Wednesday, April 23, 2008

பா.விஜய்யின் 'மட்டரக' பாட்டு-ஜெ கடும் கண்டனம்

அமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்க, விஜய் நடிக்க உருவாகி வரும் படம் குருவி.இதில் ஒரு மட்டரகமான பாடலை எழுதியுள்ளார் பா.விஜய்.'தில்லையாடி வள்ளியம்மா.. தில்லிருந்தா நில்லடியம்மா.. தில்லாலங்கடி ஆடுவோமா.. திருட்டுத்தனம் பண்ணுவோமா' என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.

சுதந்திரப் போராட்ட வீராங்கனையான தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் வகையிலான இந்தப் பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதையடுத்து அந்தப் பாடலை படத்திலிருந்து நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் பா.விஜய்யின் இந்த எழுத்துக்கு கண்டனங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,'குருவி' என்ற திரைப் படத்தில், சுதந்திரப் போராட்ட வீராங்கனை தில்லையாடி வள்ளியம்மையை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடலை இடம் பெறச் செய்துள்ளனர்.இது தமிழக மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தேசிய உணர்வு கொண்ட அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயலாகும்.

குருவி படத்தின் ஒலி நாடா வெளியிட்ட பின்பு, பலத்த எதிர்ப்பு கிளம்பியதன் காரணமாக, சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் இடம் பெறாது என்று தெரிவிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.பாடல் எழுதும்போதே இதனை சிந்தித்திருக்க வேண்டும். எதிர்ப்பு வந்தவுடன் அதற்காக வருத்தம் தெரிவிப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.மெட்டுக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.சரித்திரப் புகழ் பெற்றவர்களையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும், வீராங்கனைகளையும், தமிழுக்காகப் பாடுபட்டவர்களையும் இழிவுபடுத்தும் வகையில் திரைப்படங்களில் பாடல்கள் இடம் பெறுவது வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

0 comments:

Free Blog CounterLG