ஒரே மேடையில் கலைஞர் - ஜெயலலிதா : நடிகர் சங்கம் ஏற்பாடு
தமிழக அரசியலின் இருதுருவங்களான முதல்வர் கலைஞர் கருணாநிதியையும், முன்னாள் முதல்வரும் எதிர்க் கட்சித்தலைவருமான ஜெயலலிதாவையும் ஒரே மேடையில் அமர வைத்து விழா நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவையொட்டி, சென்னையில் மிக பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியதன் மூலம் ரூ.3 கோடியே 12 லட்சம் கையிருப்பில் உள்ளது. நடிகர் சங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிப்பு பயிற்சி கல்லூரி வருகிற ஜுலை அல்லது ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும். மும்பையில் நடிகர் அனுபம் கேர் மிகச் சிறப்பான முறையில் நடிப்பு பயிற்சி கல்லூரியை நடத்தி வருகிறார். அமெரிக்கா, கனடாவில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்து சேருகிறார்கள். அதுபோன்று தரமான நடிப்பு கல்லூரியை தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கும்.
இப்போது கையிருப்பில் உள்ள பணத்தை தொடாமலே நடிகர் சங்கத்துக்கு, புதிய கட்டிடம் கட்டப்படும். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டும் சினிமாவில் நடிக்க வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தை கேட்டிருக்கிறோம்.
தமிழ் சினிமாவின் 75-வது வருட பவளவிழாவை சென்னையில் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.
மலேசியா-சிங்கப்பூரில் நடைபெற்றதை போன்று மாபெரும் நட்சத்திர கலைவிழாவை சென்னையில் நடத்த தீர்மானித்திருக்கிறோம்.இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரையும் அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.
இவ்வாறு சரத்குமார் கூறினார்.
முன்னதாக, நலிந்த நடிகர் நடிகைகள் 50 பேருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் துணைத் தலைவர் மனோரமா, செயலாளர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை, இணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், நடிகர்கள் சத்யராஜ், முரளி, கே.ரித்திஷ், எஸ்.எஸ்.சந்திரன் சார்லி, கே.ராஜன், நடிகைகள் மும்தாஜ், விந்தியா, சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Friday, May 2, 2008
ஒரே மேடையில் கலைஞர் - ஜெயலலிதா : நடிகர் சங்கம் ஏற்பாடு
Posted by udanadi at 5/02/2008 12:29:00 PM
Labels: இருதுருவம், கலைஞர், சங்கம், நடிகர், ஜெயலலிதா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment