Wednesday, April 23, 2008

பஞ்சாயத்து அமைச்சகத்திற்கு இந்தியப் பிரதமர் அறிவுறுத்தல்


இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாயத்து நிர்வாகத்தினை மாநில பட்டியலிலிருந்து இணைப் பட்டியலுக்கோ அல்லது மத்தியப் பட்டியலுக்கோ மாற்றவேண்டும் என்ற பரிந்துரையினை பஞ்சாயத்து நிர்வாகிகள் மாநாட்டின் வரைவு சாசனத்திலிருந்து நீக்கவேண்டும் என பஞ்சாயத்து அமைச்சகத்திற்கு தான் அறிவுறுத்தியிருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பஞ்சாயத்துகளை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு சென்றுவிட்டால், அது மாநில அரசின் அதிகார வரம்புகளை குறுக்குவதாகும் என்று கூறி, அப்பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை புதுடில்லியில் துவங்கிய மாநாட்டைப் புறக்கணிப்பதாக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வருக்கு பதிலெழுதியிருப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் தனது கடிதத்தில் பஞ்சாயத்துககள் நிலை குறித்து வேறு எந்த விதமாற்றமாக இருந்தாலும், அது தேசிய வளர்ச்சி மன்றம் உள்ளிட்ட பல மட்டங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் மேலும் கூறினார்.

பிரதமரின் பதில் கிடைத்தும் மாநாட்டில தமிழக பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்ய போதுமான கால அவகாசம் இல்லாததால் அவர்கள் பங்கேற்கவில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

சட்டசபை விவாதத்தின்போது குறுககிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி பஞ்சாயத்துககளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் ஆனால் அதற்காக மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

ஆனால் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் உள்ளாட்சி மன்றங்களின் செயற்பாடுகள் குறித்து நுணுக்கமாக ஆய்ந்துவருபவருமான ஏ.கே. வெங்கடசுப்பிரமணியன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் குறைவே எனக் குறிப்பிட்டார்.

நன்றி : BBC.

0 comments:

Free Blog CounterLG