Friday, April 25, 2008

சுனாமி தாக்கினாலும் சேது சமுத்திரக் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது - மத்திய அரசு

சுனாமி தாக்கினாலும் சேது சமுத்திரக் கால்வாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.


மக்களவையில் 23 ஆம் தேதி கேள்வி நேரத்தின்போது சுற்றுப்புறச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் நாராயண் மீனா கூறியது:

சுனாமி தாக்குதல் பற்றி சென்னையில் உள்ள தேசிய கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில், சுனாமி ஏற்பட்டால் கடற்கரைப் பகுதிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. சேது சமுத்திரக் கால்வாய் அமைந் துள்ள பகுதியில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தெரி வித்துள்ளது. இதை ஜப்பானில் உள்ள தேசிய தொழிற்சாலை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டு நிறுவனமும் உறுதிபடுத்தியுள்ளது. சேது சமுத்திரத் திட்டம் அமையும் பகுதியில் சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு பற்றி நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுப்புறச் சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தான் இந்தத் திட்டத்தால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அரசு தெரிவித்தது. இவ்வாறு நாராயண் மீனா கூறினார்.

இரண்டு சிம்கார்டு பி.எஸ்.என்.எல்.லின் புதிய திட்டம்

பி.எஸ்.என்.எல். சென்னை வட்டம் சார்பில் இரண்டு சிம்கார்டு வழங்கும் பி.எஸ்.என்.எல். ஜோடி என்ற புதிய திட்டம் ஏப். 23 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.


ப்ரீபெய்டு கார்டுடன் ரூ. 100 கூடுதலாக செலுத்தி மற்றொரு இக்கார்டை ஏற்றுக் கொள்ளலாம். இந்தக் கூடுதல் சிம்கார்டை வாடிக்கையாளர் தங்களது நண்பர், குடும்ப உறுப்பினர் அல்லது தெரிந்த நபரிடம் கொடுக்கலாம். இந்த இரண்டு சிம் கார்டுகளிடையே மாதம் ஒன்றுக்கு 6 மணி நேரம் இலவசமாக பேசலாம். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் - இரண்டு சிம் கார்டுகள் ஒரே கணக்கில் வைக்கப்பட்டிருக் கும். 6 மணிநேரத் திலும் அதிகமாக பேசும்போது நிமிடத்திற்கு 10 பைசா கட்டணத்தில் பேசலாம்.


கூடுதல் சிம்கார்டை பயன்படுத்துவர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளூர் அழைப்புக்கு 80 பைசாவிலும் வெளியூர் அழைப்புகளுக்கு ரூ. 2.60 பைசாவிலும் பேசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பரதம் போன்ற கலைகள் வளர வேண்டும்: ஆர். நடராஜ்

பரதம் போன்ற கலைகள் வளர வேண்டும்: ஆர். நடராஜ்

அறிவியலைப் போல் மென்மையான கலைகளும் வளர வேண்டும் என காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆர். நடராஜ் கூறினார்.

சென்னை முத்தமிழ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற 'வடசென்னையில் இசை விழா' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காவல் துறை கூடுதல் இயக்குநர் ஆர். நடராஜ், ''எல்லோரும் சமம் என உணர்த்துவது கலை மட்டுமே. கலை வாழ்க்கையோடு இணைந்தது. அறிவியல் வளர்ச்சி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அதே சமயம், பரதம் போன்ற மென்மையான கலைகளும் அதற்கு இணையாக வளர வேண்டும். அப்போதுதான் நாம் சோபிக்க முடியும்'' என்றார்.

மேலும் அவர், ''கலைப் பொக்கிஷங்களைப் போற்றி பாதுகாக்க வேண்டும். ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். படிப்பாகட்டும் வேலையாகட்டும் எந்த ஒரு விஷயத்திலும் மனம் விரும்பி ஈடுபட வேண்டும்'' என்றும் தெரிவித்தார்.

கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சுகாதார ஆய்வாளர்கள் மூலம் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவர் வியாழக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக செய்த அறிவிப்பு விவரம்:-

""தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படும்.

துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும். இதனால் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

ரூ.20 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன்: தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் நோய் கண்டறியும் நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சேவை கிராம மக்களுக்கும் கிடைக்கும் வகையில் 12 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் இக் கருவி ரூ.20 கோடியில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நடமாடும் மருத்துவக் குழுக்கள்: தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு தங்கள் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்கும் நோக்கத்தில் 146 நடமாடும் மருத்துவக் குழு ஆரம்பித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு ரூ.22 கோடியில் மேலும் 239 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படும்'' என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

நிஜமான "தமிழினத் தலைவர்' கலாம்தான்!

நிஜமான "தமிழினத் தலைவர்' கலாம்தான்!

அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
"தினமணி' கார்ட்டூனிஸ்ட் மதியின் "அடடே!' கார்ட்டூன்கள் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசிய வரவேற்புரை:

அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் உணர்விலும் ஒன்றியவர் ஒருவர் உண்டென்றால், அவர் அப்துல் கலாம் ஒருவர்தான்.

சமீபத்தில் அப்துல் கலாம் பற்றிய குறுந்தகட்டை பார்த்தேன். அதில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாட்டில் பேசும்போது, புறநானூற்றை மேற்கோள் காட்டி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என்று தொடங்கி அதற்கு ஆங்கில விளக்கமும் அளித்தார்.

அந்த அரங்கில் அலை, அலையாக கைதட்டல்கள் எழுந்தன. தமிழின் அருமையையும், தமிழனின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநிறுத்திய உண்மையான தமிழினத் தலைவர் அப்துல் கலாம்தான் என்று கூற வேண்டும்.

குடியரசுத் தலைவராக இருந்தபோது கூட இத்தனை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றாரா என்பது சந்தேகம். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 9 மாதங்களாக, தென் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், கிழக்கு ஆசியா என்று ஓய்வொழிவில்லாமல் சுற்றுப் பயணம் செய்யும் இவர்தான் நிஜமான "உலகம் சுற்றும் வாலிபன்' என்று கூறத் தோன்றுகிறது.

அப்துல் கலாம் கனவு காணும் 2020-ல் வளமான இந்தியாவை தனது வாழ்நாளில் அவர் காண வேண்டும். அதற்கு அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும்.

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியம் பற்றி பேச வேண்டுமானால் இரண்டு பெயர்களை அகற்றி நிறுத்த முடியாது. முதலாவது கவிஞர் கண்ணதாசன் என்றால், அடுத்தது எழுத்தாளர் ஜெயகாந்தன். அகவை 75-ல் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சாலமன் பாப்பையாவின் மாணவன் நான். எனது தமிழ் அவர் கற்றுக் கொடுத்தது. அமெரிக்கன் கல்லூரியில் அவரது மாணவராக இருந்தேன் என்கிற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.

எக்ஸ்பிரஸ் குழுமத்தில் சுதந்திரம்: 15 ஆண்டுகளுக்கு முன்பே மதி எனக்கு அறிமுகமானவர். முதல் முதலாக அவரது கார்ட்டூனைப் பார்த்தபோது, அடடா, தமிழுக்கு ஒரு ஆர்.கே. லஷ்மண் கிடைத்துவிட்டார் என்று நினைத்து மகிழ்ந்தேன் நான். இப்போது அடடேயாக அந்தக் கார்ட்டூன் தொகுப்பு மலர்ந்திருக்கிறது.

ஆசிரியரான எனக்கும் சரி, கார்ட்டூனிஸ்டான மதிக்கும் சரி, எங்களது பலம் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணிபுரிவதுதான். படைப்பாளிக்கும், பத்திரிகையாளருக்கும் முழுமையான சுதந்திரத்தை அளிக்கும் ஒரே பத்திரிகை நிறுவனம் எங்களது எக்ஸ்பிரஸ் குழுமமாகத்தான் இருக்கும்.
அதற்குக் காரணம் சேர்மன் மனோஜ்குமார் சொந்தாலியாதான் என்பதில் சந்தேகமில்லை.

கார்ட்டூனிஸ்ட் மதி இடையில் ஒன்றரை மாதம் விடுப்பில் சென்றபோது ஏராளமானோர் கார்ட்டூன் குறித்து தொலைபேசியில் விசாரித்தனர். விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம். வாசகர்களை தவிக்கவிடாமல் விடுப்பை முடித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டார் மதி. அவரைப் பொருத்தவரை இது ஒரு தொழிலல்ல, தவம்.

மதியின் கார்ட்டூன்களில் எந்தவிதமான தொய்வும் இருக்காது. ஆற்றுப் பிரவாகம் போல் நினைத்த நேரத்தில் கார்ட்டூன்கள் வந்து விழுந்து விடும். இந்தியாவில் ஓரிருவருக்கு மட்டுமே இந்த வரம் வாய்த்துள்ளது' என்றார் கே. வைத்தியநாதன்.

மதியின் "அடடே!' தொகுப்புகளை அப்துல் கலாம் வெளியிட, பெற்றுக்கொண்ட சுவாமி ஆத்மகனானந்தா, "கல்கி' ராஜேந்திரன், நடிகை மனோரமா, கிரேசி மோகன் ஆகியோரை அவர் வரவேற்றுப் பேசினார்.

எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் எரிந்து நாசம், பயங்கர தீ விபத்து

ஏப்.25-வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த மையத்தில் உள்ள மத்திய மண்டபத்தில் மொத்தம் 30 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. 450 ஆசிரியர்கள் காலையிலும், மாலையிலும் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் திருத்திய விடைத்தாள்களை மையத்தில் உள்ள பெரிய அறையில் வைத்து பூட்டி விடுவார்கள். திருத்த வேண்டிய விடைத்தாள்களும் அதே அறையின் இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து குபு, குபு வென்று புகை வந்தது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.

தகவல் கிடைத்ததும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி சுந்தரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

இந்த தீ விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை நிருபர்களிடம் கூறும்போது, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் இந்த மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தீ விபத்து பற்றி விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விசாரணை முடிந்து பிறகுதான் சேதம் எந்த அளவு என்பதை கூறமுடியும் என்றார்.

நன்றி- தினத்தந்தி

கோவையில் பிளாஸ்டிக் தடை அமல்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நேற்று முதல் கோவை மாநகராட்சியில் அமலுக்கு வந்தது. இதுகுறித்து மேயர் வெங்கடாசலம் கூறியதாவது: ஒருமுறை மட்டும் பயன் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் சாக்கடை அடைப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு என பல்வேறு சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக இப்போதே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பிளாஸ்டிக் தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகரத்தில் உள்ள மக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத் தப்படும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். இத்தடையை மீறும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு ரூ.5,000, மொத்த விற்பனையாளர் களுக்கு ரூ.2,500, சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.750, உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100 என அபராதம் விதிக்கப்படும், என்று கூறினார்.


உணவுத் தட்டுப்பாடு - பயோ எரிபொருள் காரணமா?

பயோ எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவது குறித்து உலகத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

பெட்ரோல் விலையேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக மாற்று எரிபொருளுக்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது. பல நாடுகளில் பயோ எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு முக்கிய பயிர்கள், பயோ எரிபொருளுக்கு திருப்பி விடப்பட்டது காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பொலிவிய அதிபர் மோரல்ஸ் மற்றும் பெரு அதிபர் கார்சியா, பயோ எரிபொருளை அதிக அளவில் பயன்படுத்துவது விவசாயத்திற்கு பாதகமாக அமையும் என்று எச்சரித்துள்ளனர்.



Free Blog CounterLG