Tuesday, April 15, 2008

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் கர்நாடகத்தை சுதந்திர நாடாக(?) மாற்றுவேன் எடியுரப்பா பேச்சு!

பத்ராவதி, பெங்களூர். ஏப்.15- பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், கர்நாடகத்தை சுதந்திர நாடாக மாற்றுவேன் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியுரப்பா கூறினார்.

பா.ஜனதா பொதுக்கூட்டம்
சிமோகா மாவட்டம் பத்ராவதியில் கனக மண்டபத்தில் பா. ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தை, டி.எஸ்.சங்கர்மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் பி.கே. ஸ்ரீநாத் வரவேற்றார்.

கூட்டத்தில் கர்நாடக மாநில முன்னாள் முதல்-மந்திரி எடியுரப்பா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-

காங்கிரஸ் ஆட்சி காரணம்
விஜயநகரம் மன்னர் காலத்தில் முத்து, ரத்தினம் கொட்டி இருந்த நகரத்தில் இப்போது மக்கள் உணவு, உடை, வீடு ஆகியவை கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். இதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி. எந்த நாட்டில் நேர்மையான ஆட்சி உள்ளதோ, அங்கு மக்கள் செழிப்புடன் இருப்பார்கள். இல்லையேல் அவர்கள் அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

நான் மந்திரியாக இருந்த போது அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருமானம் உள்ள சாராயத்தை நிறுத்தினேன். பெண்கள் நலம் கருதி, அவர்கள் படிப்பு, திருமணம் போன்றவற்றுக்கு உதவித்தொகை, 16 ஆயிரம் பம்ப் செட் விவசாயிகளின் கண்ணீரை துடைத்தோம், எம்.பி.எம். சர்க்கரை ஆலையில் 2 ஆயிரம் டன் திறன் கொண்ட அரவையை, 5 ஆயிரம் டன் திறனாக உயர்த்த திட்டமிட்டு உள்ளேன். சர்வதேச விமான நிலையம் நிறுவ பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுதந்திர நாடாக:
பத்ராவதிக்கு என்ஜினீயரிங் கல்லூரி கொண்டு வர திட்டமிட்டு உள்ளேன். மேலும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டியில் கடன் வசதி செய்யவும் உள்ளோம். குஜராத் மாநில தலைவர்கள் கர்நாடக தேர்தல் என்னவாகும் என்று எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

கர்நாடகத்தை சுதந்திர நாடாக மாற்றுவேன். காங்கிரஸ் கட்சியினரும், தேவேகவுடாவும் அவர்கள் ஆதரவு இல்லாமல் கர்நாடகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறி வருகிறார்கள். இதை முறியடிக்க நாம் எல்லோரும் பாடுபட வேண்டும், இவ்வாறு எடியுரப்பா பேசினார்.

கூட்டத்தில், விதான பரிஷத் உறுப்பினர் பீரய்யா, நடிகர் ஸ்ரீநாத், டி.எச்.சங்கர்மூர்த்தி, பா.ஜனதா வேட்பாளர் ஆயனூர் மஞ்சுநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Free Blog CounterLG