Friday, May 2, 2008

மலேசிய முன்னாள் பிரதமர் வலைப்பதிவு எழுதுகிறார்

மலேசிய முன்னாள் பிரதமர் வலைப்பதிவு எழுதுகிறார்

மலேசிய முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் புதிதாக வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்.

தன்னுடைய கருத்துக்களை எல்லாம் உலக சமுதாயத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் நவீன ஆயுதமாக இணையத் தளங்கள் என்று சொல்லக்கூடிய வலைப் பதிவில் தனது கருத்துக்களை வெளியிடுவதுதான். அந்தப்பட்டியலில் இப்பொழுது மகாதீரும் சேர்ந்துள்ளார்.

'செ டெட்' அல்லது 'மிஸ்டர்.டெட்' என்ற புனை பெயரில் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் தொடந்து பல கட்டுரைகளை எழுதி வந்தவர் மகாதீர். எனவே மீண்டும் தனது புனை பெயரான ‘செ டெட்’ என்ற பெயரிலேயே வலைத் தளத்தையும் தொடங்கி இருக்கிறார். (http://www.chedet.com/)

82 வயதான மகாதீர், 1981 - முதல் 2003 வரை 22 ஆண்டுகாலம் மலேசியாவின் பிரதமராக இருந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த மகாதீர் மருத்துவம் படித்தவர். சில காலம் அரசு மருத்துவராகவும் பணிபுரிந்தவர்.

அதன்பின் அரசியலில் புகுந்து பிரதமராகி, விவசாய நாடாக இருந்த மலேசியாவை ஒரு முன்னணி தொழிற்துறை நாடாக மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர். உலக நாடுகளுக்கு மலேசியாவை ஒரு வளமிக்க நாடாக அறிமுகப்படுத்தியவர் மகாதீர்.


தற்போதைய பிரதமர் அப்துல்லா படாவிக்கு எதிராக தனது கருத்துக்களை தயங்காமல் தெரிவித்து வருகிறார். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். படாவியை அடுத்த பிரதமராக கொண்டு வந்ததில் மகாதீருக்கும் பெரும் பங்கு உண்டு. ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பெற முடியாத படாவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கடந்த மார்ச் 8-ல் நடைபெற்ற தேர்தலில் மகாதீரின் புதல்வர் கூட வெற்றி பெற்றார். ஆனால் படாவியை ராஜினாமா செய்யச் சொல்லி தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே தற்போதைய பிரதமருக்கு எதிராக முன்னாள் பிரதமரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதன் தீவிர நடவடிக்கைகளில் ஒன்றுதான், இப்பொழுது மகாதீர் தொடங்கி இருக்கும் வலைத்தளமும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்துக்கு இணையத் தளங்களின் பங்கு பெரிய அளவில் இருந்தது. இதை பலரும் உணரத் தொடங்கி இருக்கின்றனர். தேர்தல் காலத்தில் “மலேசியாகினி” - என்ற இணையத் தளம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை கட்டுரை வடிவில் வெளியிட்டது. அதற்கு வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதேபோல் மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான டிஏபி கட்சியின் தலைவர் லிம் கிட் சியாங்கும் வலைத் தளத்தில் எழுதி வருகிறார். தேர்தல் சமயத்தில் அவருடைய கருத்துக்கள் பலவும் தனது வலைத் தளம் வழியாகத்தான் பெரும்பான்மை மக்களை சென்றடைந்தது. அதேபோல் மலேசியாவின் வலைத்தள நிபுணர்களில் ஒருவரான ஜெப் ஓய் அரசுக்கு எதிரான அனல் பறக்கும் கருத்துக்களை தனது வலைத் தளத்தில் வெளியிட்டார்.அதனால் அவருக்கு டிஏபி கட்சி சார்பில் தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டு வெற்றியும் பெற்றார்.

நடந்து முடிந்த மலேசிய தேர்தலில் இணையதளங்கள், வலைப் பூக்கள், எஸ்.எம்.எஸ்-கள் இப்படி ஒரு பெரிய "சைபர் யுத்தமே" நடந்தேறியது. அதற்கு மிகப் பெரிய வெற்றியும் கிடைத்தது. அந்த வெற்றியின் சூட்சமத்தை தெரிந்து கொண்ட மகாதீர் தானும் வலைத் தளத்தில் இன்று முதல் களம் இறங்கி இருக்கிறார்.

தன்னுடைய முதல் பதிவே, நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரின் தலையீடு பற்றியதுதான். இதற்கான கருத்துக்களை வாசகர்களிடமிருந்தும் கேட்டிருக்கிறார். கடந்த 12 மணி நேரத்தில் 254 பேர் பார்வையிட்டுள்ளனர். ஆனால் வாசகர்கள் யாரும் தமது கருத்துக்களை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் படாவிக்கு எதிரான அதிரடிக் கருத்துக்களை இனி எதிர்பார்க்கலாம்.

0 comments:

Free Blog CounterLG