Sunday, April 13, 2008

இடஒதுக்கீடு கிரீமி லேயர்: பிரதமருக்கு கடிதம்

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் கிரீமி லேயர் எனப்படும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தோர் முறையை பின்பற்றக் கூடாது என்ற கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு கருணாநிதியுடன் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று தொலைபேசியில் பேசினார்.

கிரீமி லேயர் முறையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு. கருணாநிதி எழுதிய கடிதத்தை மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு நேற்று பிரதமரிடம் நேரில் ஒப்படைத்தார்.

அப்போது முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசிய டாக்டர் மன்மோகன் சிங், 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதில் பொருளாதார அளவுகோலை பின்பற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங்கை, தாம் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறினார்.

இடஒதுக்கீடு விஷயத்தில் வருமான வரம்பு 2 இலட்சத்து 50 ஆயிரம் ருபாய் என்று இருப்பதால் க்ரூப்- டி பிரிவு ஊழியர்களின் குழந்தைகள் கூட இடஒதுக்கீட்டின் பயனைப் பெற முடியாத நிலை இருப்பதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனைவரும் பயன்பபெறும் வகையில் வருமான உச்ச வரம்பு நிலையை நீக்குவது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் கோரியிருக்கிறார்.

பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கை டி.ஆர். பாலு சந்தித்துப் பேசினார்.

தமிழக முதலமைச்சர் மு கருணாநிதி சார்பில் அர்ஜுன் சிங்கிற்கு அவர் நன்றி தெரிவித்தார். கிரீமி லேயர் விவகாரம் குறித்து கூட்டணிக் கட்சிகள் மற்றும் இதர அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்படும் என்று அர்ஜுன் சிங் டி.ஆர். பாலுவிடம் உறுதி கூறினார்.

0 comments:

Free Blog CounterLG