Sunday, April 13, 2008

சென்னை: டிரைவ் - இன் உட்லண்ட்ஸ் மூடப்பட்டது

சென்னையில் கடந்த 46 ஆண்டுகளாக இயங்கி வந்த டிரைவ்- இன் உட்லண்ட்ஸ் ஓட்டல் மூடப்பட்டது. இந்த இடத்தில் பூங்கா மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களில் (லேண்ட் மார்க்) ஒன்றாக திகழ்ந்து வந்தது டிரைவ் -இன் உட்லண்ட்ஸ்ஓட்டல். நகரின் இதயப் பகுதியான ஜெமினி மேம்பாலம் அருகே 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த ஓட்டல் கடந்த 46 ஆண்டுகளாக இயங்கி வந்தது. பிரபல முக்கியப் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், காதலர்கள், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த ஓட்டலுக்கு வந்து உணவருந்தி செல்வர். உணவருந்தும் இடமாக மட்டுமல்லாமல், நண்பர்களுடன் கலந்துரையாடும் இடமாகவும் இது இருந்தது. அதோடு, காருக்கு அருகிலேயே உணவுகளை கொண்டு வந்து சப்ளை செய்யும் முறையும் இங்கு மட்டும்தான் இருந்தது. இதனாலேயே, இந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

அரசுக்கு சொந்தமான இந்த இடத்தை, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தோட்டக்கலை சங்கம் குத்தகைக்கு எடுத்திருந்தது. இந்நிலையில், அங்கு உட்லண்ட்ஸ் ஓட்டல் தொடங்கி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடத்தை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் அரசு இறங்கியது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ஓட்டலை அரசு கைப்பற்றியுள்ளது. அதன்படி, ஓட்டலில் வெளி கேட் இழுத்துப் பூட்டப்பட்டு, 'இது தமிழக அரசின் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடம்' என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று காலையிலிருந்து ஓட்டலுக்கு வந்தவர்கள், ஓட்டல் மூடப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். பிரபல பிண்ணனி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், இயக்குனர் வசந்த் மற்றும் பல்வேறு திரையுலகினரும் இந்த ஓட்டலில் பல ஆண்டுகால வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் மிகப்பெரிய பூங்கா, தோட்டக்கலை ஆராய்ச்சி கூடம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

0 comments:

Free Blog CounterLG