Saturday, April 12, 2008

10 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொள்ளை-மலேசியாவில்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் கொள்ளையர் கூட்டம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். அந்தக் கொள்ளைக் கும்பல் 10 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியது. மின்னல் வேகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் விமான நிலையம் பெரும் பரபரப்பில் மூழ்கியது. பரபரப்பான கோலாலம்பூர் விமான நிலையத்தில் இன்று (10-04-2008) காலை நடந்த இந்த பரபரப்பு சம்பவத்தால் விமான நிலையம் அல்லோகல்லப்பட்டுப் போனது. அந்நியச் செலாவணி மாற்று நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த 2 பேர் ஒரு பை நிறைய பணத்துடன் (10 லட்சம் அமெரிக்க டாலர்) கோலாலம்பூர் விமான நிலையத்தின் 8வது நுழைவாயிலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பாக 2 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் உடன் வந்தனர். அப்போது 6 கொள்ளையர்கள் ஒரு பிஎம்டபிள்யூ காரில் அங்கு மின்னல் வேகத்தில் வந்திறங்கினர். காரிலிருந்து இறங்கிய கொள்ளையர்கள் தாங்கள் வைத்திருந்த தானியங்கி பிஸ்டல் மூலம் பணம் கொண்டு சென்றவர்களின் கால்களில் சுட்டனர். உடன் வந்த காவலர்களையும் அவர்கள் சுட்டனர்.இதனால் காயமடைந்த நான்கு பேரும் கீழே விழுந்தனர். இதைப் பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் பணப் பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். அப்போது வழியில் நின்றிருந்த நேபாள நாட்டுத் தொழிலாளர் உள்பட மேலும் இரண்டு பேரையும் சுட்டு விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

மூன்றே நிமிடத்தில் இந்த துணிகர கொள்ளை நடந்து முடிந்தது. கொள்ளையர்கள் சுட்டதில் ஒரு பெண்மணி உள்பட 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் பண நிறுவன ஊழியர்களும், காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானப் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை

0 comments:

Free Blog CounterLG