Friday, April 25, 2008

எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் எரிந்து நாசம், பயங்கர தீ விபத்து

ஏப்.25-வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் மையத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் வேலூர் ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 21-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த மையத்தில் உள்ள மத்திய மண்டபத்தில் மொத்தம் 30 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன. 450 ஆசிரியர்கள் காலையிலும், மாலையிலும் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்ததும் ஆசிரியர்கள் திருத்திய விடைத்தாள்களை மையத்தில் உள்ள பெரிய அறையில் வைத்து பூட்டி விடுவார்கள். திருத்த வேண்டிய விடைத்தாள்களும் அதே அறையின் இன்னொரு பக்கத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் விடைத்தாள்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் இருந்து குபு, குபு வென்று புகை வந்தது. தொடர்ந்து அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு நிலையத்திற்கும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசமானது.

தகவல் கிடைத்ததும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி சுந்தரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுச்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தீ விபத்துக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.

இந்த தீ விபத்து குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பிச்சை நிருபர்களிடம் கூறும்போது, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்கள் இந்த மையத்தில் வைக்கப்பட்டு உள்ளன. தீ விபத்து பற்றி விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறோம். விசாரணை முடிந்து பிறகுதான் சேதம் எந்த அளவு என்பதை கூறமுடியும் என்றார்.

நன்றி- தினத்தந்தி

0 comments:

Free Blog CounterLG