மொய்க்குப் பதில் ரத்ததானம்-வேலூரில் புதுமை திருமணம்
வேலூர்: வேலூரில் நடந்த ஒரு திருமணத்தில், திருமணம் முடிந்த பின்னர் மொய் எழுதுவதற்குப் பதில் மணமக்கள் உள்பட திருமண வீட்டிற்கு வந்திருந்த அனைவரும் ரத்ததானம் செய்த புதுமை நடந்துள்ளது.
கல்யாணம் என்றால் தாலி கட்டிய அடுத்த நிமிடமே ஆளுக்கு ஒரு பக்கமாக டேபிளைப் போட்டு மஞ்சள் பை, பேனா சகிதம் மணமக்கள் வீட்டால் மொய் எழுத உட்காருவது வழக்கம்.
அதிலும் சில பகுதிகளில் மைக் கட்டி, முத்துக்கருப்பு 300 ரூபாய், முனியாண்டி 500 ரூபாய் என்று அனவுன்ஸ் செய்வதும் வழக்கமாக உள்ளது.
ஆனால் வேலூரில் நடந்த ஒரு திருமணம் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு படு வித்தியாசமாக நடந்து அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. காரணம், இந்தக் கல்யாணத்தின் முடிவில் மொய் எழுதுவதற்குப் பதில் அனைவரும் ரத்ததானம் செய்துததான்.
வேலூரைச் சேர்ந்த டெல்லி பாபு மற்றும் சிவரஞ்சனி ஆகியோரின் திருமணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடந்தது. கல்யாண அழைப்பிதழில் கண்டிப்பாக மொய் எழுதக் கூடாது என்று போடுவதற்குப் பதில், கண்டிப்பாக ரத்ததானம் செய்ய வேண்டும் என்று அன்புடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி நேற்று கல்யாணம் நடந்தேறியது. எந்தவித ஆடம்பர, அமர்க்களங்கள் ஏதுமின்றி பத்தே நிமிடத்தில் கல்யாணத்தை முடித்து விட்டனர். பின்னர் ரத்ததானம் தொடங்கியது. மணமகன் டெல்லி பாபு, மணமகள் சிவரஞ்சனி உள்பட மொத்தம் 35 பேர் ரத்ததானம் செய்தனர்.
மேலும் நேற்று சர்வதேச தொழிலாளர் தினம் என்பதால், 35 பெண் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு மணமக்கள் சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டது.
மேலும் மணமகன் டெல்லி பாபு எழுதிய கவிதை நூலும் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனத்திற்குத் தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டெல்லிபாபுதான் இந்த ரத்ததான யோசனைக்கு மூல காரணம். ஆனால் அவருக்கு உத்வேகமாக இருந்தவர் சந்திரசேகரன். இவர் 1977ம் ஆண்டுகல்யாணம் செய்தபோது இப்படித்தான் ரத்ததானம் செய்தார். அவர்தான் தமிழகத்திலேயே திருமணத்தின்போது மொய்க்குப் பதில் ரத்ததானம் செய்யும் பழக்கத்தை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள்.
சந்திரசேகரனின் செயலால் மிகவும் கவரப்பட்ட டெல்லி பாபு, தானும் அதுபோலவே செய்ய முடிவு செய்தே நேற்றைய திருமணத்தில் ரத்ததானத்தை நடத்தி அனைவரையும் வியக்க வைத்தார்.
மொய்யை நிராகரித்து ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை பரப்பிய இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும் ஒன்றுதான்.
Friday, May 2, 2008
மொய்க்குப் பதில் ரத்ததானம்-வேலூரில் புதுமை திருமணம்
Posted by udanadi at 5/02/2008 11:45:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment