Sunday, April 13, 2008

ஹமாஸ் தலைவர்களை சந்திக்கலாம் - ஜிம்மி கார்டர்


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஒன்பது நாள் பயணமாக அரபுநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதில் ஒருகட்டமாக சிரியாவுக்கும் செல்கிறார், அங்கு ஹமாஸ் தலைவர்களை சந்தித்தாலும் சந்திக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார். இதனை புஷ் நிர்வாகமும், இஸ்ரேலும் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளனர்.

Jimmy Carter says he likely will meet with Hamas

உயரும் பணவீக்கம்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை


நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்என்றும், இதனை குறைக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது சர்வதேச நிதியத்தின் இயக்குனர் (ஆசிய மற்றும் பசிபிக் பிரிவு) டேவிட் பர்டன் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச நிதியத்தின் மூத்த ஆலோசகரான கல்பனா கோச்சார் பேசுகையில், 7.5 சதவீத அளவு வரையிலான பணவீக்கம் மிகவும் உயர்வானது இல்லை என்றாலும், அரசியல் அரங்கில் இதுபெரும் புயலை கிளப்பியுள்ளது என்றார்.

உணவு, பெட்ரோல்-டீசல் மற்றும் சில உலோகங்களின் விலை உயர்வு காரணமாகவே இந்தியாவின் பணவீக்கம் 7.5 என்ற அளவை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடஒதுக்கீடு கிரீமி லேயர்: பிரதமருக்கு கடிதம்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் கிரீமி லேயர் எனப்படும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தோர் முறையை பின்பற்றக் கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு கருணாநிதியுடன் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று தொலைபேசியில் பேசினார்.

கிரீமி லேயர் முறையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு. கருணாநிதி எழுதிய கடிதத்தை மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு நேற்று பிரதமரிடம் நேரில் ஒப்படைத்தார்.

அப்போது முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசிய டாக்டர் மன்மோகன் சிங், 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் பொருளாதார அளவுகோலை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங்கை, தாம் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறினார்.

இடஒதுக்கீடு விஷயத்தில் வருமான வரம்பு 2 இலட்சத்து 50 ஆயிரம் ருபாய் என்று இருப்பதால் க்ரூப்- டி பிரிவு ஊழியர்களின் குழந்தைகள் கூட இடஒதுக்கீட்டின் பயனைப் பெற முடியாத நிலை இருப்பதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவரும் பயன்பபெறும் வகையில் வருமான உச்ச வரம்பு நிலையை நீக்குவது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கோரியிருக்கிறார்.

பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கை டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார்.

தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி சார்பில் அர்ஜுன் சிங்கிற்கு அவர் நன்றி தெரிவித்தார். கிரீமி லேயர் விவகாரம் குறித்து கூட்டணிக் கட்சிகள் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என்று அர்ஜுன் சிங் டி.ஆர். பாலுவிடம் உறுதி கூறினார்.

ஆப்கானில் 2 இந்திய என்ஜினியர்கள் கொலை

ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த தற்கொலை தாக்குதலில் இந்திய என்ஜினியர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் நிம்ராஸ் மாகாணத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த பணியில் இந்தியாவைச் சேர்ந்த சாலை பணியாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை இந்திய பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்தை குறிவைத்து தற்கொலை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த இந்திய என்ஜினியர்கள் 2 பேர் உடல் சிதறி பலியானார்கள்.

தாலிபான் இயக்கம்தான் இந்த தற்கொலை தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.ஆப்கானிஸ்தானில் சாலை அமைப்பது, மின்சார உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளில் இந்திய பணியாளர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களில் பலரை தாலிபான் தீவிரவாதிகள் கடந்த காலங்களில் கடத்தி சென்றதும் , தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக்கூடாது: தலாய் லாமா


திபெத் பிரச்சனை எதிரொலியாக ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக்கூடாது என்று புத்தமத தலைவர் தலாய் லாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
திபெத் பிரச்சனையில் சீனாவின் நடவடிக்கையை கண்டித்து அந்நாட்டில், ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவை புறக்கணிக்கப்போவதாக பிரான்ஸ் நாட்டு அதிபர் நிகோலஸ் சர்கோசி உள்பட சில ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில், 13 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா வந்துள்ள தலாய் லாமா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி: திபெத்திய போராட்டத்துக்காக ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்கக் கூடாது. நாங்கள் அதை விரும்பவில்லை. ஆனால் மற்ற நாடுகள் ஒலிம்பிக் போட்டி தொடக்கவிழாவை புறக்கணிப்பது அவர்களுடைய விருப்பம். இது வெறும் திபெத்திய பிரச்சினை மட்டுமல்ல. சீனாவின் மோசமான மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. சீனாவில் திபெத்தியர்களுக்கு சுதந்திரமே இல்லை. நாங்கள் சீனாவுக்கு எதிரானவர்கள் அல்ல; தனி நாடும் கேட்கவில்லை. உரிய சுதந்திரம் கேட்டுதான் போராடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை: டிரைவ் - இன் உட்லண்ட்ஸ் மூடப்பட்டது

சென்னையில் கடந்த 46 ஆண்டுகளாக இயங்கி வந்த டிரைவ்- இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மூடப்பட்டது. இந்த இடத்தில் பூங்கா மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களில் (லேண்ட் மார்க்) ஒன்றாக திகழ்ந்து வந்தது டிரைவ் -இன் உட்லண்ட்ஸ்ஓட்டல். நகரின் இதயப் பகுதியான ஜெமினி மேம்பாலம் அருகே 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த ஓட்டல் கடந்த 46 ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிரபல முக்கியப் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், காதலர்கள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஓட்டலுக்கு வந்து உணவருந்தி செல்வர். உணவருந்தும் இடமாக மட்டுமல்லாமல், நண்பர்களுடன் கலந்துரையாடும் இடமாகவும் இது இருந்தது. அதோடு, காருக்கு அருகிலேயே உணவுகளை கொண்டு வந்து சப்ளை செய்யும் முறையும் இங்கு மட்டும்தான் இருந்தது. இதனாலேயே, இந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தோட்டக்கலை சங்கம் குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்நிலையில், அங்கு உட்லண்ட்ஸ் ஓட்டல் தொடங்கி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் அரசு இறங்கியது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ஓட்டலை அரசு கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஓட்டலில் வெளி கேட் இழுத்துப் பூட்டப்பட்டு, 'இது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடம்' என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலையிலிருந்து ஓட்டலுக்கு வந்தவர்கள், ஓட்டல் மூடப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். பிரபல பிண்ணனி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், இயக்குனர் வசந்த் மற்றும் பல்வேறு திரையுலகினரும் இந்த ஓட்டலில் பல ஆண்டுகால வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் மிகப்பெரிய பூங்கா, தோட்டக்கலை ஆராய்ச்சி கூடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா அருகே பயங்கர நிலநடுக்கம்.

ஆஸ்திரேலிய எல்லைக்குட்பட்ட மேக்கைர் தீவு அருகே உள்ள கடல் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 7.1 ஆக பதிவாகி உள்ளது.நியூசிலாந்தின் ஆக்லாண்ட் நகரில் இருந்து 755 கி.மீ. தொலைவிலும், தலைநகர் வெலிங்டனில் இருந்து தெற்கே 1,955 கி.மீ. தொலைவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை பாதிக்கும!

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், சீர்திருத்தங்களை மேற்கொள்வதும் தடைபடும் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.டெல்லியில் நேற்று நடந்த சர்வதேச வேளாண் தொழில்முறை மாநாட்டில் பேசிய போது இதனை தெரிவித்த பிரதமர், அத்தியாவசிப் பொருட்கள் விலை ஏற்றத்தால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என்றாலும், அதனை செயல்படுத்த விலைவாசி உயர்வு பிரச்சனை தடையாக இருப்பதாக தெரிவித்த பிரதமர், பணவீக்கம் 7 சதவீதத்தை எட்டியிருந்தாலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் சுட்டிக் காட்டியுள்ளதையும் மேற்கோள் காட்டினார்.

தற்போதைய சூழலில் 2வது பசுமைப் புரட்சி நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும், அதை நவீன தொழில்நுட்பம், புதிய நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் சரியான திட்டமிடல் ஆகியவற்றின் மூலமே எட்ட முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்

மே 2வது வாரத்தில் பிளஸ் 2 தே‌ர்வு முடிவு: அமைச்சர் தங்கம் தென்னரசு!

பிள‌ஸ் 2 தே‌ர்வு முடிவுக‌ள் மே மாத‌ம் 2வது வார‌த்‌தி‌ல் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் எ‌ன்று ப‌ள்‌ளி‌ க‌ல்வ‌ி‌த்துறை அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த மாத‌ம் நட‌ந்த பிளஸ் 2 தேர்வை 6 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இதை‌த் தொட‌ர்‌ந்து விடைத்தாள் திருத்தும் பணி த‌மிழக‌ம் முழுவது‌ம் 47 மையங்களில் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் ‌இ‌ந்த ப‌ணிக‌ள் முடிந்து விடும்.

இதையடுத்து மதிப்பெண் கூட்டி பதிவு செய்யும் பணி கிண்டியில் உள்ள டேட்டா எண்ட்ரி மையத்தில் நடைபெற உள்ளது. மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதில் பிழைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பல்வேறு கட்ட ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்வு முடிவை கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிட தேர்வுத்துறை முழுவீச்சில் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகை‌யி‌ல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ‌தீ‌விரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவு மே மாத‌ம் 14ஆ‌ம் தேதி வெளியிடப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் தாமதம் இல்லாமல் மே 2-வது வாரத்தில் வெளியாகும்.

மாணவ‌ர்க‌ள் மேல்படிப்புகளில் சேருவதற்கு வசதியாக தேர்வு முடிவுகள் தாமதம் இல்லாமல் வெளியிட தேர்வுத்துறை அனைத்து நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறது எ‌ன்று அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு கூ‌றினா‌ர்.

மாருதி நிறுவனம் சுவிஃப்ட் டிஜியர் கார் அறிமுகம்!

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஜூகி சுவிஃப்ட் டிஜியர் என்ற புதிய காரை டில்லியில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய காரின் விலை (டெல்லியில்) ரூ.4 லட்சதது 49 ஆயிரம் முதல் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் வரை. பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய இரண்டு வகை கார்களையும் சுவிஃப்ட் டிஜியர் ரகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.

பெட்ரோலில் ஓடக்கூடிய காரின் விலை ரூ.4.49 லட்சம் முதல் ரூ.5.9 லட்சம் வரை என உள் வேலைப்பாடு, கூடுதல் பாகங்களை பொருத்து இருக்கும்.

இதே போல் டீசலில் ஓடும் காரின் விலை அதன் ரகத்தை பொறுத்து ரூ.5.39 லட்சம் முதல் ரூ.6.7 லட்சம் வரை என அறிவித்துள்ளது.

டெல்லியில் மிக சிறப்பாக நடந்த அறிமுக விழாவில் மாருதி சூஜூகி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். நகானிஷி பேசும் போது, “எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா முக்கியமான நாடாகும். இது கடந்த மூன்று வருடங்களில் நாங்கள் அறிமுகப்படுத்தும் 7வது புதிய ரக கார்.

இந்தியர்களின வருவாய் அதிகரித்து வருகிறது. அவர்களின் வாழ்க்கை நிலையும் மேம்பட்டு வருகிறது. இதனால் பலர் சொகுசான கார்களை சொந்தமாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் புதிதாக கார் வாங்குபவர்களுக்கு சிறப்பாக இயங்க கூடிய, சொகுசான, நவீன வசதிகள் உடைய கார்களை தேர்ந்தெடுப்பது கடினமாக உள்ளது. இவை எல்லாம், நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள சுவிஃப்ட் டிஜியர் ரக காரில் அடங்கியுள்ளன. அத்துடன் விலையும் நியாயமானது என்று கூறினார்.

சுவிஃப்ட் டிஜியர் ரக காரில் ஸ்டிரியோ, ஏ.சி வசதி, ஜன்னல் கண்ணாடிகளை மின்சாரத்தில் ஏற்றி இறக்கும் வசதி, விபத்தில் இருந்து காக்கும் இரண்டு அடுக்கு காற்று பை போன்ற வசதிகள் உள்ளன.

இந்த புதிய கார் ஆர்டிக் வெண்மை, சில்வர், கிளியர் ஃபிஜ்ஜி, மிட் நைட் பிளாக், பிரைட் ரெட், அஜூரி கிரே, சவரியன் புழு ஆகிய ஏழு நிறங்களில் கிடைக்கிறது.

இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை ஏ3 ரக கார்கள் எனப்படும், இந்த ரக கார்களை மாருதி சுஜுகி நிறுவனம் பலத்த போட்டிகளிடையே 41 ஆயிரம் கார்கள் வரை விற்பனை செய்துள்ளது.

ஈரோடு அருகே பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது இருவர் பலி!

ஈரோடு அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் இருவர் பலியானார்கள்.

ஈரோடு அருகே உள்ளது கோபிசெட்டிபாளையம். இதன் அருகே உள்ளது கொளப்பலூர். இங்குள்ள தனியார் நூற்பாலைக்கு செல்ல இப்பகுதி மக்கள் பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக தர்மபுரியில் இருந்து கோவை செல்ல வந்த லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

இதனால் பயணிகள் பதறியடித்தபடி ஓடினர். இத‌ி‌ல் ராமாயாள் (60), கருமாண்டகவுண்டர்(55) ஆகியோர்மீது லாரி சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்தனர். திருமூர்த்தி (45) படுகாயமடைந்தார். இவரை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பர பலகைகள் அகற்றும் ப‌ணி தொடரும்: தமிழக அரசு!

தமிழகத்தில் அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்ற செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை எதுவும் விதிக்கவில்லை, இதனா‌ல் ‌விள‌ம்பர பலகைக‌ள் அக‌ற்று‌ம் ப‌ணி தொடரு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு கூ‌றியு‌ள்ளது.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனுமதியில்லாத விளம்பர பலகைகளை அகற்றுவது கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் விளம்பர ஏஜென்சிகள் தாக்கல் செய்த வழக்கு, கடந்த 9.4.2008-ல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனுமதியில்லாத விளம்பரப் பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம், 11.4.2008 முதல் 15.4.2008 வரை தடை விதித்துள்ளதாக உண்மைக்கு மாறான செய்திகளும், வதந்திகளும் வந்துள்ளன. இது சம்பந்தமாக உயர் நீதிமன்றம் எந்த விதமான தடையாணையும் பிறப்பிக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று தெளிவுரை வழங்கியுள்ளது.

இது சம்பந்தமாக எந்தவொரு ஆணையையும் உயர் நீதிமன்றம் வெளியிடவில்லை என்றும், 15.4.2008-க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசு மேல் நடவடிக்கை தொடரும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் நடை முறை.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் சமச்சீர் கல்வித் திட்டம் நடை முறைக்கு வரும் என்றும் அதில் காலத்துக்குத் தேவையான சமூகநீதி, மனித உரிமை, மருத்துவ முதல் உதவி போன்ற பாடத் திட்டங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சிகரெட் புகையை சுவாசிப்பதால் பாதிக்கப்படும் குழந்தைகள்.

சிகரெட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் உலகம் முழுவதும் 60 கோடி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று அடையார் புற்றுநோய் நிறுவன அறிவியல் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு-கோவை பாசஞ்சர் ரயில் விபத்திலிருந்து தப்பியது!

ஈரோடு அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்த விரிசல் தக்க சமயத்தில் கண்டறியப்பட்டதால் ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது.

ஈரோடு மாவட்டம், ஈங்கூர் ரயில் நிலையத்தில் இருந்து விஜயமங்கலம் வரை ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஈங்கூர் அருகே தண்டவாளத்தில் இரண்டு இடங்களில் விரிசல் ஏற்பட்டருந்தது. இதை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். உடனே ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது காலை 7.23 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது

நேபாளத்தில் மாவோயிஸ்ட் ஆட்சி.

காத்மாண்டு: நேபாளத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மாவோயிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அங்கு மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.


நேபாள நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.

மொத்தம் 601 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 43 இடங்களில் 27 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவுக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து திட்டமிட்டபடி கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகவும், ஜனநாயகம் மலரும் எனவும், அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பல்வேறு கட்சிகளுன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற எங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றுவோம். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நேபாளம் ஜனநாயக, பெடரல் குடியரசு நாடாக அறிவிக்கப்படும். நாட்டில் சோசலிஷத்தை நிலைநிறுத்த பாடுபடுவோம்.

அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் ஒத்துழைக்க அழைப்பு விடுக்கிறேன்.

நேபாளத்தை வளம் மிக்க, பலம் மிக்க நாடாக மாற்றும் பொறுப்பு எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. அதிலிருந்து நாங்கள் தவற மாட்டோம் என்றார் பிரசந்தா.

மன்னராட்சிக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்ட்டுகள், கடந்த 2006ம் ஆண்டு ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. சிபிஎன்-யுஎம்எல் கட்சி 6 இடங்களிலும், நேபாள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி 2 இடங்களிலும், மாதேசி மக்கள் உரிமைக் கழகம் கட்சிக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைத்தது.

மாவோயிஸ்ட் வேட்பாளர்கள் மேலும் 48 தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர்.

ஏப்ரல் 14 மத்திய அரசு விடுமுறை.

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை (ஏப்.14) மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும் ஏப்.14ம் தேதி செயல்படாது என சென்னையில் உள்ள மத்திய அரசின் தொழிலாளர் ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்திற்கு தடை : கனடா முடிவு

வரும் 2010-ம் ஆண்டில் கனடாவின் வான்கூவரில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதி ஓட்டத்தை தடை செய்யப்போவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது :

தற்போது சீனாவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஒட்டம் பல்வேறு நாடுகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

மேலும்சீனா அரசு மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் ஜோதி ஒட்டத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு 2010 முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

ஆங்கில மயமாக மாறும் லெனினின் சொந்த ஊர்.

ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதியும் உலகளவில் கம்யூனிஸம் பரவக் காரணமாக இருந்தவருமான விளாடிமிர் லெனினின் சொந்த ஊரான உடலினோவிஸ்க் ஆங்கில மயமாகின்றது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 960 கி.மீ., தூரத்தில் உள்ளது 'உலினோவில்க்' நகரம் லெனின் இங்கு தான் பிறந்தார். இந்த நகரம் முன்பு, `சிம்ப்ரிஸ்க்' என அழைக்கப்பட்டது.

லெனின் புகழ் பெற்ற பிறகு, அவரது பெயரின் கடைசி வார்த்தையே, ஊரின் பெயராக வைக்கப்பட்டது. இந்த நகரத்தில், தற்போது ஆறு இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

இந்த நகரத்தின் ஆளுநர் செர்கி மோரோசோவ், சமீபத்தில் இவர், `உலினோவிஸ்க் நகர உயர் அதிகாரிகள் அனைவரும், ஆங்கிலம் கற்க வேண்டும். அப்போது தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, நிலத்தை விற்கும் பணியை சிறப்பாக மேற்கொள்ள முடியும்' என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நகரத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் துவக்கவும், தொழில் புரியவும் முன் வந்துள்ளன. ஆனால், நிலம் வாங்கும் முயற்சி, மொழிப் பிரச்சினையால் சிக்கலில் மாட்டியுள்ளது.

ரஷ்ய அதிகாரிகளுக்கு ஆங்கிலம் தெரியாததால், பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளுடன், சரளமாக உரையாட முடியவில்லை. பிரான்ஸில் நடந்த, ரியல் எஸ்டேட் மாநாட்டில், ரஷ்ய அதிகாரிகள் பங்கேற்ற போது, இப்பிரச்சினை வெட்ட வெளிச்சமானது.

இதன் பிறகே, உலினோவிஸ்க் ஆளுநர் இந்த உத்தரவை பிறப்பித்தார். `நாம், நாய்கள் போல உள்ளோம். அனைத்தையும் புரிந்து கொள்கிறோம்; ஆனால், நம்மால் எதையும் சொல்ல முடியவில்லை' என்று கூறினார்.

உயர் அதிகாரிகளுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் வரை தொடர்ந்து தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்துள்ள, ஆளுநருக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது.

எனவே, ஆங்கில பாட வகுப்புகளுக்கு, அவரும் செல்ல தொடங்கியுள்ளார். ஆளுநரின் இந்த புதிய உத்தரவை, `வேண்டாத வேலை' என அதிகாரிகள் சிலர் விமர்சித்துள்ளனர்.

அகதியாய் வந்தவர் பாராளுமன்ற உறுப்பினரானார்.

அகதியாக சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய அங்கோலா நாட்டவரான ரிகாடோ லுமேன்கோ உணவு விடுதிகளில் பாத்திரங்கள் கழுவும் வேலையில் ஆரம்பித்து, தற்போது சுவிஸ் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1982ம் ஆண்டு தனது 20-வது வயதில் இவர் தனது தாய்நாடான அங்கோலாவிலிருந்து சுவிட்சர்லாந்த் வந்தார்.

லுமேன்கோ ஒரு உணவு விடுதியில் பாத்திரங்கள் கழுவும் வேலையில் இருக்கும் போதே 'பேர்ன்' மாநிலத்தில் பேசப்படும் 'டச்' மொழியை கற்றுக்கொண்டார். அதனால் அவர் சுவிஸ் மக்களுடன் இலகுவில் சேர்ந்து பழகக் கூடியதாக இருந்தது. லுமேன்கோ சமூக நீதிக்காக அங்கோலாவில் போராடியதால், தஞ்சம் கோரிய நாட்டான சுவிட்சர்லாந்திலும் அவர் SP கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

2007ம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட அவர், SVP கட்சியினரின் 'கறுப்பு ஆட்டுப் பிரச்சாரம்' இருந்தபோதும், சுவிஸ் பாராளுமன்றத்தில் முதலாவது கறுப்பினத்தவராகத் தேர்வானார்.

நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியில் இது வதந்தி என்று தெரிய வந்தது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்தது, எதிர்முனையில் பேசிய நபர், நீதிமன்றத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து அந்த வளாகம் முழுவதும் பரபரப்பும், பீதியும் நிலவியது. நீதிமன்ற ஊழியர்கள் இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சந்தேகத்திற்கிடமான எந்த பொருளும் சிக்கவில்லை.

இறுதியில் குண்டு இருப்பதாகக் கூறப்பட்டது வதந்தி என்று தெரிய வந்தது. இதன் பின்னரே நீதிமன்றத்திற்கு வந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Free Blog CounterLG