Monday, April 14, 2008

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலகச் சுற்றுக்கு இந்தியா தகுதி.

டெல்லி: ஜப்பானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை இரட்டையர் போட்டியில் லியாண்டர் பயஸ் ஜோடி அபார வெற்றி பெற்றதன் மூலம் டேவிஸ் கோப்பை உலக குரூப் தகுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஜப்பானுக்கு எதிரான ஆசிய ஓஸியானியா மண்டல 2வது சுற்று தகுதிப் போட்டி டெல்லியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல் நாளில் நடந்த ஒற்றையர் சுற்றில் போஹன் போபண்ணாவும், பிரகாஷ் அமிர்தராஜும் வெற்றிபெற்று இந்தியாவுக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

நேற்று நடந்த இரட்டையர் போட்டியில் ஜப்பானின் சட்டோஷி இவாபுச்சி- தாகௌகஸூகி ஜோடியை எதிர்த்து இந்தியாவின் நட்சத்திர ஜோடியான லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி ஜோடி விளையாடியது.சமீப காலமாக இருவரும் பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இருந்து வருகின்றனர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் தங்களது தனிப்பட்ட பூசல்களை மறந்து விட்டு அபாரமாக ஆடி இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை 7-6(2), 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பயஸ்-பூபதி ஜோடி வெற்றி பெற்றது. இதையடுத்து 3-0 என்ற கணக்கில் ஜப்பானைத் தோற்கடித்து உலகத் தகுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. வரும் செப்டம்பரில் அப்போட்டி நடைபெறும்.2 ஆண்டுகளுக்குப் பின் இந்த தகுதியை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பயஸ்-பூபதி இடையே பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருந்தபோதும் நேற்றைய விளையாட்டில் ஒற்றுமையுடன் செயல்பட்டவிதம், இனி தொடர்ந்து இந்த ஜோடி நீடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும், இந்த போட்டிக்கு முந்தைய நாளில் மகேஷ்பூபதியை பற்றி பயஸ் கூறிய கருத்து சர்ச்சையை எழுப்பியதால் நேற்றைய போட்டியில் பயஸ்-பூபதி ஜோடிக்குள் மாற்றங்கள் தென்படலாம் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அப்படியொன்றும் நடக்கவில்லை.

கடந்த 2006ம் ஆண்டில் நடந்த தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டியில்தான் கடைசியாக இருவரும் ஜோடியாக விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG