Friday, May 23, 2008

பிறந்த நாள் கொண்டாட கருணாநிதி சம்மதம்

பிறந்த நாள் கொண்டாட கருணாநிதி சம்மதம்


தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாட முதல்வர் கருணாநிதி சம்மதம் தெரிவித்துள்ளார்.

பிறந்த நாளன்று என்னைக் காண வருவது, வாழ்த்த வருவது, நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அந்த வாரம் முழுவதும் நான் சென்னையில் இருக்க மாட்டேன் என்று மே 13-ம் தேதி முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

என் மனநிலை, உடல்நிலை கருதி வாழ்த்துகளை ஏற்றிடும் பணியிலிருந்து எனக்கு விலக்கும் ஓய்வும் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆனாலும் திமுகவினர் கருணாநிதியின் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்படுகள் செய்து வந்தனர். திமுகவில் எத்தனை விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதுதான் திமுக தொண்டர்கள் மிகுந்த எழுச்சி பெறுகிறார்கள். எனவே நாடே வியக்கும் வண்ணம் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளரும் நிதி அமைச்சருமான க. அன்பழகன் திமுகவினரை கேட்டுக் கொண்டார்.

தாய் கழகம் என்ற முறையில் கருணாநிதியின் பிறந்தநாளைக் கொண்டாடும் உரிமை திராவிடர் கழகத்துக்கு உண்டு. அதனை மறுக்கக் கூடாது என்று திக தலைவர் கி. வீரமணி கேட்டுக் கொண்டிருந்தார்.

கவிதை மூலம் சம்மதம்: இந்நிலையில் முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை வெளியிட்ட கவிதையில் தனது 85-வது பிறந்தநாளைக் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் அன்பழகனின் ஆணையை ஏற்றும், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் வேண்டுகோளை ஏற்றும், பல லட்சம் உடன்பிறப்புகளின் அன்புக்கு பணிந்தும் ""தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண ஒப்பிவிட்டேன்!, உன் வாழ்த்தினையேற்று என் வணக்கமும் வாழ்த்தும், வட்டியும் முதலுமாய் வழங்குவதற்கே!'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG