Saturday, April 12, 2008

சித்திரை பிறப்பு: தலைவர்கள் வாழ்த்து

சித்திரை மாத பிறப்பை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஆண்டுகளில் 23வது ஆண்டான சர்வதாரி வருடம், ஏப்ரல் 13ம் தேதியன்று பிறக்கிறது. சித்திரை திங்கள் பிறப்பதை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில், தமிழகம் சுடர் விட்டு பிரகாசிக்கவும், ஏழை எளிய மக்கள் இன்புற வாழவும், மக்களாட்சியின் உன்னதத் தன்மைகள் மலர்ந்து மணம் வீசிடவும் இந்நாளில் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதாரி ஆண்டில் ஆனந்தமும், குதூகுலமும் தமிழர்கள் மனதில் பூத்துக் குலுங்க வேண்டும் என்று அவர் வாழ்த்தி உள்ளார்.

மதிமுக பொதுச் செய்லாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மழையும், குளிரும், பனியும் மறைந்து மஞ்சள் வெயில் கண்டு உயிரினங்கள் கொஞ்சிக் குதூகலிக்க வையகம் சிலிர்க்கும் இளவேனிலின் வருகைக்குக் கட்டியம் கூறி இத்தரை மகிழ்ந்திட சித்திரை மலர்ந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தனது வாழ்த்தில், இப்புத்தாண்டில் மக்களின் வாழ்வில் வறுமையும், அறியாமையும் அகன்று அனைவரது வாழ்விலும், வளமும் நலமும் பெருக வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

இதேபோல் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பலரும் சித்திரைத் திங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG