Wednesday, April 23, 2008

டிஎன்ஏ பரிசோதனை முடிவு: ஃபர்கத் பேகத்துக்கு ஆண் குழந்தை

சென்னை மருத்துவமனையில் குழந்தைகள் மாறிய பிரச்னையில் ஃபர்கத் பேகத்துக்குத்தான் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது என டிஎன்ஏ பரிசோதனையில் ஊர்ஜிதமாகியுள்ளது.

காமாட்சிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது என்று டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆறு தினங்களாக நீடித்து வந்த ஆண் - பெண் குழந்தைகள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இதை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் தலைமை அமைப்பான அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் மைதிலி பாஸ்கரன் புதன்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஃபர்கத் பேகத்திடம் ஆண் குழந்தையையும் காமாட்சியிடம் பெண் குழந்தையையும் அவர் ஒப்படைத்தார்.

முன்னதாக ஒரே வார்டில் அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த இந்த குழந்தைகள் செவிலியர்களின் கவனக்குறைவுக் காரணமாக மாற்றி வைத்துவிட்டனர்.

புதிய பெயரில் கட்சி தொடக்கம்?

மாசில்லா மதிமுக அல்லது புதிய பெயரில் கட்சி தொடங்குவது குறித்து மாவட்டம்தோறும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றார் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எல். கணேசன்.
சிறுநீரகக் கோளாறு காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
வைகோ அதிமுகவில் இணைந்தால், அடுத்த நாளே நாங்கள் திமுகவில் இணைவோம். வைகோ திமுகவில் இணைந்தால் அதை வரவேற்று நாங்களும் அவருடன் சேர்ந்து திமுகவில் இணைவோம் என்றார் எல். கணேசன்.

தமிழுக்கு அவமானம்: நெல்லை கண்ணன்

விவேகானந்தர் நினைவு இல்லத்தை அகற்றுவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் இலக்கியவாதி நெல்லை கண்ணன்.

இதுகுறித்து நெல்லை கண்ணன் மேலும் கூறியதாவது:

"சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் சார்பில் விவேகானந்தர் உரையாற்றச் சென்றபோது, அவருக்குச் செலவு செய்து அவரை சிகாகோவுக்கு அனுப்பிவைத்தது ராமநாதபுரம் மன்னர் தமிழ்வளர்த்த பாஸ்கர சேதுபதி.
அவரை அனுப்பிவைத்தது மட்டுமல்ல, அத்தனை பெரிய வெற்றியை அமெரிக்க மண்ணில் அடைந்து வருகிற விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் கப்பலில் வந்து இறங்க வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற்பாடு செய்தார்.

பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் இறங்கும் நேரத்தில் உணர்ச்சிவயப்பட்ட மன்னர் கீழே அமர்ந்து, "என் தலையில் தங்களின் திருப்பாதங்களை வைத்து இறங்க வேண்டும்' என்றார் விவேகானந்தரிடம். ஆனால், விவேகானந்தரோ மன்னரின் தலையில் கைவைத்து தாண்டி வந்தார். பின்னர், விவேகானந்தர் ஏறிய குதிரை வண்டியை குதிரைக்குப் பதில் தானே இழுத்தார் மன்னர்.

அப்படி தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மன்னர் சேதுபதியால் வணங்கப்பட்ட விவேகானந்தரின் மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை அமைப்பது என்பது மன்னர் பாஸ்கர் சேதுபதியையும் அவமதிப்பதாகும்.
அதுவரை உலகத்தில், ""சீமான்களே, சீமாட்டிகளே'' என அழைத்து வந்ததை மாற்றி ""சகோதர, சகோதரிகளே'' என்று பேசியவர் வீரத்துறவி விவேகானந்தர். விவேகானந்தரை உலகம் அறியச் செய்தது சேதுபதி மன்னர்தான்.

அப்படிப்பட்ட விவேகானந்தரின் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை ஏற்படுத்தினால், தமிழ் மன்னரால் உலகிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரனின், அறிஞனின், ஒரு சமூக விஞ்ஞானியின் பெருமையை தமிழர்கள் இழிவுபடுத்தினார்கள் என்ற களங்கம் நமக்கு வந்து சேரும். அந்த அவமானம் தமிழர்களுக்குச் சேருவதை தமிழக அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும். "

"ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர். அப்படிப்பட்டவரது நினைவு இல்லத்தை அப்புறப்படுத்துவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் நெல்லை கண்ணன்.

கிராம நூலகத்திலும் இணையம்

கணிப்பொறி மூலம் நூலகங்களை இணைக்க அரசு படிப்படியாகத் திட்டம் தீட்டி வருகிறது. மாவட்ட நூலகங்களில் உள்ள இன்டர்நெட் இணைப்பு வசதிகளைப் போல் கிளை நூலகங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகளைம் அரசு மேற்கொண்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழகச் சட்டசபையில் ஏப்ரல் 21 அன்று, கேள்வி நேரத்தின் போது எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன் (பண்ருட்டி, பா.ம.க.), கோவிந்தசாமி (திருப்பூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சி.வி.சண்முகம் (திண்டிவனம், அ.தி.மு.க.), ஹசன்அலி (ராமநாதபுரம், காங்கிரஸ்), அப்பாவு (ராதாபுரம், தி.மு.க.) ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துப் பேசிவதாவது:-

"கடலூர் மாவட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பகுதி நேர நூலகம் திறக்க பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் சில வாரங்களில் ஆவன செய்யப்படும். மக்கள் தொகை அடிப்படையில் பகுதி நேர நூலகம் தொடங்கப்படுகிறது. தற்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள முயற்சியால், பஞ்சாயத்துகளில் கூட கிராமம் தோறும் நூலகங்களைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கம்ப்யூட்டர் மூலம் நூலகங்களை இணைக்க அரசு படிப்படியாகத் திட்டம் தீட்டி வருகிறது. மாவட்ட நூலகங்களில் உள்ள இன்டர்நெட் இணைப்பு வசதிகளைப் போல் கிளை நூலகங்களிலும் உருவாக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது".

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம்

தாஜ்மஹாலைச் சென்று பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணமாக, இந்திய குடிமக்களிடம் வசூலிக்கப்படும் தொகையே, சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடமும் இனி வசூலிக்கப்படும் என்று மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திருமதி அம்பிகா சோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம், இந்தியர்களிடமிருந்து ரூ.10 ஐ நுழைவுக் கட்டணமாக வசூலிப்பதாகவும் இனி இத்தொகையே சார்க் நாடுகள் மற்றும் பிம்ஸ்டெக் (பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து பொருளாதார கூட்டமைப்பு) நாடுகளைச் சேர்ந்த குடிமக்களிடமும் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடம் நபர் ஒன்றுக்கு ரூ.250 வீதம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆக்ரா வளர்ச்சி ஆணையம் சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகள் உள்ளிட்ட அனைத்து அயல்நாட்டு பயணிகளிடமும் ரூ.500 ஐயும், இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் ரூ.10 ஐயும் சுங்க வரியாக வசூலிக்கிறது. கடந்த மாதம் 5 ஆம் தேதியன்று இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம்,

தாஜ்மஹாலின் நுழைவுக் கட்டணம் தொடர்பாக வெளியிட்டுள்ள குறிப்பாணை இந்நிறுவனத்தின் நுழைவுக் கட்டணத்துக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆக்ரா வளர்ச்சி ஆணையம் வசூலிக்கும் தீர்வைக்குப் பொருந்தாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் திருமதி அம்பிகா சோனி இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

நேபாளியில் காட்சிகள் நீக்கம்

'நேபாளி' திரைப்படத்தில் காவல் துறையை அவமதிக்கும் காட்சிகளை நீக்குவதற்கு, அந்தப் படத்தின் இயக்குநர் துரை சம்மதம் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் ரவியை நேரில் சந்தித்து அவர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

நடிகர் பரத், நடிகை மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து வெளியான 'நேபாளி' திரைப்படத்தில் போலீசை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், அதை நீக்கிவிட்டு படத்தை திரையிட வேண்டுமென்றும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், சென்னை மாநகரக் காவல் துறை இணை ஆணையர் ரவி, தனது வக்கீல் மூலம், படத்தின் இயக்குநர் துரைக்கு அறிவிக்கை (நோட்டீசு) அனுப்பினார். இதையடுத்து, 22.4.2008 அன்று மதியம் 1 மணியளவில் இணை கமிஷனர் ரவியை அவரது அலுவலகத்தில் இயக்குநர் துரை சந்தித்துப் பேசினார். தன் படத்தில் காவல் துறையை இழிவுபடுத்திக் காட்சிகள் அமைத்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். பின்னர் அத்தகைய அவமதிப்பு காட்சிகளை 'நேபாளி' படத்தில் நீக்கிவிடுவதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார்.

பிறந்த குழந்தையின் கண்ணை எலி தின்றது

கொல்கத்தா அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தையின் கண்ணை எலி தின்றது. செவிலியர்களின் அஞாக்கிரதையால் பிறந்த குழந்தையின் கண்ணை குதறி தின்றது. இந்த துயர சம்பவம் பராஸத் மாவட்ட மருத்துவமனையில் சனிக்கிழமை வேலை நேரத்தில் நடந்துள்ளது. கண்ணை தின்றதோடல்லாமல் முகத்தையும் குதறியது. குழந்தை உடனே இறந்துவிட்டது.

இந்த சம்பவத்தை ஒத்துக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம், இந்த சம்பவத்திற்கு முன்னே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். விசாரணைக்கு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பா.விஜய்யின் 'மட்டரக' பாட்டு-ஜெ கடும் கண்டனம்

அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்க, விஜய் நடிக்க உருவாகி வரும் படம் குருவி.இதில் ஒரு மட்டரகமான பாடலை எழுதியுள்ளார் பா.விஜய்.'தில்லையாடி வள்ளியம்மா.. தில்லிருந்தா நில்லடியம்மா.. தில்லாலங்கடி ஆடுவோமா.. திருட்டுத்தனம் பண்ணுவோமா' என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையான தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் வகையிலான இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதையடுத்து அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் பா.விஜய்யின் இந்த எழுத்துக்கு கண்டனங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,'குருவி' என்ற திரைப் படத்தில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடலை இடம் பெறச் செய்துள்ளனர்.இது தமிழக மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய உணர்வு கொண்ட அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயலாகும்.

குருவி படத்தின் ஒலி நாடா வெளியிட்ட பின்பு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம் பெறாது என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.பாடல் எழுதும்போதே இதனை சிந்தித்திருக்க வேண்டும். எதிர்ப்பு வந்தவுடன் அதற்காக வருத்தம் தெரிவிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.மெட்டுக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.சரித்திரப் புகழ் பெற்றவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும், தமிழுக்காகப் பாடுபட்டவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவது வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கல்கி பகவான் கோவில் விழாவில் நெரிசல் - 2 பேர் பலி

திருப்பதி அருகே கல்கி பகவானின் தங்க நகர விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

திருப்பதி அருகே வரதாபாளையம் என்ற இடத்தில் கல்கி பகவான் தங்க கோவில் நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 400 கோடியில் இந்த நகரம் உருவாகியுள்ளது. நேற்று அதன் திறப்பு விழாவுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கல்கி பகவான் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டதால் பெரும் கூட்டம் கூடியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் அப்பகுதியே பெரும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. கூட்டம் கொஞ்சம் கூட குறையாமல் வந்து கொண்டே இருந்ததால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விழா நடந்த இடத்தில் நிற்கக் கூட முடியாத அளவுக்கு கூட்டம் அதிகம் இருந்தது. இந்த நிலையில் கோவிலின் 2 மற்றும் 3வது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் நிறைய பேர் கூடியதால் அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், நெரிசலும் ஏற்பட்டது.பக்தர்கள் பீதியடைந்து அங்கிருந்து வெளியேற முயன்றனர். அப்போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சீனிவாஸ், வெங்கடேஷ் ஆகிய ஆந்திர மாநில பக்தர்கள் நெரிசலில் சிக்கி மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து தங்கக் கோவில் நகர திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

IPL கிரிக்கெட் போட்டி (Twenty 20)


கிரிக்கெட் வரலாற்றில் முத்திரை பதிக்கும் அளவிற்கு நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்ற IPL கிரிக்கெட் போட்டியின் சென்னையின் முதல் ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியைக் காண ஏராளமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாட்டத்தில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங் அணியின் சின்னம் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கமுன் வைக்கப்பட்டுள்ளதைதான் படத்தில் காண்கிறீர்கள்.

பஞ்சாயத்து அமைச்சகத்திற்கு இந்தியப் பிரதமர் அறிவுறுத்தல்


இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாயத்து நிர்வாகத்தினை மாநில பட்டியலிலிருந்து இணைப் பட்டியலுக்கோ அல்லது மத்தியப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துரையினை பஞ்சாயத்து நிர்வாகிகள் மாநாட்டின் வரைவு சாசனத்திலிருந்து நீக்கவேண்டும் என பஞ்சாயத்து அமைச்சகத்திற்கு தான் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாயத்துகளை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு சென்றுவிட்டால், அது மாநில அரசின் அதிகார வரம்புகளை குறுக்குவதாகும் என்று கூறி, அப்பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் துவங்கிய மாநாட்டைப் புறக்கணிப்பதாக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வருக்கு பதிலெழுதியிருப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் தனது கடிதத்தில் பஞ்சாயத்துககள் நிலை குறித்து வேறு எந்த விதமாற்றமாக இருந்தாலும், அது தேசிய வளர்ச்சி மன்றம் உள்ளிட்ட பல மட்டங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் மேலும் கூறினார்.

பிரதமரின் பதில் கிடைத்தும் மாநாட்டில தமிழக பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாததால் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

சட்டசபை விவாதத்தின்போது குறுககிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி பஞ்சாயத்துககளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் ஆனால் அதற்காக மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

ஆனால் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் உள்ளாட்சி மன்றங்களின் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக ஆய்ந்துவருபவருமான ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைவே எனக் குறிப்பிட்டார்.

நன்றி : BBC.

அதிபர் வேட்பாளர் போட்டி:பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி

அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பென்சில்வேனியாயில் நடந்த ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றார்.இதன்மூலம், இந்த மாகாணத்தில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட ஹிலாரிக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது.


இந்த மாகாணத்தில் இதுவரை வெளியான முடிவுகளில், 54 சதவிகித வாக்குகளை ஹிலாரி கைப்பற்றியுள்ள நிலையில், அவருக்கு கடும் போட்டியாகவுள்ள பராக் ஒபாமா 46 சதவிகித ஆதரவினைப் பெற்றுள்ளார். இவ்வெற்றி குறித்து ஹிலாரி கூறுகையில், "இந்தப் போட்டியில் இருந்து விலகிட வேண்டும் என்று சிலர் அறிவுரை கூறினர். ஆனால், அமெரிக்க மக்களுக்கு யார் தகுதியுடைய அதிபர் என்பது தெரியும்" என்றார். பென்சில்வேனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றாலும், ஒட்டுமொத்த முடிவுகளில் ஒபாமாவே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். ஒபாமா இதுவரை 1,648 பிரதிநிதிகளின் ஆதரவினை தன்னகத்தே கொண்டுள்ளார்; அவரைக் காட்டிலும் சற்று பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,509 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் மின்கட்டணம் செலுத்த புதிய நடைமுறை

சென்னை, ஏப். 22- தமிழகத்தின் எந்தப் பகுதிக்கு உரிய மின் கட்டணத்தையும் எந்தப் பகுதியில் உள்ள அலுவலகத்திலும் செலுத்தும் நிலை இன்னும் மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று ஆர்க்காடு வீராசாமி தெரி வித்தார்.சென்னை ஏழுகிணறில் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ 28 லட்ச செலவில் கணினி மின்கட்டண வசூல் மய்ய திறப்பு விழா நேற்று நடந்தது. பேராசிரியர் அன்பழகன் திறந்து வைத்தார். அப்போது ஆர்க்காடு வீராசாமி தலைமையேற்றுப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கட்டண வசூலிப்பு மய்யங்கள் கணினி மயமாக்கப்பட்டு வரு கிறது. வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும். அதன் பின் தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் உரிய மின் கட்டணத்தையும், எந்தப் பகுதியிலும் செலுத்தும் வசதி நடைமுறைக்கு வரும். மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வருகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தி செய்ய வெளிநாட்டினர், தொழில் அதிபர்கள் முன்வந்துள்ளனர். மொத்தம் 50 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் திட்டமுள்ளது. இந்தியாவின் மின் தேவையில் பெரும் பகுதியை தமிழகம் நிறைவேற்றும் நிலை ஏற்படும். இவ்வாறு ஆர்க்காடு வீராசாமி பேசினார்

சாலையோர கடைகளிலும் ரயில் டிக்கெட் வாங்கலாம்

'ஜன சாதாரண டிக்கெட் புக்கிங்' என்ற பெயரில் சாலையோர கடைகளிலும் ரயில்வே டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை ரயில்வே தொடங்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. சாதாரண ரயில்களிலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலும் பயணம் செய்ய ஸ்டேஷனில் கடைசி நேர டென்ஷனுடன் வரிசையில் காத்திருக்க தேவை யில்லை. இதற்கான ரயில் டிக்கெட்களை நகர பகுதிகளில் சாதாரண சாலையோர கடை களிலும் கிடைக்க செய்யும் வகையில் ஜன சாதாரண் டிக் கெட் புக்கிங் என்ற பெயரில் தனியார் மையங்களுக்கு அனுமதி வழங்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு நகரங்களில் முன்பதிவு செய்யப் படாத ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்ய ஜன சாதா ரண சேவை மையங்களுக்கு அனுமதி வழங்கப்படும். எஸ்.டி.டி. பூத்கள் போன்று பல்வேறு இடங்களில் ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்யும் மையங்களை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டம். நிலைய கவுண்டர்களில் ரயில்கள் வந்து செல்லும் வேளை யில் உள்ள பயணிகள் நெருக்கடியை குறைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் லட்சக்கணக்கான வேலை இல்லாதவர்களுக்கு புது வாய்ப்பு கிடைக்கும்.முதல்கட்டமாக 2 வருடத்துக்கு இதற்கான அனுமதி வழங்கப்படும். பின்னர் இந்த அனுமதி நீட்டித்து வழங்கப்படும். அண்மையில் வெளியிடப்பட்ட ரயில்வே பட் ஜெட்டில் சுட்டிக்காட்டியிருந்த இதுபோன்ற சேவை மையங்களுக்கான விண்ணப்பங்கள், விவரங்கள் அடங்கிய ரயில்வேயின் அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன

மே மாதம் திரைக்கு வருகிறது தசாவதாரம்.



உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம் மெகா பட்ஜெட் படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வரும் மே மாதம் திரைக்கு வருகிறது.இதற்கிடையே எதிர் வரும் 25(ஏப்ரல்) ஆம் தேதி இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முதலமைச்சர் கருணாநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜாக்கிஜான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் தசாவதாரம் கோடை வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி.

ஜாகர்த்தாவில் ஒலிம்பிக் ஜோதி!

ஜாகர்த்தா, ஏப்.22: ஒலிம்பிக் ஜோதி இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தாவில் பலத்த பாதுகாப்புக்கிடையே வந்து அடைந்துள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் வரும் ஆகஸ்ட் மாதம் 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் உலகின் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ந் தேதி டெல்லி வந்த ஒலிம்பிக் ஜோதி பின்னர் மலேசியா சென்றது. அங்கிருந்து தாய்லாந்து சென்ற ஒலிம்பிக் ஜோதி இன்று இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தா வந்தடைந்தது.ஒலிம்பிக் ஜோதி வருகையை முன்னிட்டு ஜாகர்த்தாவில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. திபெத் பிரச்சனை காரணமாக ஒலிம்பிக் ஜோதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என்பதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Free Blog CounterLG