Friday, May 23, 2008

முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு மே 30ல் இந்திய அணி தேர்வு.

வங்கதேசத்தில் நடைபெறும் முத்தரப்பு ஒரு நாள் தொடர், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி வரும் 30ம் தேதி தேர்வு செய்யப்படுகிறது.இதற்காக இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் நிரஞ்சன் ஷா தெரிவித்தார்.ஐ.பி.எல். போட்டிகளில் அபாரமாக விளையாடும் வீரர்களு‌க்கு நிச்சயமாக ஒரு நாள் அணியில் தேர்வாக வாய்ப்பிருக்கிறது என்று தேர்வாளர் புபீந்தர் சிங் தெரிவித்தார்.ஆனால் அனைத்துத் தேர்வுக் குழு உறுப்பினர்களும் இதனை ஏற்கவில்லை. ஏற்கனவே இந்திய ஒரு நாள் அணி பலமாகவே உள்ளது, இதனால் ஐ.பி.எல். போட்டிகளில் திறமையை நிரூபித்துள்ள புது வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைய சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று மத்திய மண்டல தேர்வாளர் ஜக்தாலே கூறியுள்ளார்.

குஜராத் கலவர நஷ்ட ஈடு அதிகரிப்பு

குஜராத் கலவர நஷ்ட ஈடு அதிகரிப்பு


குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க ரூ.330 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலாக நிவாரணத் தொகை வழங்கவும், சேதமான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவும், காப்பீடு செய்யப்படாத கடைகளுக்கு (கலவரத்தில் சேதமானவை) இழப்பீடு வழங்கவும், இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுக்கு இணையாக, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

குஜராத் கலவரத்தில் 1169 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ. 3.5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். குஜராத் மாநில அரசு வழங்கிய தொகையைத் தவிர மத்திய அரசின் இந்தத் தொகையும் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்தார்.

கலவரத்தில் காயமடைந்த 2548 பேருக்கு தலா ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். கலவரக்காரர்களால் சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு, மாநில அரசு கொடுத்தத் தொகையைப் போல 10 மடங்கு இழப்பீட்டுத் தொகை தரப்படும் என்றார் சிதம்பரம்.

கல்வி நிறுவனங்களுக்கு ரூ.10,328 கோடி

உயர் கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,328 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனால் இந்த கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரிக்கும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றும் முயற்சியாக மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதை முடிவு செய்தது. மத்திய பல்கலைக்கழகங்கள், நிர்வாகவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்காக ரூ.10,328 கோடியை ஒதுக்க கொள்கை அளவில் அரசு இந்த கூட்டத்தில் முடிவு செய்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதால், பொதுப்பட்டியல் மாணவர்களுக்கான இடங்கள் குறையாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
லோக்பால் மசோதா

அரசு அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்கும் அதிகாரியை (ஆம்புட்ஸ்மேன்) நியமிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பற்றி முடிவு ஏதும் எடுக்காமல் அதுபற்றிய முடிவை அமைச்சரவை ஒத்தி வைத்தது.

இதில் சில சட்டப்பிரச்னைகள் எழுப்பப்பட்டதால் இந்த மசோதாவை மீண்டும் பரிசீலிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த மசோதா பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

பிரதமர் பதவியையும் இந்த லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

பிறந்த நாள் கொண்டாட கருணாநிதி சம்மதம்

பிறந்த நாள் கொண்டாட கருணாநிதி சம்மதம்


தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாட முதல்வர் கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளன்று என்னைக் காண வருவது, வாழ்த்த வருவது, நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் நான் சென்னையில் இருக்க மாட்டேன் என்று மே 13-ம் தேதி முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

என் மனநிலை, உடல்நிலை கருதி வாழ்த்துகளை ஏற்றிடும் பணியிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனாலும் திமுகவினர் கருணாநிதியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்படுகள் செய்து வந்தனர். திமுகவில் எத்தனை விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதுதான் திமுக தொண்டர்கள் மிகுந்த எழுச்சி பெறுகிறார்கள். எனவே நாடே வியக்கும் வண்ணம் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் நிதி அமைச்சருமான க. அன்பழகன் திமுகவினரை கேட்டுக் கொண்டார்.

தாய் கழகம் என்ற முறையில் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடும் உரிமை திராவிடர் கழகத்துக்கு உண்டு. அதனை மறுக்கக் கூடாது என்று திக தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டிருந்தார்.

கவிதை மூலம் சம்மதம்: இந்நிலையில் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட கவிதையில் தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் அன்பழகனின் ஆணையை ஏற்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் வேண்டுகோளை ஏற்றும், பல லட்சம் உடன்பிறப்புகளின் அன்புக்கு பணிந்தும் ""தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண ஒப்பிவிட்டேன்!, உன் வாழ்த்தினையேற்று என் வணக்கமும் வாழ்த்தும், வட்டியும் முதலுமாய் வழங்குவதற்கே!'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Free Blog CounterLG