Tuesday, April 15, 2008

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: விலையுயர்வு புயலைக் கிளப்பும்

நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. இதில் விலைவாசி உயர்வு பிரச்சனையை கையிலெடுத்துப் புயலைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதற்கிடையில், விலையுயர்வு பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு இன்று இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் ஊர்வலமாக செல்கின்றனர். இப்போராட்டத்தில் பங்கேற்று சிறை செல்லவும் தயார் என மா.கம்யூ. கட்சி அறிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதம் 7.41 ஆக அதிகரித்துள்ளது. இது சமீப காலமாக எப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய ஏற்றமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருள்களின் விலை எகிறியது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மத்திய அரசின் கூட்டணியில் உள்ள கட்சிகளே பல்வேறு போராட்டங்களை அறிவித்தன. இதனால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக இப்பிரச்னையை பெரிதுபடுத்தி தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், நாடாளுமன்றத்தின் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்க உள்ளது.

பணவீக்கத்தைக் குறைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இன்று ஊர்வலம் செல்ல இடதுசாரிகள் முடிவு செய்துள்ளனர் என மா.கம்யூ. உயர்நிலைக்குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விலையுயர்வு பிரச்னையைத் தவிர்த்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்தும் இன்று விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Free Blog CounterLG