உயரம் அதிகமான தென்னை மரங்களில் ஏறி லாவகமாகவும். வேகமாகவும் தேங்காய் பறித்து சாதனை படைத்து வருகிறார் ஷர்மிளா என்ற கேரளாவைச் சேர்ந்த பெண். கேரளாவில் அண்மைக் காலமாக தேங்காய் பறிப்பதற்குத் திறமையான ஆள்கள் கிடைக்காமல் இருந்தது. பழைமை வாய்ந்த இந்தத் தொழிலைச் செய்ய இளைஞர்கள் தயக்கம் காட்டினர். ஆனால் காசர்காடு மாவட்டம், பள்ளிக்கார ஊராட்சியைச் சேர்ந்த ஷர்மிளா என்ற 37 வயதுப் பெண், மிக உயரமான மரங்களில் கூட லாவகமாக ஏறி தேங்காய்களை வேக மாகப் பறித்துப் போடுகிறார். இதற்காக மரம் ஏறும் இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்.
அரசுப் பணியில் பகுதி நேரப் பணியாளராக உள்ள இவர் ஓய்வு நேரத்தில் தேங்காய் பறிக்கும் வேலையை செய்து வருகிறார். எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத இந்த வேலையை நான் செய்தபோது, யாராலும் இதை நம்ப முடியவில்லை. ஆபத்தான இந்த வேலையை எப்படி என்னால் செய்ய முடியும் என்பது மற்றவர்களுக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இன்று தேங்காய் பறிக்க என் னைத்தான் அழைக்கின்றனர்.