Thursday, April 17, 2008

ஆலடி அருணா கொலை வழக்கு: 2 பேருக்கு தூக்கு தண்டனை- நீதிபதி பரபரப்பான தீர்ப்பு

“தண்டனை பெற்றவர்கள் பிரபல ரவுடிகள்,நெல்லை கோர்ட்டில் விதிக்கப்பட்ட 2-வது தூக்கு தண்டனை, நீதிவென்றது- எஸ்.ஏ.ராஜா பேட்டி ,”

முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, 31-12-2004 அன்று சொந்த ஊரான ஆலடிப்பட்டி அருகே வாக்கிங் சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் அவரது நண்பர் பொன்ராஜும் கொல்லப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் அதிபர் எஸ்.ஏ.ராஜா, வேல்துரை, பாலமுருக, ஆட்டோ பாஸ்கர், அழகர், பெனடிக்ட், ஆறுமுகம், பரமசிவன், கண்ணன், ரவிக்குமார் அர்ச்சுனன், தனசிங் ஆகிய 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் வேல்துரை, பாலமுருகன், அழகர், எஸ்.ஏ.ராஜா, ஆறுமுகம், கண்ணன், தனசிங், பரமசிவன், டாக் ரவி, அர்ச்சுனன் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். பென்னி குஜராத்தில் போலீசார் சுற்றி வளைத்த போது விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டான். ஆட்டோ பாஸ்கர் விசாரணையின் போது சேர்மாதேவி போலீஸ் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்டான்.

எஸ்.ஏ. ராஜா உள்பட 10 பேர் மீது நெல்லை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி பாஸ்கரன் நேற்று தீர்ப்பு கூறினார். வேல்துரை, பாலமுருகன், அழகர் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்றும், எஸ்.ஏ.ராஜா, ஆறுமுகம், கண்ணன், தனசிங், பரமசிவன், அர்ச்சுனன் ஆகிய 6 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு நீதிபதி பாஸ்கர், குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்தார். அவர் முன்பு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

1-வது குற்றவாளி வேல்துரை மீது ஆயுதம் வைத்திருந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு குறைந்த பட்சம் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை ஜெயில் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

2-வது குற்றவாளி பாலமுருகன், ஆலடி அருணாவை கொலை செய்தது, சாக்ரடீசை கொல்ல முயன்றது, அவர்களை வழிமறித்தது ஆகிய 3 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குறைந்தபட்சம் ஆயுள் தண்டனையும், அதிகபட்சம் மரண தண்டனையும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

3-வது குற்றவாளி அழகர் ஆசிரியர் பொன்ராஜை கொலை செய்தது, சாக்ரடீசை கொல்ல முயன்றது, வழிமறித்தது ஆகிய 3 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குறைந்தபட்சம் ஆயுள்தண்டனை, அதிக பட்சம் மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.

இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

வேல்துரை "நீதிபதியை பார்த்து என் மீது போட்டது பொய் வழக்கு. எனவே எனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

பாலமுருகன், "எனது குடும்பம் கஷ்டமான குடும்பம். எனக்கு திருமணம் ஆகவில்லை. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

அழகர், "எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த வழக்கில் எனக்கு சம்பந்தம் இல்லை. எனவே குறைந்தபட்ச தண்டனை வழங்க கருணை காட்டுங்கள்'' என்றார்.

அரசு வக்கீல் செல்வராஜ் எழுந்து, "குற்றவாளிகள் குற்றம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளது. இவர்கள் குறைந்தபட்ச தண்டனை கேட்பதில் நியாயம் இல்லை. எனவே அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி பாஸ்கர் தனது தீர்ப்பை கூறினார். அவர் கூறியதாவது:-

வேல்துரை அனுமதியின்றி ஆயுதம் வைத்திருந்ததற்காக அவருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம்கட்ட தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பாலமுருகன், அழகர் ஆகிய 2 பேரும் கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. மிகவும் புகழ்வாய்ந்த, தமிழக அமைச்சராகவும், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகவும் இருந்து மக்களுக்கு சேவை செய்த ஆலடி அருணாவை கொலை செய்துள்ளனர்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி இவர்கள் இருவரையும் உயிர்பிரியும் வரை தூக்கில் இடவேண்டும். எஸ்.ஏ. ராஜா உள்பட 6 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்படுகிறார்கள். தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி பாஸ்கர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தூக்குத்தண்டனை பெற்றவர்கள் பிரபல ரவுடிகள்

ஆலடி அருணா தொடர்பான வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற அழகர் (வயது 29), திருப்பூர் அடுத்து கருவம் பாளையத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன். பிரபலரவுடி. இவர் சிறுவயது முதல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வந்தார். பின் வாலிபரானதும், ஏராளமான கொலை வழக்குகளில் சிக்கினார்.

மதுரையில் உள்ள தாதா கும்பலோடு சேர்ந்து கொலை, கொலை முயற்சி, கொள்ளை உள்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர்.் `குவாட்டர்' மது வாங்கி கொடுத்தால் கொலை செய்யும் குணமுடையவர் என்று பரபரப்பாக பேசப்படுபவர். இவர் மீது பல வழக்குகளில் பிடிவாரண்டும் உள்ளது.

பாலா என்ற பாலமுருகன் (29). நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்த பரமசிவன் மகன். பிரபலரவுடியான இவர் நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டத்துரையின் நண்பன். கட்டத்துரை சென்னையில் கொலை செய்யப்பட்ட போது பாலமுருகனும் உடனிருந்து காயமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீதும் ஏராளமான வழக்குகள் உள்ளன.

நெல்லை கோர்ட்டில் விதிக்கப்பட்ட 2-வது தூக்கு தண்டனை

நெல்லை கோர்ட்டில் 1998-ம் ஆண்டு நீதிபதி பேச்சுமுத்து என்பவர் கொலை வழக்கில் எதிரிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்கினார். நாகர்கோவிலில் கோர்ட்டுக்குள் புகுந்து நீதிபதி முன்பு அய்யாவு என்பவரை வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கை நெல்லை கோர்ட்டில் விசாரித்த நீதிபதி பேச்சுமுத்து எதிரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினார். அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஆலடி அருணா கொலை வழக்கில் எதிரிகளுக்கு நீதிபதி பாஸ்கர் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார்.

ஆலடி அருணா கொலை வழக்கில் நீதிவென்றது: விடுதலையான எஸ்.ஏ.ராஜா பேட்டி

ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட வடக்கன்குளம் கல்வி நிறுவன தலைவர் எஸ்.ஏ.ராஜா கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 2 யுத்தத்தில் பங்கேற்று நாட்டுக்காக சேவை செய்தேன். அதன்பிறகு வெளிநாடு சென்று சம்பாதித்து இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன். ஆலடி அருணா கொலை வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

என்னை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது கூட எதற்காக இந்த விசாரணை என்றுகூட சொல்லவில்லை. என் அருகில் நின்ற வேல்துரைக்கு கூட நான் யார் என்று அப்போது தெரியாது.

ஆனால் ரூ. 5 லட்சம் கொடுத்து ஆலடி அருணாவை கொலை செய்ய சொன்னதாக வழக்கு போட்டார்கள். இதில் எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. கடந்த 3 வருடம் 4 மாதங்களாக நான் நிம்மதி இழந்து வேதனையோடு இருந்தேன்.

இப்போது நீதிதேவன் கண் திறந்து நல்ல தீர்ப்பு தந்துள்ளார். நீதி வென்றுள்ளது. தமிழக அரசின் நேர்மையான செயல்பாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ள சான்று இது, இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து வேல்துரை கூறும்போது:-

என் மீது பொய்யான வழக்கு போட்டார்கள். நீதிபதி கொலை வழக்கில் இருந்து என்னை விடுவித்து நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளார். ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டியது தவறு. விரைவில் நான் விடுதலையாகி வருவேன்.

தூக்கு தண்டனை கைதிகள் கதறல்

ஆலடி ஆருணா கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா (எ) பாலமுருகன், அழகர் ஆகிய 2 பேரும் தீர்ப்பை கேட்டதும் தங்கள் கைகளால் முகத்தை மூடி கதறி அழுதனர். உடனடியாக போலீசார் அவர்களை பாதுகாப்பாக ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

(நன்றி- மாலைமலர்)

0 comments:

Free Blog CounterLG