மதுரை, ஏப். 16- உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் புதிதாக ரூ.4 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஆட்சியர் எஸ்.எஸ்.ஜவகர் தலைமை தாங்கினார். விழாவில் தமிழக மின் வாரியத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி துணை மின்நிலையத்துக்கான அடிக்கலை நாட்டி பேசினார். அவர் கூறியதாவது:- சேது சமுத்திர திட்டத்துக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசு ஒப்புதல் தந்தது. அதற்குள் ஆட்சி மாறிவிட்டது. அதன்பின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டம் முழுமையாக எடுத்துக்கொள்ளப்பட்டது. ரூ.2 ஆயிரத்து 400 கோடியை நிதி மந்திரி ப.சிதம்பரம் ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து சேது சமுத்திர திட்ட தொடக்க விழா சிறப்பாக மதுரையில் நடந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். சேது சமுத்திர திட்ட பணிகள் முடிந்து, டிசம்பர் 31-ல் முதல் கப்பல் விடப்படும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அறிவித்தார்.
திடீரென்று சுப்பிரமணியசுவாமி என்பவர் ஒருவர் வந்தார். அவரை தொடர்ந்து பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒரு அம்மையாரும் திடீரென்று வந்தார். தமிழகத்தை சேர்ந்த அம்மையாரும் திடீரென்று வந்தார். சேது சமுத்திர திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி வேலைகள் தொடங்கிய பிறகு திடீரென்று ராமர் பாலம் இருக்கிறது என்று கூறினார்கள். ராமர் நமக்கு விரோதி கிடையாது. ராமர் பாலம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்றால் பதில் கூற மறுக்கிறார்கள். ஆதாரம் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு இருப்பது ராமர் பாலம் அல்ல. மணல் திட்டுதான் என்று அந்த துறையின் மத்திய அமைச்சர் பதில் மனு தாக்கல் செய்தார். டி.ஆர்.பாலும் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தார் என்றாலும் இந்த பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்பட தென்மாவட்ட மக்கள், இளைஞர்கள், மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது இலங்கை வழியாக சுற்றிச்செல்வதால் கப்பல்களுக்கு கட்டணம், நேரம் அதிகமாகிறது. சேது கால்வாய் வந்தால் கட்டணமும், நேரமும் குறையும். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் 3 அல்லது 4 நாட்களில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால் நமக்கு சாதகமாக தீர்ப்பு இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஜூன் 3-ந் தேதி முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று முதல் கப்பல் ஓடும். இவ்வாறு அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
Tuesday, April 15, 2008
கலைஞர் பிறந்த நாளன்று சேது கால்வாயில் முதல் கப்பல் ஓடும் - ஆற்காடு வீராசாமி
Posted by udanadi at 4/15/2008 10:20:00 PM
Labels: இலங்கை, உச்சநீதிமன்றம், கலைஞர், சேது கால்வாய், டி.ஆர்.பாலு, ராமேஸ்வரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment