Thursday, April 17, 2008

இந்திய-ஈரான் குழாய் எரிவாயு திட்டம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை - அமைச்சர் முரளி தியோரா.

ஈரான் குழாய் எரிவாயு திட்டம் தொடர்பாக ஏப்ரல் 25-ம் தேதி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு வரும் திட்டம் ரூ.28 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஈரான் மற்றும் பாகிஸ்தானுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் வழியாக எரிவாயுவை கொண்டு வருவதற்கான கட்டணத்தை இறுதி செய்வதில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த 2007-ம் ஆண்டு இறுதியில் இது தொடர்பாக நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும் இந்தியா பங்கேற்கவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 23,24-ம் தேதி பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் துருக்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையில் இந்திய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் பேச்சு வார்த்தையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் துறைச் செயலாளர் எம்.எஸ்.சீனீவாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

6 நாள் சுற்றுப்பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அதிபர் முஷாரப், ஈரான் எரிவாயு திட்டத்தில் சீனாவும் பங்கேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

0 comments:

Free Blog CounterLG