயர்ந்து வேறு இடங்ளுக்கு ஓடி வருகின்றனராம்.

Free Blog CounterLG