Wednesday, April 23, 2008

தமிழுக்கு அவமானம்: நெல்லை கண்ணன்

விவேகானந்தர் நினைவு இல்லத்தை அகற்றுவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் இலக்கியவாதி நெல்லை கண்ணன்.

இதுகுறித்து நெல்லை கண்ணன் மேலும் கூறியதாவது:

"சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் சார்பில் விவேகானந்தர் உரையாற்றச் சென்றபோது, அவருக்குச் செலவு செய்து அவரை சிகாகோவுக்கு அனுப்பிவைத்தது ராமநாதபுரம் மன்னர் தமிழ்வளர்த்த பாஸ்கர சேதுபதி.
அவரை அனுப்பிவைத்தது மட்டுமல்ல, அத்தனை பெரிய வெற்றியை அமெரிக்க மண்ணில் அடைந்து வருகிற விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் கப்பலில் வந்து இறங்க வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற்பாடு செய்தார்.

பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் இறங்கும் நேரத்தில் உணர்ச்சிவயப்பட்ட மன்னர் கீழே அமர்ந்து, "என் தலையில் தங்களின் திருப்பாதங்களை வைத்து இறங்க வேண்டும்' என்றார் விவேகானந்தரிடம். ஆனால், விவேகானந்தரோ மன்னரின் தலையில் கைவைத்து தாண்டி வந்தார். பின்னர், விவேகானந்தர் ஏறிய குதிரை வண்டியை குதிரைக்குப் பதில் தானே இழுத்தார் மன்னர்.

அப்படி தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மன்னர் சேதுபதியால் வணங்கப்பட்ட விவேகானந்தரின் மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை அமைப்பது என்பது மன்னர் பாஸ்கர் சேதுபதியையும் அவமதிப்பதாகும்.
அதுவரை உலகத்தில், ""சீமான்களே, சீமாட்டிகளே'' என அழைத்து வந்ததை மாற்றி ""சகோதர, சகோதரிகளே'' என்று பேசியவர் வீரத்துறவி விவேகானந்தர். விவேகானந்தரை உலகம் அறியச் செய்தது சேதுபதி மன்னர்தான்.

அப்படிப்பட்ட விவேகானந்தரின் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை ஏற்படுத்தினால், தமிழ் மன்னரால் உலகிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரனின், அறிஞனின், ஒரு சமூக விஞ்ஞானியின் பெருமையை தமிழர்கள் இழிவுபடுத்தினார்கள் என்ற களங்கம் நமக்கு வந்து சேரும். அந்த அவமானம் தமிழர்களுக்குச் சேருவதை தமிழக அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும். "

"ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர். அப்படிப்பட்டவரது நினைவு இல்லத்தை அப்புறப்படுத்துவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் நெல்லை கண்ணன்.

0 comments:

Free Blog CounterLG