Tuesday, April 15, 2008

கலைஞர் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடும் - ஆற்காடு வீராசாமி

மதுரை, ஏப். 16- உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிதாக ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஆட்சியர் எஸ்.எஸ்.ஜவகர் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக மின் வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி துணை மின்நிலையத்துக்கான அடிக்கலை நாட்டி பேசினார். அவர் கூறியதாவது:- சேது சமுத்திர திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசு ஒப்புதல் தந்தது. அதற்குள் ஆட்சி மாறிவிட்டது. அதன்பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டம் முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ரூ.2 ஆயிரத்து 400 கோடியை நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து சேது சமுத்திர திட்ட தொடக்க விழா சிறப்பாக மதுரையில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். சேது சமுத்திர திட்ட பணிகள் முடிந்து, டிசம்பர் 31-ல் முதல் கப்பல் விடப்படும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அறிவித்தார்.

திடீரென்று சுப்பிரமணியசுவாமி என்பவர் ஒருவர் வந்தார். அவரை தொடர்ந்து பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒரு அம்மையாரும் திடீரென்று வந்தார். தமிழகத்தை சேர்ந்த அம்மையாரும் திடீரென்று வந்தார். சேது சமுத்திர திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வேலைகள் தொடங்கிய பிறகு திடீரென்று ராமர் பாலம் இருக்கிறது என்று கூறினார்கள். ராமர் நமக்கு விரோதி கிடையாது. ராமர் பாலம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்றால் பதில் கூற மறுக்கிறார்கள். ஆதாரம் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு இருப்பது ராமர் பாலம் அல்ல. மணல் திட்டுதான் என்று அந்த துறையின் மத்திய அமைச்சர் பதில் மனு தாக்கல் செய்தார். டி.ஆர்.பாலும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார் என்றாலும் இந்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்பட தென்மாவட்ட மக்கள், இளைஞர்கள், மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது இலங்கை வழியாக சுற்றிச்செல்வதால் கப்பல்களுக்கு கட்டணம், நேரம் அதிகமாகிறது. சேது கால்வாய் வந்தால் கட்டணமும், நேரமும் குறையும். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் 3 அல்லது 4 நாட்களில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நமக்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று முதல் கப்பல் ஓடும். இவ்வாறு அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.

கவர்ச்சி மழையில் "சிலந்தி"

தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் இதுவரை குடும்பப் பாங்கான 'அழகி'யாக இடம் பிடித்திருந்த மோனிகா, கவர்ச்சி நாயகியாக களமிறங்கும் படம் 'சிலந்தி'. கேரளாவை சேர்ந்த முன்னா, இப்படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.
கவர்ச்சியாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காக, படுக்கையறை காட்சிகளிலிருந்து நீச்சல் உடை வரை மோனிகாவை உரித்த கோழியாக்கி கவர்ச்சியில் விருந்து படைத்திருக்கிறார்கள்.


இப்படத்தில், ஐந்து நிமிடங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் காட்சியை புகுத்தி விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சியில் தான் படுகவர்ச்சியாக வருகிறார் மோனிகா. இக்காட்சிக்காக சுமார் 12 மணி நேரம் மோனிகாவை நீச்சல் குளத்தில் நீராட வைத்து சினிமா ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் கமிஷனுக்கு நோட்டிஸ்

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளை மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கந்தசாமி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் , கடந்த 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரண்டு தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு முறையே 138 மற்றும் 142 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்த போக்கை நீடிக்க அனுமதித்தால் , உள்ளூர் நலன்களில் அக்கறை கொண்டுள்ள மாநில கட்சிகள் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மட்டுமே பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் , இது குறித்து ஆறு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்தியருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை.

இங்கிலாந்தில் லைசெஸ்டர் என்ற நகரில் வசிப்பவர் சிந்தர்சிங்(வயது 46). இந்திய வம்சா வழியை சேர்ந்த இவர் அங்கு ஒரு நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில் அதிக வட்டி தருவதாக ஏமாற்றி சுமார் 800 கோடி வரை மோசடி செய்ததாக இவரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு முடிவுற்ற நிலையில் அங்குள்ள நீதி மன்றம் இவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

இத்தாலி பொதுத்தேர்தல்


இத்தாலி பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி தலைமையிலான வலதுசாரி மையவாத எதிர்க் கட்சிகள் முன்னணியில் இருப்பதாக ஆரம்பகட்ட முடிவுகள் காட்டுகின்றன.

180 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்து மதத்திற்கு மாறின

நெல்லையில், 180 கிறிஸ்தவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மடாதிபதிகள் முன்னிலையில் இந்து மதத்திற்கு மாறினர்.

நெல்லையில் இந்து மக்கள் கட்சி சார்பில், தாய் மதம் திரும்பும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார்.

இதில் மாநில இந்து துறவிகள் பேரவை தலைவர் சுவாமி சதாசிவானந்தா, ராகவானந்தா, சங்கரானந்தா, ராமகிருஷ்ணானந்தா உள்ளிட்டோரும், மடாதிபதி செங்கோல் ஆதீனமும் கலந்து கொண்டனர்.

மதம் மாறியவர்களுக்கு 9 நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைத் தெளித்து பாத பூஜை செய்யப்பட்டது.அதன் பின்னர் மதம் மாறியவர்கள் அத்தனை பேரும் நெல்லையர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விலையுயர்வு புயலைக் கிளப்பும்

நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு பிரச்சனையை கையிலெடுத்துப் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதற்கிடையில், விலையுயர்வு பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு இன்று இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் ஊர்வலமாக செல்கின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லவும் தயார் என மா.கம்யூ. கட்சி அறிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதம் 7.41 ஆக அதிகரித்துள்ளது. இது சமீப காலமாக எப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய ஏற்றமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை எகிறியது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மத்திய அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளே பல்வேறு போராட்டங்களை அறிவித்தன. இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக இப்பிரச்னையை பெரிதுபடுத்தி தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது.

பணவீக்கத்தைக் குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இன்று ஊர்வலம் செல்ல இடதுசாரிகள் முடிவு செய்துள்ளனர் என மா.கம்யூ. உயர்நிலைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விலையுயர்வு பிரச்னையைத் தவிர்த்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் இன்று விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குசேலனில் கமல்...?

ரஜினி - கமல் இணைந்து நடிக்கப்போவதாக அடிக்கடி செய்திகள் வெளியாவதும், பின்னர் அது பொய்ததுப்போவதும் வாடிக்கை.
ஆனால், இந்த முறை ரஜினி படத்தில் கமல் இணைந்து நடிக்கபோவதாக கூறப்படும் செய்திகளில் ஓரளவு நம்பகத்தன்மை உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம், 'குலேசன்' படத்தில் குஷ்பு, சினேகா, பிரபு, த்ரிஷா ஆகியோர் சினிமா நட்சத்திரங்களாகவே நடிக்கின்றனர். அதன்படி, கமலும் ஒரு நடிகராகவே இந்த படத்தில் இடம்பெறுவார்.
ஆனால், இதுபற்றி எதுவும் கூறாமல் படக்குழு மவுனம் காக்கிறது.
இந்த மவுனம், சம்மத்துக்கு அறிகுறியோ என்னவோ...? பொறுத்திருந்து பார்ப்போம்.

ராகுல் பிரதமரானால் மகிழ்ச்சி:கருணாநிதி

ராகுல் காந்தி பிரதமாராக தேர்ந்தெடுக்கப்படுமானால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைவேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்
சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவரிடம், பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி பொருத்தமானவர் என்று மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் சிங் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோர் சொல்லியிருப்பது குறித்து கேட்டபோது, 'தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி' என்றார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பிரச்சனையில் 'கிரீமி லேயர் குறித்து அவர் கூறுகையில், அதுபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு தாம் கடிதம் எழுதியிருப்பதாகவும், வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கேப்டன் பதவியில் டோனி நன்றாக செயல்படுகிறார் கங்குலி பாராட்டு

கொல்கத்தா, ஏப்.15-கேப்டன் பதவியில் டோனி நன்றாக செயல்படுகிறார் என்று கங்குலி பாராட்டி உள்ளார்.கங்குலி கருத்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கான்பூரில் நடந்த 3-வது டெஸ்டில் சிறப்பாக ஆடிய கங்குலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நேற்று கொல்கத்தா திரும்பிய கங்குலி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-இந்திய பிரிமியர் லீக் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட சோயிப் அக்தர் இடத்தை உமர்குல் நிரப்புவார். அவர் நன்றாக பந்து வீசுவார்.20 ஓவர் போட்டிக்கு ஒரு சில நாள் பயிற்சியில் ஒத்துபோய்விடுவேன்.

பலநாட்டு வீரர்கள் அடங்கிய அணிக்கு கேப்டன் பதவி வகிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. மற்ற கிரிக்கெட் ஆட்டம் போல் தான் இதுவும் ஒன்றாகும்.டோனிக்கு பாராட்டுதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் 2 சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டேன். அது எனக்கு ஏமாற்றம் அளித்தது.

அதே நேரத்தில் அந்த இரண்டு இன்னிங்சிலும் எனது ஆட்டம் அணிக்கு உதவும் விதத்தில் இருந்தது. நமது அணி தொடரை சமன் செய்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.கேப்டன் பதவியில் டோனி நன்றாக செயல்படுகிறார். அவரது தலைமையின் கீழ் கான்பூர் போட்டியில் வெற்றி பெற்றோம்.இவ்வாறு கங்குலி கூறினார்.கான்பூர் போட்டியில் கேப்டன் கும்பிளே காயம் காரணமாக ஆடாததால் டோனி தற்காலிக கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நறுமண பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்

கொச்சி: நம் நாட்டிலிருந்து ஜப்பான் நாட்டிற்கு அதிக அளவில் நறுமண பொருள்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் நறுமண பொருள்களில் ரசாயனத்தின் அளவு அதிகமாக உள்ளது. இதனால், இஞ்சி, மிளகாய் வற்றல், வெள்ளை பூண்டு போன்ற நறுமண பொருள்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா பல சிரமங்களை சந்தித்து வருகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானுக்கு நறுமண பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்திய நறுமண பொருள்கள் வாரியம் தீவிர நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற மார்ச் மாதம் 11-ந் தேதியிலிருந்து 14-ந் தேதி வரை `புட்டெக்ஸ் 2008' என்ற பெயரில் நறுமண பொருள்கள் கண்காட்சியை நடத்தியது.

இதில், நறுமண பொருள்கள், எண்ணெய், ஒலியோ ரெசின், மசாலா, கறி மசாலா மற்றும் மூலிகைகள் இடம் பெற்றன. இந்த கண்காட்சியில் 20 இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கு கொண்டனர். மேலும், இந்த கண்காட்சி ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது.

இக்கண்காட்சியை காண வந்த பார்வையாளர்களுக்கு கேரள புரோட்டாவுடன், கோழிக்கறி, இறைச்சி, மீன் மற்றும் காய்கறி வகைகளுடன் விருந்து அளிக்கப்பட்டது.

பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை

டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை அன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் விடுமுறை அறிவித்திருந்தன.

அம்பேத்கார் ஜெயந்தி விடுமுறை காரணமாக, அன்னியச் செலாவணி, நிதி, தங்கம், வெள்ளி உள்ளிட்ட இதர சந்தைகளும் செயல்படவில்லை.

பிரதீபா பட்டீலுடன் புகைப்படம் எடுக்க அலை மோதிய கூட்டம் நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து.

சாவ் பாவ்லோ, ஏப்.15- ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தென் அமெரிக்க நாடுகளில் 13 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். நேற்று அவர் பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி தனது தொடக்க உரையை முடித்த பின்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதீபா பட்டீலுடன் புகைப்படம் எடுக்க ஏராளமான இந்தியர்கள் திரண்டனர்.

ஜனாதிபதியும் அவர்களை சிறுசிறு குழுவாக அழைத்து அவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தார். அரை மணி நேரத்துக்கு மேலாகியும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்தவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. கியு வரிசை நீண்டுகொண்டே இருந்தது.

நிகழ்ச்சி அமைப்பாளர்களாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வேறு வழியின்றி ஜனாதிபதியின் பாதுகாவலர்கள், பாதுகாப்பு காரணம் கருதி நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு பிரதீபா பட்டீலை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி கருணாநிதி பேட்டி.

சென்னை, ஏப்.15- ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

ராகுல் பிரதமரானால்

கேள்வி:- மத்திய மந்திரிகள் அர்ஜுன் சிங், பிரபுல் படேல் ஆகியோர் ராகுல் காந்தி, பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று சொல்லியிருக்கிறார்களே?

பதில்:- தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி.

உயர்நிலை கூட்டம்


கேள்வி:- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பிரச்சினையில் கிரீமி லேயர் பற்றி?

பதில்:- அதுபற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.

கேள்வி:- உங்கள் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தை 18-ம் தேதி கூட்டியிருக்கிறீர்களே, என்ன பேசப் போகிறீர்கள்?

பதில்:- இப்போதே அதைச் சொல்லிவிட்டால் பிறகு எதற்காக 18-ம் தேதி கூட்டம்? இட ஒதுக்கீடு பிரச்சினை குறித்து விரிவாக கலந்து பேசுவோம்.

கெட்டுப்போன தண்ணீர்

கேள்வி:- டைம்ஸ் ஆப் இந்தியா - சென்னை புதிய பதிப்பில் கெட்டுப் போன தண்ணீரை பாக்கெட்டில் விற்பது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறதே?

பதில்:- அதைப்பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இதழில் வந்தவாறு நடந்திருந்தால் அது தவறு.

இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.

சேது சமுத்திர திட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை.

புதுடெல்லி, ஏப்.15- சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இடைக்கால தடை
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாலத்தில் சுமார் 31 கி.மீ. தூரம் வரை இடிக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணிய சுவாமி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, `ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் பணிகளை தொடரக்கூடாது' என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இடைக்கால தடை விதித்தது.

மத்திய அரசு பிரமாண பத்திரம்
இந்த தடையை நீக்க கோரி மத்திய அரசும், தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், `ராமர் என்ற ஒருவர் இருந்ததற்கான அறிவியல் ஆதாரம் எதுவும் கிடையாது. அந்த பாலத்தை ராமர்தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரம் இல்லை' என்று தெரிவித்தது.

இதனால் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்ற மத்திய அரசு, `ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் கட்டப்பட்டதா என்பதை சுப்ரீம் கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்' என்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

இன்று விசாரணை
சேது சமுத்திர திட்ட வழக்கு ஒரு ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்காக மட்டும், இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்சு முன்பாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்குமாறு மத்திய அரசு வாதிட்டு வருகிறது. அதே நேரத்தில் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் வாதாடி வருகின்றனர்.

புதுவலசை-மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம்

பனைக்குளம், ஏப்.15- புதுவலசையில் த.மு.மு.க. சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் நடந்தது. இதில் கீழக்கரை பெண்கள் கல்லூரி முதல்வர் கலந்து கொண்டார்.

கருத்தரங்கம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் உயர் கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி தாளாளர் லியாகத் அலிக்கான் தலைமை தாங்கினார்.

ஜமாத் தலைவர் முகமது இபுராகீம், செயலாளர் முகமது அலி, பொருளாளர் அப்துல் காதர், ஊராட்சி தலைவர் ஹமீது சுல்தான், முன்னாள் தலைவர் ஜபருல்லாகான் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கருத்த ரங்கை ராமநாதபுரம் அரசு டாக்டர் சாதிக் அலி தொடங்கி வைத்து, மருத்துவ கல்வி பயில எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அதிகளவு கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிக்கோள் தான் வெற்றிக்கு அடிப்படை. எனவே மாணவர்கள் என்ன ஆக விரும்புகிறீர்களோ, அதனை தாங்கள் படிக்கும் அறையில் நான் கலெக்டராக விரும்புகிறேன் டாக்டராக விரும்புகிறேன் என்று எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.

ஆங்கில அறிவு :
டி.வி. பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நான்கு வரிகள் படித்தால் கூட, ஓராண்டில் புதிதாக நிறைய ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும். ஆங்கிலபேச்சுத் திறமை இருந்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை வந்துவிட்டது. எனவே மாணவ- மாணவிகள் தங்கள் பாடத்துடன், ஆங்கிலத் துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

லால்பேட்டை பேரூராட்சி துணை தலைவர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை.

காட்டுமன்னார் கோவில்,ஏப்.15-லால்பேட்டை பேரூராட்சி துணை தலைவரை தாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர மாவட்டம் லால்பேட்டை மெயின்ரோட்டு தெருவில் வசித்து வருபவர் ஹாஜா முகைதீன்(வயது 43).இவர் லால்பேட்டை பேரூராட்சிமன்ற துணை தலைவராக இருந்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் பேரூராட்சிக்கு சொந்தமான கொல்லி மலை கீழ்பாதி பகுதியில் உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்று அதனை பாதுகாக்க கொட்டகை அமைக்க சென்றார்.இதனை அறிந்த லால்பேட்டை அப்துல் மஜித் மகன் ஜபருல்லா ,ஹாஜா முகைதீனிடம், நீ எப்படி அதில் கொட்டகை போடலாம் என்று தட்டிக்கேட்டார்.இதில் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற் பட்டது.உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். அதையடுத்து 2 பேரும் கலைந்து சென்று விட்டனர்.பின்னர் அன்று இரவு லால்பேட்டை பஜார் தெருவில் ஹாஜாமுகைதீன் பேசிக் கொண்டிருந்தார்.அப் போது அங்குவந்த ஜபருல்லா, ஹாஜா முகைதீனிடம் தகராறு செய்து அவரை தாக்கினார்.இது பற்றி ஹாஜா முகைதீன் காட்டு மன் னார் கோவில் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை சுதந்திர நாடாக(?) மாற்றுவேன் எடியுரப்பா பேச்சு!

பத்ராவதி, பெங்களூர். ஏப்.15- பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், கர்நாடகத்தை சுதந்திர நாடாக மாற்றுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியுரப்பா கூறினார்.

பா.ஜனதா பொதுக்கூட்டம்
சிமோகா மாவட்டம் பத்ராவதியில் கனக மண்டபத்தில் பா. ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தை, டி.எஸ்.சங்கர்மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பி.கே. ஸ்ரீநாத் வரவேற்றார்.

கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியுரப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

காங்கிரஸ் ஆட்சி காரணம்
விஜயநகரம் மன்னர் காலத்தில் முத்து, ரத்தினம் கொட்டி இருந்த நகரத்தில் இப்போது மக்கள் உணவு, உடை, வீடு ஆகியவை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி. எந்த நாட்டில் நேர்மையான ஆட்சி உள்ளதோ, அங்கு மக்கள் செழிப்புடன் இருப்பார்கள். இல்லையேல் அவர்கள் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நான் மந்திரியாக இருந்த போது அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் உள்ள சாராயத்தை நிறுத்தினேன். பெண்கள் நலம் கருதி, அவர்கள் படிப்பு, திருமணம் போன்றவற்றுக்கு உதவித்தொகை, 16 ஆயிரம் பம்ப் செட் விவசாயிகளின் கண்ணீரை துடைத்தோம், எம்.பி.எம். சர்க்கரை ஆலையில் 2 ஆயிரம் டன் திறன் கொண்ட அரவையை, 5 ஆயிரம் டன் திறனாக உயர்த்த திட்டமிட்டு உள்ளேன். சர்வதேச விமான நிலையம் நிறுவ பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுதந்திர நாடாக:
பத்ராவதிக்கு என்ஜினீயரிங் கல்லூரி கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன். மேலும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டியில் கடன் வசதி செய்யவும் உள்ளோம். குஜராத் மாநில தலைவர்கள் கர்நாடக தேர்தல் என்னவாகும் என்று எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடகத்தை சுதந்திர நாடாக மாற்றுவேன். காங்கிரஸ் கட்சியினரும், தேவேகவுடாவும் அவர்கள் ஆதரவு இல்லாமல் கர்நாடகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறி வருகிறார்கள். இதை முறியடிக்க நாம் எல்லோரும் பாடுபட வேண்டும், இவ்வாறு எடியுரப்பா பேசினார்.

கூட்டத்தில், விதான பரிஷத் உறுப்பினர் பீரய்யா, நடிகர் ஸ்ரீநாத், டி.எச்.சங்கர்மூர்த்தி, பா.ஜனதா வேட்பாளர் ஆயனூர் மஞ்சுநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல்.

ராமேஸ்வரத்திலிருந்து ரயில்களில் கடத்த முயன்ற நூற்றுக் கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் பரமக்குடியில் பிடிபட்டன. ராமேஸ்வரத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக பறக்கும் படை பிரிவுக்கு தகவல் வந்தது. தாசில்தார் இந்திரஜித், வட்ட வழங்கல் அலுவலர் உதயரதி தலைமையில் பறக்கும் படையினர் பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் வந்த � ரயிலின் ஒரு பெட்டியில் இருந்த 50, 25 கிலோ எடை கொண்ட 19 மூட்டைகளை கைப்பற்றினர். இதே போல எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து பரமக்குடி வந்த ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயிலிலும் நூற்றுக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. இங்கு இரு ரயில்களும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்றதால் ஒவ்வொரு பெட்டியிலும் இருந்த அரிசி மூட்டைகள் பிடிபடாமல் தப்பின.

Free Blog CounterLG