Saturday, April 12, 2008

மியன்மாரில் ஜனநாயகம் அதிபர் புஷ் ஏமாற்றம்.

மியன்மாரின் புதிய அரசியல் சட்டச் சீர்திருத்தத்திற்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறும். மியன்மார் இராணுவ அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்படவுள்ள இந்தச் சட்டச் சீர்திருத்தத்தை ஜனநாயக ஆதரவாளர்கள் நிராகரித்துள்ளனர்.

தொடர்ந்து இராணுவ ஆட்சியை அமைத்துக் கொள்ளும் வகையிலேயே இந்தப் புதிய அரசியல் சட்டச் சீர்திருத்தம் வரையப்பட்டுள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், வரும் 2010ஆம் ஆண்டு ஜனநாயக முறையிலான தேர்தல் நடைபெறுவதற்கு இந்த அரசியல் சட்டச் சீர்திருத்தம் வழிவகுக்கும் என்று இராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். என்றாலும் தற்போது வீட்டுக் காவலில் உள்ள சமாதானத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளரும் மியன்மார் ஜனநாயகக் கட்சியின் தலைவியுமான ஆங் சாங் சூகி 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்தப் புதிய அரசியல் சட்டம் தடை விதித்து இருக்கிறது.

இதன் மூலம் தங்களது முதன்மையான எதிரியை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் திட்டத்தை இராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்டிருப்பதாக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக, அமெரிக்க அதிபர் புஷ், மியன்மாரில் ஜனநாயக நடைமுறைகள் குறித்துத் தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் வெளிப்படையான போக்கைக் கடைப்பிடிக்கும்படியும் ஜனநாயக முயற்சிகளுக்கு விடைகாணும்படியும் இராணுவ ஆட்சியாளர்களை புஷ் கேட்டுக் கொண்டார்.

மே மாதம் 10ஆம் தேதி அரசியல் சட்டச் சீர்திருத்த வாக்கெடுப்பு நடைபெறும் என்று இராணுவ ஆட்சியாளர் அறிவித்திருந்தாலும் அதில் வாக்களிக்கத் தகுதியுள்ள வாக்காளர் பட்டியல், வாக்களிப்பு நிலையங்கள் அமையவுள்ள இடங்கள் உட்பட தேர்தலைப் பற்றிய முக்கியமான எந்தவொரு தகவலையும் இதுவரைக்கும் வெளியிடவில்லை.

தேர்தல் பொறுப்பாண்மைக் குழுத் தலைவர் ஆங் டோ நேற்று இந்த வாக்கெடுப்பு குறித்து தொலைக் காட்சியில் அறிவித்தபோது, இரண்டே இரண்டு வரிகளில் மட்டுமே அதனைக் குறிப்பிட்டதாகவும் நைபிடாவ் என்னும் நகரில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் இந்த தேதி முடிவு செய்யப்பட்ட தாகவும் அறிவித்தார்.

இதற்கிடையே, அரசியல் சட்டச் சீர்திருத்தத்தை நிராகரிக்கும்படி மியன்மார் மக்களை கேட்டுக் கொண்ட ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (என்எல்டி) கட்சி 194 பக்கங்களைக் கொண்ட அந்த உத்தேசச் சட்டச் சீர்திருத்தத்தை வாக்காளர்கள் முழுமையாக படித்துத் தெரிந்து கொள்வதற்கு மிகக் குறுகிய கால அவகாசத்தைத் தருவதற்குரிய வகையிலேயே வாக்கெடுப்புக்குரிய நாளை இராணுவ ஆட்சியாளர் அறிவித்திருப்பதாகக் குற்றம் சாட்டியது.

நேற்று தான் சட்டச் சீர்திருத்த நகல் வெளியிடப்பட்டது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில்தான் அது வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க நூல் நிலையங்களின் விற்பனைக்காக மிகவும் குறைந்த அளவில்தான் அந்த சட்டத் திருத்த நகல்கள் இருப்பதாக என்எல்டி குறை கூறியுள்ளது.

நேற்று முதல் விற்பனைக்கு அந்த சட்ட நகல் வந்திருப்பதால் அதனை வாங்கிப் படித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குரிய கால இடைவெளி மக்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது என்று என்எல்டி கட்சியின் பேச்சாளர் சொன்னார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு நாணயமாற்றுக்காரர்களின் 1.5 மில்லியன் வெள்ளி பணத்தை அபகரித்துச் சென்றதையடுத்து அங்கு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.ஆயுதம் ஏந்திய போலிசார் அங்கு 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக போலிஸ் படைத் தலைவர் மூசா ஹசான் கூறினார்.கோலாலம்பூர் விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவே இந்த ஏற்பாடுகள் என்று அவர் கூறியதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தகவல் கூறியது.பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விமான நிலையத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியமிருப்பதாக மலேசிய துணைப் பிரதமர் நஜீப் கூறினார்.

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து டாக்கா புறப்பட்ட ஒரு விமானத்தில் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவர் கத்தியுடன் ஏறியதைக் கவனிக்கத் தவறியது தொடர்பில் விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் டீ கியட் கூறினார்.

குசேலனில் கமல்?

இணைந்து நடிப்பதில்லை என்பதில் இருவரும் உறுதியாக இருக்கிறார்கள். இருந்தும் அவ்வப்போது, கமலும் ரஜினியும் இணைகிறார்கள் என்ற காஸிப் கசிந்து கொண்டுதான் இருக்கிறது!

இதோ மீண்டும் ஒருமுறை! குசேலனில் குஷ்பு, சினேகா, பிரபு, த்ரிஷா ஆகியோர் நடிகர்களாகவே நடித்துள்ளனர். அவர்களைப் போல் கமலும் ஒரு காட்சியில் தோன்றுகிறார். இதற்காக குசேலன் படக்குழு அவரிடம் பேசியுள்ளது என்று பரபரப்பு தகவல். ஆனால், இது குறித்து பி. வாசுவோ, கதவிதாலயாவோ, ரஜினியோ இதுவரை ஏதும் கூறவில்லை.

இந்த செய்தி உண்மையானால் இளமை ஊஞ்சூலாடுகிறது படத்தில் பிரிந்த இருபெரும் நடிகர்களை ஒன்றிணைத்த பெருமை குசேலனுக்கு கிடைக்கும்

இட ஒதுக்கீடு தீர்ப்பு: எய்ம்ஸ் டாக்டர்கள் எதிர்ப்பு.

உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு புதுடெல்லியில் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவர்கள் சங்கத் தலைவர் குமார் ஹர்ஷ் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதிர்வரும் சந்ததியினருக்கும் பெரும் இன்னல்களை விளைவிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதன்மூலம் உயர்கல்வி மிகவும் பலவீனமடையும் என்றார். ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது முதலில் எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடமை தவறிய காவல் துணை ஆய்வாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பனாஜி, ஏப்.12- கோவாவில் கடற்கரை நகரம் ஒன்றில் பிரிட்டன் நாட்டுச் சுற்றுலாப் பயணியான ஸ்கார்லெட் கிலிங் எனும் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சட் டப்படி நடவடிக்கை எடுக்காத காவல் துணை ஆய்வாளர் நெர்லன் ஆல்புகர்க் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.பதவியில் தவறு, செய்த மைக்காக இடைக்காலப் பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்த இவர் பதவியை விட்டே நீக்கப்பட்டார். இதற்கான ஆணையை முதலமைச்சர் பிறப்பித்தார். இந்தத் தண் டனையை காவல் நிருவாக வாரியம் பரிந்துரைத்துள்ளது.

குவைத்: இந்தியர் பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை.

துபாய்: குவைத் நாட்டில் பெருகி வரும் இந்தியர் உள்ளிட்ட அன்னிய தொழிலாளர் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திற்கு முக்கிய அரசியல் பிரமுகர் அறிவுரை கூறியுள்ளார்.
குவைத் தேசிய தேர்தல் வரும் மே மாதம் 17ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள சாத் அல்-கான்ஃபோர் என்ற முக்கிய அரசியல் பிரமுகர், குவைத்தில் பெருகிவரும் அன்னியத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறுகையில், குவைத் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 30 லட்சம் ஆகும். இதில் ஆறில் ஒரு பங்கு இந்தியர்கள். மொத்தம் 5,32,000 இந்தியர்களும், 2,51,000 வங்கதேசத்தினரும் வசிக்கின்றனர்.

குவைத் மக்கள் தொகையில் 64 சதவீதத்தினர் அன்னிய தேசத் தொழிலாளர்கள். இந்தளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் தேவையில்லை. இதில் 12 சதவீதம் பேர்தான் உயர்கல்வித் திறன் உள்ளவர்கள். மற்றவர்கள் கீழ்மட்டத் தொழிலாளர்கள்.கீழ்மட்டத் தொழிலாளர்களால் நாட்டில் வீணாக தொற்றுநோய் ஏற்படும் அபாயம்தான் உண்டாகும். அதேபோல் திருமணமாகாத அன்னிய தொழிலாளர் பெருக்கத்தால் ஒருநாள் நிச்சயம் கேடுவிளையத்தான் போகிறது. எனவே இந்தப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த குவைத் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

குவைத்தின் பொருளாதாரமே பெட்ரோலியத்தையும் வெளிநாட்டுத் தொழிலாளர்களையும் தான் முழுக்க முழுக்க சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரவுடிகள் உடல் தூத்துக்குடியில் அடக்கம்

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு ரவுடிகளின் உடல்கள், அவர்களின் சொந்த ஊரான தூத்துக்குடியில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

அயனாவரத்தில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட ஜெயக்குமார் மற்றும் சுடலைமணியின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்குப் பின் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் இன்று பகல் தூத்துக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.

ஜெயக்குமாரின் உடலை அவரது மனைவி பிரிஸில்லா பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது உடல் தூத்துக்குடி கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல் சுடலை மணியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி அஞ்சலிக்குப் பின் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் மற்றும் சுடலை ஆகியோர் சென்னை அயனாவரம் கிராமணி தெருவில் பதுங்கியிருந்தனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினரை இரு ரவுடிகளும் தாக்க முயறனர். இதையடுத்து என்கவுண்டரில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கான்பூர் டெஸ்ட்: இந்தியா-288/9

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின், 2ம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்துள்ளது. கங்குலி 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இன்றைய 2ம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் 2 துவக்க வீரர்களின் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், நடுக்கள ஆட்டக்காரர்களின் பங்களிப்பால், தென்ஆப்ரிக்கா எடுத்த 265 ரன்களை இந்திய அணி இன்று கடந்தது.

இன்றைய ஆட்டத்தில் இக்கட்டான நிலையில் களமிறங்கிய சவுரவ் கங்குலி, தனது 33வது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது பொறுப்பாக ஆட்டத்தால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. எனினும் 87 ரன் எடுத்த நிலையில் ஸ்டெய்ன் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

லட்சுமண் 50 ரன், யுவராஜ், கேப்டன் தோனி தலா 32 ரன், டிராவிட் 29 ரன் எடுத்தனர். இன்றைய ஆட்டம் முடிவில் இந்திய அணி, தென்ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் எடுத்த 265 ரன்களை விட 23 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்ரீசாந்த் 9 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

தென்ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெய்ன், மோர்கல் தலா 3 விக்கெட், ஹாரிஸ் 2 விக்கெட், நிடினி ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்களை இழந்துள்ளதால், நாளைய 3ம் நாள் ஆட்டத்தில் விரைவில் ஆட்டமிழக்கும் எனத் தெரிகிறது. இந்நிலையில், இப்போட்டியில் இன்னும் 3 நாள் மீதமுள்ளதால் நிச்சயமாக முடிவு தெரியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சித்திரை பிறப்பு: தலைவர்கள் வாழ்த்து

சித்திரை மாத பிறப்பை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஆண்டுகளில் 23வது ஆண்டான சர்வதாரி வருடம், ஏப்ரல் 13ம் தேதியன்று பிறக்கிறது. சித்திரை திங்கள் பிறப்பதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில், தமிழகம் சுடர் விட்டு பிரகாசிக்கவும், ஏழை எளிய மக்கள் இன்புற வாழவும், மக்களாட்சியின் உன்னதத் தன்மைகள் மலர்ந்து மணம் வீசிடவும் இந்நாளில் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதாரி ஆண்டில் ஆனந்தமும், குதூகுலமும் தமிழர்கள் மனதில் பூத்துக் குலுங்க வேண்டும் என்று அவர் வாழ்த்தி உள்ளார்.

மதிமுக பொதுச் செய்லாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தனது வாழ்த்தில், இப்புத்தாண்டில் மக்களின் வாழ்வில் வறுமையும், அறியாமையும் அகன்று அனைவரது வாழ்விலும், வளமும் நலமும் பெருக வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

இதேபோல் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பலரும் சித்திரைத் திங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்கொலைப் படை தாக்குதலில் 2 இந்தியர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானி்ல் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியர்கள் இருவர் பலியாயினர்.

ஆப்கானி்ஸ்தானில் செராஞ் என்ற இடத்திலிருந்து பாகி்ஸ்தான் எல்லையான டெலாராம் வரை 300 கி.மீ. நீள நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் இந்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் அமைப்பு ஈடுபட்டுள்ளது.

இந்தப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆப்கானி்ஸ்தான் தென் பகுதியில் உள்ள நிம்ரோஸ் என்ற இடத்தில் இந்திய தொழிலாளர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது குண்டுகள் நிரப்பப்பட்ட டயோடா கரோலா கார் மோதி வெடித்துச் சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த தற்கொலைப் படை தீவிரவாதியும், இந்தியத் தொழிலாளர்கள் இருவரும், மேலும் ஆப்கானியர் ஒருவரும் பலியாயினர்.மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

சானியாவுக்கு அறுவை சிகிச்சை

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு அமெரிக்காவின் மியாமி நகரில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

வலது மணிக்கட்டில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக சானியா அவதிப்பட்டு வருகிறார். இதனால், கடந்த வாரம் நடைபெற்ற டபிள்யூ. டி. ஏ. டென்னிஸ் போட்டியில் அவர் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அமெரிக்காவின் மியாமி நகரில் அறுவைச்சிகிச்சை நடைபெறவுள்ளது. இதையடுத்து நான்கு மாதம் அவர் ஓய்வு எடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

ஐநாவில் இந்தியருக்கு முக்கிய பதவி

ஐநா சபையின் ஐநா வளர்ச்சி திட்ட உதவி பொதுச் செயலாளராக இந்தியாவை சேர்ந்த அஜய் சிப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தி குழுவின் இயக்குனராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது.உலக வங்கி அதிகாரியாக கடந்த 25 ஆண்டுகள் பணியாற்றிய சிப்பர், திட்டக்குழுவிலும் பணியாற்றியுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் அவர் பொருளாதார விரிவுரையாளராகவும் இருந்துள்ளார்.உலக வங்கியின் வியட்நாம் கிளை இயக்குனராக அவர் தற்போது பணியாற்றி வருகிறார். பல்வேறு ஆய்வுப் பணிகளை அவர் உலக வங்கிக்காக மேற்கொண்டுள்ளார். இதனிடையே ஐநா மகளிர் மேம்பாட்டு நிதியத்தின் செயல் இயக்குனராக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இன்ஸ் அல்பெர்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாட்டியை கொன்ற பேரன்

கோலாபூர், ஏப். 11: ஆபாச சிடி பார்க்க அனுமதி அளிக்க பாட்டி மறுத்ததால் அவரது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.மகராஷ்டிர மாநிலம் கோலாபூரைச் சேர்ந்தவன் அபிஷேக் படேல். 21 வயதாகும் இவன் இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்து வருகிறான்.

சமீபத்தில் இவனது பாட்டி சாந்தாபாய் (வயது 67) அபிஷேக் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அபிஷேக் ஆபாச சிடியில் படம் பார்க்க அனுமதி மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் பாட்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளான். மேலும் தனது தம்பி வீரேன்னையும் தாக்கிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதன் தம்பியை தாக்கிவிட்டு பாட்டியை கொலை செய்து விட்டதாக நாடகமாடியுள்ளான்.

அபிஷேக்கின் பேச்சில் சந்தேகம் கொண்ட போலீசார் அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அபிஷேக்கை கைது செய்து அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பசுமை விமான நிலையம்!

சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் பசுமை விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்று சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையை இன்று சட்டசபையில் தாக்கல் செய்த அமைச்சர் கே.என்.நேரு, கொள்கை விளக்க குறிப்பில் கூறியதாவது: சென்னையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளதால் சென்னை விமான நிலையத்தை நவீன படுத்தவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான 1,069.99 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையம் நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.1,800 கோடி செலவிட திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் 2010 ஆம் ஆண்டில் முடியுமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய பசுமை விமான நிலையம் ஒன்றை ஸ்ரீபெரும்புதூரில் அமைப்பதற்கான வாய்ப்பு குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமர்ப்பித்துள்ள பெருந்திட்டத்தின் கீழ், அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தேவையை கையாள்வதற்கு கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கும் திட்டத்திற்கு தேவையான நிலங்களை வழங்குவதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

சென்னையில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

சென்னை 11 April , சென்னை அயனாவரத்தில் காவல்துறையினரை தாக்‌கிய இரண்டு ரவுடிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் மற்றும் சுடலை என்ற இரு ரவுடிகள், சென்னை அயனாவரம் கிராமணி தெருவில் பதுங்கியிருந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்த முற்பட்டபோது, அவர்கள் மீது ரவுடிகள் இருவரும் அரிவாளால் தாக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் எச்சரிக்கும் வகையில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து செ‌ன்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னை நகரில் பகல் நேரத்தில் நடந்துள்ள இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்தில் வேகமாக வளரும் ஐ.டி. துறை

எகிப்து நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அந்நாட்டில் ஐ.டி. குறித்த விழிப்புணர்வு மேம்பட்டு வருவதால், இந்திய நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அங்கு நிறுவி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.இந்திய நிறுவனங்களுக்கு தாங்கள் கூடுதல் சலுகைகளை அளித்து வருவதாகவும், அவற்றுக்குத் தேவையான உலகளாவிய வசதிகளை அமைத்து எகிப்தில் தங்கள் அலுவலகங்களை அமைக்க உதவி வருவதாகவும் அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவன வாரிய உறுப்பினர் அமின் கைரால்டின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும், எகிப்தும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருமித்த வகையில் செயல்படுவதாகவும், இதனால் ஐ.டி. துறையில் பல்வேறு வளர்ச்சியைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் எகிப்தில் தகவல்-தொழில்நுட்பத் துறை சிறப்பான வகையில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்திய நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்

நேபாளத்தில் மசூதி மீது குண்டு வீச்சு: தொழுகைக்கு வந்த 2 பேர் பலி

நேபாளத்தில் மசூதி மீதி குண்டு வீசப்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். பதட்ட நிலை காரணமாக சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து தென் கிழக்கே 125 மைல் தொலைவில் உள்ளது பிரசாத் நகர். பிரதமர் கிரிஜா பிரசாத் கெய்ராலாவின் சொந்த ஊர் இது.

பல்வேறு மதத்தினரும் பல்வேறு இனத்தவர்களும் வெளிநாட்டவர்களும் இங்கு வசிக்கிறார்கள்.மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் கூட இங்கு இல்லை. இந்த நிலையில் இங்குள்ள மசூதி அருகே 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மசூதி மீது வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு வந்தவர்களில் 2 பேர் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.இந்த தாக்குதலை தொடர்ந்து பிரசாத் நகரில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. பதட்ட நிலை காரணமாக இந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்த பகுதி இந்தியாவில் எல்லை பகுதியை ஒட்டியுள்ளது

ஆந்திரா, கர்நாடகாவிலும் அரிசி கிலோ 2 ரூபாய்

உலகில் அரிசி இருப்பு குறைகிறது; இன்னும் மூன்று மாதங்களில் பஞ்சம் வரும் ஆபத்து இருக்கிறது என்று ஐநா அமைப்பு அபாய சங்கு ஊதி இருக்கிறது என்ற போதிலும் இந்தியாவில் இரண்டு ருபாய்க்கு கிலோ அரிசி திட்டம் மேலும் இரண்டு மாநிலங்களில் அமலாகிறது. தமிழ்நாட்டில் 2006 சட்ட மன்றத் தேர்தலின்போது, திமுக அறிவித்த இரண்டு ரூபாய் அரிசித் திட்டத்தை அந்தக் கட்சியின் கொள்கைக் கூட்டணி பங்காளியான காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தின் தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளது.

அதோடு திமுகவைப் போலவே இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கப் போவதாகவும் கர்நாடகக் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

கர்நாடகத்தில் மே மாதம் மூன்று கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இதில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.கர்நாடகம் இப்படி எனில் காங்கிரஸ் ஆட்சி புரியும் பக்கத்து ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை மாநிலத்தின் முதல்வர் புதன் கிழமையன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் திமுக அறிவித்த இரண்டு ரூபாய் அரிசி உள்ளிட்ட பல இலவசத் திட்டங்கள் காரணமாக அந்தக் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து இப்போது இந்தியாவில் அரிசி அரசியல் முக்கிய இடத்தைப் பெற்றுவருகிறது.

உலகில் அரிசி உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. அண்மையில் இந்தியா அரிசி ஏற்றுமதிக்குத் தடைவிதித்தது குறிப்பிடத்தக்கது

சிங்கள மீனவர்கள் 10 பேரை தமிழக மீனவர்கள் சென்னைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்க முயன்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே கடலில் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலைத் தொடர்ந்து 10 சிங்கள மீனவர்களை சென்னை மீனவர்கள் சிறைபிடித்து அவர்களை சென்னை காசி மேடு மீனவர் துறைமுகத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தமிழக காவல் துறை தெரிவித்திருக்கிறது.

சிங்கள மீனவர்கள் வந்த இரண்டு படகுகளும் தமிழக மீனவர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மோதலில் சிங்கள மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல் துறை கூறுகிறது. மீனவளத் துறை அதிகாரிகளால் சிங்கள மீனவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொள்ளை-மலேசியாவில்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் கொள்ளையர் கூட்டம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அந்தக் கொள்ளைக் கும்பல் 10 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியது. மின்னல் வேகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் விமான நிலையம் பெரும் பரபரப்பில் மூழ்கியது. பரபரப்பான கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று (10-04-2008) காலை நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தால் விமான நிலையம் அல்லோகல்லப்பட்டுப் போனது. அந்நியச் செலாவணி மாற்று நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 2 பேர் ஒரு பை நிறைய பணத்துடன் (10 லட்சம் அமெரிக்க டாலர்) கோலாலம்பூர் விமான நிலையத்தின் 8வது நுழைவாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக 2 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வந்தனர். அப்போது 6 கொள்ளையர்கள் ஒரு பிஎம்டபிள்யூ காரில் அங்கு மின்னல் வேகத்தில் வந்திறங்கினர். காரிலிருந்து இறங்கிய கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த தானியங்கி பிஸ்டல் மூலம் பணம் கொண்டு சென்றவர்களின் கால்களில் சுட்டனர். உடன் வந்த காவலர்களையும் அவர்கள் சுட்டனர்.இதனால் காயமடைந்த நான்கு பேரும் கீழே விழுந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பணப் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அப்போது வழியில் நின்றிருந்த நேபாள நாட்டுத் தொழிலாளர் உள்பட மேலும் இரண்டு பேரையும் சுட்டு விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

மூன்றே நிமிடத்தில் இந்த துணிகர கொள்ளை நடந்து முடிந்தது. கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு பெண்மணி உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் பண நிறுவன ஊழியர்களும், காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை

Free Blog CounterLG