Tuesday, April 15, 2008

புதுவலசை-மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம்

பனைக்குளம், ஏப்.15- புதுவலசையில் த.மு.மு.க. சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் நடந்தது. இதில் கீழக்கரை பெண்கள் கல்லூரி முதல்வர் கலந்து கொண்டார்.

கருத்தரங்கம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுவலசை கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் உயர் கல்விக்கு வழிகாட்டும் கருத்தரங்கம் பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரபி ஒலியுல்லா உயர்நிலைப்பள்ளி தாளாளர் லியாகத் அலிக்கான் தலைமை தாங்கினார்.

ஜமாத் தலைவர் முகமது இபுராகீம், செயலாளர் முகமது அலி, பொருளாளர் அப்துல் காதர், ஊராட்சி தலைவர் ஹமீது சுல்தான், முன்னாள் தலைவர் ஜபருல்லாகான் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கருத்த ரங்கை ராமநாதபுரம் அரசு டாக்டர் சாதிக் அலி தொடங்கி வைத்து, மருத்துவ கல்வி பயில எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது பேசியதாவது:- இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் அதிகளவு கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிக்கோள் தான் வெற்றிக்கு அடிப்படை. எனவே மாணவர்கள் என்ன ஆக விரும்புகிறீர்களோ, அதனை தாங்கள் படிக்கும் அறையில் நான் கலெக்டராக விரும்புகிறேன் டாக்டராக விரும்புகிறேன் என்று எழுதி வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.

ஆங்கில அறிவு :
டி.வி. பார்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் நான்கு வரிகள் படித்தால் கூட, ஓராண்டில் புதிதாக நிறைய ஆங்கிலம் கற்றுக் கொள்ள முடியும். ஆங்கிலபேச்சுத் திறமை இருந்தால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை வந்துவிட்டது. எனவே மாணவ- மாணவிகள் தங்கள் பாடத்துடன், ஆங்கிலத் துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

Free Blog CounterLG