Friday, May 2, 2008

ஒரே மேடையில் கலைஞர் - ஜெயலலிதா : நடிகர் சங்கம் ஏற்பாடு

ஒரே மேடையில் கலைஞர் - ஜெயலலிதா : நடிகர் சங்கம் ஏற்பாடு

தமிழக அரசியலின் இருதுருவங்களான முதல்வர் கலைஞர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித்தலைவருமான ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமர வைத்து விழா நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவையொட்டி, சென்னையில் மிக பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் ரூ.3 கோடியே 12 லட்சம் கையிருப்பில் உள்ளது. நடிகர் சங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிப்பு பயிற்சி கல்லூரி வருகிற ஜுலை அல்லது ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும். மும்பையில் நடிகர் அனுபம் கேர் மிகச் சிறப்பான முறையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறார். அமெரிக்கா, கனடாவில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேருகிறார்கள். அதுபோன்று தரமான நடிப்பு கல்லூரியை தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கும்.

இப்போது கையிருப்பில் உள்ள பணத்தை தொடாமலே நடிகர் சங்கத்துக்கு, புதிய கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டும் சினிமாவில் நடிக்க வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டிருக்கிறோம்.

தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவை சென்னையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

மலேசியா-சிங்கப்பூரில் நடைபெற்றதை போன்று மாபெரும் நட்சத்திர கலைவிழாவை சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

முன்னதாக, நலிந்த நடிகர் நடிகைகள் 50 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் துணைத் தலைவர் மனோரமா, செயலாளர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை, இணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், நடிகர்கள் சத்யராஜ், முரளி, கே.ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் சார்லி, கே.ராஜன், நடிகைகள் மும்தாஜ், விந்தியா, சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலேசிய முன்னாள் பிரதமர் வலைப்பதிவு எழுதுகிறார்

மலேசிய முன்னாள் பிரதமர் வலைப்பதிவு எழுதுகிறார்

மலேசிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிதாக வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்.

தன்னுடைய கருத்துக்களை எல்லாம் உலக சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் நவீன ஆயுதமாக இணையத் தளங்கள் என்று சொல்லக்கூடிய வலைப் பதிவில் தனது கருத்துக்களை வெளியிடுவதுதான். அந்தப்பட்டியலில் இப்பொழுது மகாதீரும் சேர்ந்துள்ளார்.

'செ டெட்' அல்லது 'மிஸ்டர்.டெட்' என்ற புனை பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் தொடந்து பல கட்டுரைகளை எழுதி வந்தவர் மகாதீர். எனவே மீண்டும் தனது புனை பெயரான ‘செ டெட்’ என்ற பெயரிலேயே வலைத் தளத்தையும் தொடங்கி இருக்கிறார். (http://www.chedet.com/)

82 வயதான மகாதீர், 1981 - முதல் 2003 வரை 22 ஆண்டுகாலம் மலேசியாவின் பிரதமராக இருந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த மகாதீர் மருத்துவம் படித்தவர். சில காலம் அரசு மருத்துவராகவும் பணிபுரிந்தவர்.

அதன்பின் அரசியலில் புகுந்து பிரதமராகி, விவசாய நாடாக இருந்த மலேசியாவை ஒரு முன்னணி தொழிற்துறை நாடாக மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உலக நாடுகளுக்கு மலேசியாவை ஒரு வளமிக்க நாடாக அறிமுகப்படுத்தியவர் மகாதீர்.


தற்போதைய பிரதமர் அப்துல்லா படாவிக்கு எதிராக தனது கருத்துக்களை தயங்காமல் தெரிவித்து வருகிறார். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். படாவியை அடுத்த பிரதமராக கொண்டு வந்ததில் மகாதீருக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற முடியாத படாவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த மார்ச் 8-ல் நடைபெற்ற தேர்தலில் மகாதீரின் புதல்வர் கூட வெற்றி பெற்றார். ஆனால் படாவியை ராஜினாமா செய்யச் சொல்லி தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே தற்போதைய பிரதமருக்கு எதிராக முன்னாள் பிரதமரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதன் தீவிர நடவடிக்கைகளில் ஒன்றுதான், இப்பொழுது மகாதீர் தொடங்கி இருக்கும் வலைத்தளமும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு இணையத் தளங்களின் பங்கு பெரிய அளவில் இருந்தது. இதை பலரும் உணரத் தொடங்கி இருக்கின்றனர். தேர்தல் காலத்தில் “மலேசியாகினி” - என்ற இணையத் தளம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை கட்டுரை வடிவில் வெளியிட்டது. அதற்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான டிஏபி கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங்கும் வலைத் தளத்தில் எழுதி வருகிறார். தேர்தல் சமயத்தில் அவருடைய கருத்துக்கள் பலவும் தனது வலைத் தளம் வழியாகத்தான் பெரும்பான்மை மக்களை சென்றடைந்தது. அதேபோல் மலேசியாவின் வலைத்தள நிபுணர்களில் ஒருவரான ஜெப் ஓய் அரசுக்கு எதிரான அனல் பறக்கும் கருத்துக்களை தனது வலைத் தளத்தில் வெளியிட்டார்.அதனால் அவருக்கு டிஏபி கட்சி சார்பில் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்.

நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் இணையதளங்கள், வலைப் பூக்கள், எஸ்.எம்.எஸ்-கள் இப்படி ஒரு பெரிய "சைபர் யுத்தமே" நடந்தேறியது. அதற்கு மிகப் பெரிய வெற்றியும் கிடைத்தது. அந்த வெற்றியின் சூட்சமத்தை தெரிந்து கொண்ட மகாதீர் தானும் வலைத் தளத்தில் இன்று முதல் களம் இறங்கி இருக்கிறார்.

தன்னுடைய முதல் பதிவே, நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரின் தலையீடு பற்றியதுதான். இதற்கான கருத்துக்களை வாசகர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறார். கடந்த 12 மணி நேரத்தில் 254 பேர் பார்வையிட்டுள்ளனர். ஆனால் வாசகர்கள் யாரும் தமது கருத்துக்களை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் படாவிக்கு எதிரான அதிரடிக் கருத்துக்களை இனி எதிர்பார்க்கலாம்.

தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று _ அமெரிக்கா மதிப்பீடு

தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று _ அமெரிக்கா மதிப்பீடு

தீவிரவாதத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கணித்துள்ளது.

தீவிரவாதம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வருடாந்திர அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அதில் 2007 ம் ஆண்டில் தீவிரவாதத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிரவாத செயல்கள் தற்போது குறைந்து வருகின்றன. ஆனால் அதே சமயம் பாகிஸ்தானில் லஸ்கர் _ இ_ தோய்பா போன்ற தீவிரவாத இயக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மேலும் தாக்குதல்களை நடத்த தொடர்ந்து திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவிலும் ஆப்கானிஸ்தானிலும் தாக்குதல்களை நடத்த தங்களது இயக்கங்களை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் இதில் அல் _ குவைதாவும் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2007 ல் மட்டும் தீவிரவாத தாக்குதல்களில் மொத்தம் 2300 பேர் பலியாகியுள்ளனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.இந்திய அரசின் சட்ட அமலாக்கல் மற்றும் சட்ட முறைகள் தீவிரவாதத்தை ஒடுக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நீதிமன்ற நடைமுறைகள் ஆமை வேகத்தில் இருக்கின்றன. அதோடு அவை ஊழல் மிகுந்ததகாவும் உள்ளன. தீவிரவாத வழக்குகள் முடிவதற்கு ஆண்டு கணக்கில் ஆகிறது. இந்தியாவில் உள்ள உள்ளூர் போலீஸ் படை போதுமான ஆட்கள் இலலாமல் செயல்படுகிறது. போலீசாருக்கு போதுமான பயிற்சிகள் கொடுக்கப்டுவதில்லை. தீவிரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் அளவுக்கு அவர்களுக்கு போதுமான நவீன உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை என்றும அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பிப்ரவரி மாதம் சம்ஜூவதா எக்ஸ்பிரஸ் ரயில் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசாவதார விழா டிரஸ்: சிக்கலில் ஷெராவத்!

தசாவதார விழா டிரஸ்: சிக்கலில் ஷெராவத்!

தசாவதாரம் பட ஆடியோ விழாவுக்கு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்தது மனதைப் புண்படுத்தி விட்டதாக கூறி சென்னையில் மல்லிகா ஷெராவத் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்து மக்கள் கட்சிதான் இந்த வழக்கைப் போட்டுள்ளது. கடந்த 25ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில், தசாவதாரம் பட ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது. முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் கமல்ஹாசன், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், மம்முட்டி, நடிகைகள் மல்லிகா ஷெராவத், ஆசின், ஹேமமாலினி, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகை மல்லிகா ஷெராவத் படு கவர்ச்சிகரமான டிரஸ்ஸில் வந்திருந்தார். ஜாக்கி சானின் நிழல் போல கூடவே இருந்தார். இதுதான் இப்போது வினையாகி விட்டது.

படு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்தது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது. எனவே மல்லிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கனிராஜன் என்பவர் பெரியமேடு போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மல்லிகா ஷெராவத் போட்டு வந்த ஆடை, தமிழ் கலாச்சாரத்திற்கு பெரும் இழிவை ஏற்படுத்தி விட்டது. மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன்.

தேச நலனுக்காகவும், கலாச்சார நெறிமுறைக்காகவும் எங்களது கட்சி பாடுபட்டு வருகிறது. தசாவதாரம் பட விழாவில் ஏராளமான முக்கியப் பிரமுகர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் வந்திருந்தனர்.

முதல்வர் கருணாநிதியும் விழாவில் பங்கேற்றிருந்தார். விழாவுக்கு வந்த பெண்கள் உள்ளிட்டோர் நாகரீகமான உடையில் வந்த நிைலயில் நடிகை மல்லிகா ஷெராவத் மட்டும் குட்டைப் பாவாடையுடன், மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமான கோலத்தில் வந்திருந்தார்.

முதல்வர் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்ததோடு, ஆபாசமான சேஷ்டைகளையும் அவர் செய்தார். இதைப் பார்த்து மனம் புண்பட்டு விட்டது. தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பற்று உள்ளவர்களுக்கு இது மன வேதனையையும், அவமானத்தையும் அளித்தது.

நிகழ்ச்சிக்கு வந்த யாரும் இதை கேட்கவில்லை. எனவே மல்லிகா ஷெராவத் மீதும், அவரை விழாவுக்கு அழைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக இன்று கனிராஜனையும், தசாவதாரம் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனையும் அழைத்து விசாரிப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்துள்ளதாக கனிராஜனின் வக்கீல் தெரிவித்தார்.

ஏற்கனவே சிவாஜி பட விழாவில் கவர்ச்சிகரமான உடையில் வந்ததற்காக நடிகை ஷ்ரியா சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிராக இந்து மக்கள் கட்சி பிரச்சினை கிளப்பியது. பாமகவும் பிரச்சினை எழுப்பியது. இதையடுத்து ஷ்ரியா மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் தற்போது மல்லிகா ஷெராவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கர்நாடகாவில் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தமிழக முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கோலார் தங்கவயல் பகுதி அ.தி.மு.க வேட்பாளராக ஆனந்தராஜ் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக அம்மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க வினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர் இந்நிலையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வேண்டுகோளின் பேரில் அ.தி.மு.க வைச்ச சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ விஸ்வநாதன், சரோஜா, மாநில துணை செயலாளர் சிவசண்முகம், தலைமை கழக பேச்சாளர் குலாப்ஜான், அவைத்தலைவர் சதாசிவம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அகஸ்டின் உள்ளிட்டோர் இப்பகுதியில் முகாமிட்டு அதிமுக வேட்பாளர் ஆனந்தராஜிற்கு ஆதரவாக வீடுவீடாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வேட்பாளருடன் சென்ற முன்னாள் அமைச்சர்களுக்கு இப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து தங்களது வாக்குகளை இரட்டை இலைக்கு செலுத்தி ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தனர்.

சென்னிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் இஸ்ரோவிற்கு பாராட்டு விழா

சென்னிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் இஸ்ரோவிற்கு பாராட்டு விழா

சேலம் 5 ரோட்டில் உள்ள சென்னிஸ் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் 10 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் கடந்த 28 ம் தேதி அனுப்பி சாதனை புரிந்தற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அந்த சாதனையை போற்றும் வகையில் கல்லூரி மாணவர்களின் முயற்சியால் 5 பேர் கொண்ட குழு தலைமையில் 53 கிலோ கேக் 13 கிலோ வெண்ணைகிரீம் பயன்படுத்தி 6 அடி உயரத்தில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் தயாரித்து வைக்கப்பட்டிருந்தது.


இந்த கண்காட்சி வருகிற 2 ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள் சுமார் 250 பேரும் பொதுமக்கள் சுமார் 200 பேரும் நேரில் வந்து கண்டு கழித்து ராக்கெட் வடிவில் தயாரித்த கேக்கை பார்த்து அதை தயாரித்த மாணவர்களை பாராட்டி சென்றனர்.

இது குறித்து கல்லூரி முதல்வர் கதிரவன் கூறும்போது இஸ்ரோ வின் சாதனையை இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமை படவேண்டும். தீபாவளி, பொங்கல், கிருஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளையும் கொண்டாடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மொய்க்குப் பதில் ரத்ததானம்-வேலூரில் புதுமை திருமணம்

மொய்க்குப் பதில் ரத்ததானம்-வேலூரில் புதுமை திருமணம்

வேலூர்: வேலூரில் நடந்த ஒரு திருமணத்தில், திருமணம் முடிந்த பின்னர் மொய் எழுதுவதற்குப் பதில் மணமக்கள் உள்பட திருமண வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் ரத்ததானம் செய்த புதுமை நடந்துள்ளது.

கல்யாணம் என்றால் தாலி கட்டிய அடுத்த நிமிடமே ஆளுக்கு ஒரு பக்கமாக டேபிளைப் போட்டு மஞ்சள் பை, பேனா சகிதம் மணமக்கள் வீட்டால் மொய் எழுத உட்காருவது வழக்கம்.

அதிலும் சில பகுதிகளில் மைக் கட்டி, முத்துக்கருப்பு 300 ரூபாய், முனியாண்டி 500 ரூபாய் என்று அனவுன்ஸ் செய்வதும் வழக்கமாக உள்ளது.

ஆனால் வேலூரில் நடந்த ஒரு திருமணம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு படு வித்தியாசமாக நடந்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. காரணம், இந்தக் கல்யாணத்தின் முடிவில் மொய் எழுதுவதற்குப் பதில் அனைவரும் ரத்ததானம் செய்துததான்.

வேலூரைச் சேர்ந்த டெல்லி பாபு மற்றும் சிவரஞ்சனி ஆகியோரின் திருமணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது. கல்யாண அழைப்பிதழில் கண்டிப்பாக மொய் எழுதக் கூடாது என்று போடுவதற்குப் பதில், கண்டிப்பாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி நேற்று கல்யாணம் நடந்தேறியது. எந்தவித ஆடம்பர, அமர்க்களங்கள் ஏதுமின்றி பத்தே நிமிடத்தில் கல்யாணத்தை முடித்து விட்டனர். பின்னர் ரத்ததானம் தொடங்கியது. மணமகன் டெல்லி பாபு, மணமகள் சிவரஞ்சனி உள்பட மொத்தம் 35 பேர் ரத்ததானம் செய்தனர்.

மேலும் நேற்று சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், 35 பெண் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மணமக்கள் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.

மேலும் மணமகன் டெல்லி பாபு எழுதிய கவிதை நூலும் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்குத் தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

டெல்லிபாபுதான் இந்த ரத்ததான யோசனைக்கு மூல காரணம். ஆனால் அவருக்கு உத்வேகமாக இருந்தவர் சந்திரசேகரன். இவர் 1977ம் ஆண்டுகல்யாணம் செய்தபோது இப்படித்தான் ரத்ததானம் செய்தார். அவர்தான் தமிழகத்திலேயே திருமணத்தின்போது மொய்க்குப் பதில் ரத்ததானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள்.

சந்திரசேகரனின் செயலால் மிகவும் கவரப்பட்ட டெல்லி பாபு, தானும் அதுபோலவே செய்ய முடிவு செய்தே நேற்றைய திருமணத்தில் ரத்ததானத்தை நடத்தி அனைவரையும் வியக்க வைத்தார்.

மொய்யை நிராகரித்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பரப்பிய இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றுதான்.

Free Blog CounterLG