Tuesday, April 15, 2008

சேது சமுத்திர திட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை.

புதுடெல்லி, ஏப்.15- சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இடைக்கால தடை
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாலத்தில் சுமார் 31 கி.மீ. தூரம் வரை இடிக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணிய சுவாமி, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, `ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் மட்டும் பணிகளை தொடரக்கூடாது' என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இடைக்கால தடை விதித்தது.

மத்திய அரசு பிரமாண பத்திரம்
இந்த தடையை நீக்க கோரி மத்திய அரசும், தமிழகத்தில் உள்ள தி.மு.க. அரசும் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், `ராமர் என்ற ஒருவர் இருந்ததற்கான அறிவியல் ஆதாரம் எதுவும் கிடையாது. அந்த பாலத்தை ராமர்தான் கட்டினார் என்பதற்கும் ஆதாரம் இல்லை' என்று தெரிவித்தது.

இதனால் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மனுவை வாபஸ் பெற்ற மத்திய அரசு, `ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதனால் கட்டப்பட்டதா என்பதை சுப்ரீம் கோர்ட்டே முடிவு செய்ய வேண்டும்' என்று புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

இன்று விசாரணை
சேது சமுத்திர திட்ட வழக்கு ஒரு ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது. மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதற்காக மட்டும், இரண்டு முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் பெஞ்சு முன்பாக வழக்கு விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு விதித்த இடைக்கால தடையை நீக்குமாறு மத்திய அரசு வாதிட்டு வருகிறது. அதே நேரத்தில் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்குமாறு சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் வாதாடி வருகின்றனர்.

0 comments:

Free Blog CounterLG