நிஜமான "தமிழினத் தலைவர்' கலாம்தான்!
அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்தான் என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
"தினமணி' கார்ட்டூனிஸ்ட் மதியின் "அடடே!' கார்ட்டூன்கள் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் அவர் பேசிய வரவேற்புரை:
அண்ணல் காந்தியடிகளுக்குப் பிறகு இந்திய மக்கள் அனைவரின் உள்ளத்திலும் உணர்விலும் ஒன்றியவர் ஒருவர் உண்டென்றால், அவர் அப்துல் கலாம் ஒருவர்தான்.
சமீபத்தில் அப்துல் கலாம் பற்றிய குறுந்தகட்டை பார்த்தேன். அதில் ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் மாநாட்டில் பேசும்போது, புறநானூற்றை மேற்கோள் காட்டி, "யாதும் ஊரே யாவரும் கேளிர்!' என்று தொடங்கி அதற்கு ஆங்கில விளக்கமும் அளித்தார்.
அந்த அரங்கில் அலை, அலையாக கைதட்டல்கள் எழுந்தன. தமிழின் அருமையையும், தமிழனின் பெருமையையும் உலக அரங்கில் நிலைநிறுத்திய உண்மையான தமிழினத் தலைவர் அப்துல் கலாம்தான் என்று கூற வேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்தபோது கூட இத்தனை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றாரா என்பது சந்தேகம். குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த 9 மாதங்களாக, தென் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல், கிழக்கு ஆசியா என்று ஓய்வொழிவில்லாமல் சுற்றுப் பயணம் செய்யும் இவர்தான் நிஜமான "உலகம் சுற்றும் வாலிபன்' என்று கூறத் தோன்றுகிறது.
அப்துல் கலாம் கனவு காணும் 2020-ல் வளமான இந்தியாவை தனது வாழ்நாளில் அவர் காண வேண்டும். அதற்கு அவர் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க வேண்டும்.
மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ் இலக்கியம் பற்றி பேச வேண்டுமானால் இரண்டு பெயர்களை அகற்றி நிறுத்த முடியாது. முதலாவது கவிஞர் கண்ணதாசன் என்றால், அடுத்தது எழுத்தாளர் ஜெயகாந்தன். அகவை 75-ல் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
சாலமன் பாப்பையாவின் மாணவன் நான். எனது தமிழ் அவர் கற்றுக் கொடுத்தது. அமெரிக்கன் கல்லூரியில் அவரது மாணவராக இருந்தேன் என்கிற பெருமை எனக்கு எப்போதும் உண்டு.
எக்ஸ்பிரஸ் குழுமத்தில் சுதந்திரம்: 15 ஆண்டுகளுக்கு முன்பே மதி எனக்கு அறிமுகமானவர். முதல் முதலாக அவரது கார்ட்டூனைப் பார்த்தபோது, அடடா, தமிழுக்கு ஒரு ஆர்.கே. லஷ்மண் கிடைத்துவிட்டார் என்று நினைத்து மகிழ்ந்தேன் நான். இப்போது அடடேயாக அந்தக் கார்ட்டூன் தொகுப்பு மலர்ந்திருக்கிறது.
ஆசிரியரான எனக்கும் சரி, கார்ட்டூனிஸ்டான மதிக்கும் சரி, எங்களது பலம் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணிபுரிவதுதான். படைப்பாளிக்கும், பத்திரிகையாளருக்கும் முழுமையான சுதந்திரத்தை அளிக்கும் ஒரே பத்திரிகை நிறுவனம் எங்களது எக்ஸ்பிரஸ் குழுமமாகத்தான் இருக்கும்.
அதற்குக் காரணம் சேர்மன் மனோஜ்குமார் சொந்தாலியாதான் என்பதில் சந்தேகமில்லை.
கார்ட்டூனிஸ்ட் மதி இடையில் ஒன்றரை மாதம் விடுப்பில் சென்றபோது ஏராளமானோர் கார்ட்டூன் குறித்து தொலைபேசியில் விசாரித்தனர். விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம். வாசகர்களை தவிக்கவிடாமல் விடுப்பை முடித்துக்கொண்டு ஓடிவந்துவிட்டார் மதி. அவரைப் பொருத்தவரை இது ஒரு தொழிலல்ல, தவம்.
மதியின் கார்ட்டூன்களில் எந்தவிதமான தொய்வும் இருக்காது. ஆற்றுப் பிரவாகம் போல் நினைத்த நேரத்தில் கார்ட்டூன்கள் வந்து விழுந்து விடும். இந்தியாவில் ஓரிருவருக்கு மட்டுமே இந்த வரம் வாய்த்துள்ளது' என்றார் கே. வைத்தியநாதன்.
மதியின் "அடடே!' தொகுப்புகளை அப்துல் கலாம் வெளியிட, பெற்றுக்கொண்ட சுவாமி ஆத்மகனானந்தா, "கல்கி' ராஜேந்திரன், நடிகை மனோரமா, கிரேசி மோகன் ஆகியோரை அவர் வரவேற்றுப் பேசினார்.
Friday, April 25, 2008
நிஜமான "தமிழினத் தலைவர்' கலாம்தான்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment