குஜராத் கலவர நஷ்ட ஈடு அதிகரிப்பு
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க ரூ.330 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை தில்லியில் நடந்தது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதலாக நிவாரணத் தொகை வழங்கவும், சேதமான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவும், காப்பீடு செய்யப்படாத கடைகளுக்கு (கலவரத்தில் சேதமானவை) இழப்பீடு வழங்கவும், இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுக்கு இணையாக, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.
குஜராத் கலவரத்தில் 1169 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தாருக்கு தலா ரூ. 3.5 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். குஜராத் மாநில அரசு வழங்கிய தொகையைத் தவிர மத்திய அரசின் இந்தத் தொகையும் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்தார்.
கலவரத்தில் காயமடைந்த 2548 பேருக்கு தலா ரூ.1.25 லட்சம் வழங்கப்படும். கலவரக்காரர்களால் சேதமாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளருக்கு, மாநில அரசு கொடுத்தத் தொகையைப் போல 10 மடங்கு இழப்பீட்டுத் தொகை தரப்படும் என்றார் சிதம்பரம்.
கல்வி நிறுவனங்களுக்கு ரூ.10,328 கோடி
உயர் கல்வி நிறுவனங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.10,328 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதனால் இந்த கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரிக்கும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றும் முயற்சியாக மத்திய அரசு இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் இதை முடிவு செய்தது. மத்திய பல்கலைக்கழகங்கள், நிர்வாகவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்காக ரூ.10,328 கோடியை ஒதுக்க கொள்கை அளவில் அரசு இந்த கூட்டத்தில் முடிவு செய்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதால், பொதுப்பட்டியல் மாணவர்களுக்கான இடங்கள் குறையாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
லோக்பால் மசோதா
அரசு அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்கும் அதிகாரியை (ஆம்புட்ஸ்மேன்) நியமிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா பற்றி முடிவு ஏதும் எடுக்காமல் அதுபற்றிய முடிவை அமைச்சரவை ஒத்தி வைத்தது.
இதில் சில சட்டப்பிரச்னைகள் எழுப்பப்பட்டதால் இந்த மசோதாவை மீண்டும் பரிசீலிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இந்த மசோதா பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
பிரதமர் பதவியையும் இந்த லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டுமா என்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
Friday, May 23, 2008
குஜராத் கலவர நஷ்ட ஈடு அதிகரிப்பு
Posted by udanadi at 5/23/2008 10:05:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment