Sunday, April 13, 2008

நேபாளத்தில் மாவோயிஸ்ட் ஆட்சி.

காத்மாண்டு: நேபாளத்தில் யாரும் எதிர்பாராத வகையில் மாவோயிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அங்கு மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.


நேபாள நாடாளுமன்றத்திற்கு ஏப்ரல் 10ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடந்து வருகிறது.

மொத்தம் 601 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 43 இடங்களில் 27 தொகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவுக்கு மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதேசமயம், அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து திட்டமிட்டபடி கூட்டணி ஆட்சி அமைக்கப் போவதாகவும், ஜனநாயகம் மலரும் எனவும், அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பல்வேறு கட்சிகளுன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற எங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலுக்கு முன்பு அளித்த உறுதிமொழிகளை காப்பாற்றுவோம். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.

நேபாளம் ஜனநாயக, பெடரல் குடியரசு நாடாக அறிவிக்கப்படும். நாட்டில் சோசலிஷத்தை நிலைநிறுத்த பாடுபடுவோம்.

அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் ஒத்துழைக்க அழைப்பு விடுக்கிறேன்.

நேபாளத்தை வளம் மிக்க, பலம் மிக்க நாடாக மாற்றும் பொறுப்பு எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. அதிலிருந்து நாங்கள் தவற மாட்டோம் என்றார் பிரசந்தா.

மன்னராட்சிக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்ட்டுகள், கடந்த 2006ம் ஆண்டு ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. சிபிஎன்-யுஎம்எல் கட்சி 6 இடங்களிலும், நேபாள தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சி 2 இடங்களிலும், மாதேசி மக்கள் உரிமைக் கழகம் கட்சிக்கு ஒரு இடத்திலும் வெற்றி கிடைத்தது.

மாவோயிஸ்ட் வேட்பாளர்கள் மேலும் 48 தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர்.

0 comments:

Free Blog CounterLG