Thursday, April 17, 2008

சென்னை: சிறுமி கொலை வழக்கில் கார் டிரைவருக்கு தூக்கு தண்டனை.

சென்னை அம்பத்தூரில் நடந்த இந்த பயங்கர கொலை வழக்கு பற்றி, கோர்ட்டில் கூறப்பட்ட விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா கோவில் புறையுர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவராமன், இவரது மகன் வெங்கடேசன் (வயது 26). இவர் வேலைத் தேடி கடந்த 2005-ம் ஆண்டு சென்னை அடுத்த அம்பத்தூருக்கு வந்தார். அம்பத்தூரில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் லோகநாத தெருவைச் சேர்ந்த ஷீபா எலிசபெத் (வயது 30) இவரது கணவர் பிரபாகரன் இறந்துவிட்டார். இவருக்கு ரெபேக்கா (வயது 9) என்ற மகளும், சாமுவேல் (6) என்ற மகனும் உண்டு. ரெபேக்கா 4-ம் வகுப்பும், சாமுவேல் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். ஷீபா, தனது வீட்டில் அனாதை இல்லம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த அனாதை இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி வந்தனர்.

இந்நிலையில், அனாதை இல்லத்தில் கட்டுமானப்பணிகள் நடைப்பெற்று வந்தது. கொத்தனார் வெங்கடேசன், அனாதை இல்லத்தில் தங்கி, கொத்தனார் வேலை செய்து வந்தார். அப்போது குன்றத்தூர் மனஞ்சேரி பஜனைக் கோவில் தெருவைச் சேர்ந்த அருள் என்பவரின் மனைவி ஷகிலா (வயது 29) என்பவர், அனாதை இல்லத்தில் சமையல் வேலைக்கு வந்து சேர்ந்தார்.

இவருக்கும், வெங்கடேசனுக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அனாதை இல்லத்திற்கு கார் டிரைவர் வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. இதனை அறிந்த வெங்கடேசன், கார் ஓட்ட டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்கினார். சான்றிதழை அனாதை இல்ல நடத்துனர் ஷீபா எலிசபெத்திடம் கொடுத்து, கார் டிரைவர் வேலையில் சேர்ந்தார். இதற்கு ஷகிலா உதவி செய்தார்.

வெங்கடேசனும், ஷகிலாவும் இடையே உள்ள கள்ளக்காதல் தொடர்பு, அனாதை இல்ல நிர்வாகி ஷீபா எலிசபெத்துக்கு தெரிய வந்தது. அவர் இருவரையும் அழைத்து கண்டித்தார். ஆனாலும், அவர்கள் இருவரும், திருந்தவில்லை. இதனால், ஷகிலாவை அனாதை இல்லத்தை விட்டு வெளியேறும்படி ஷீலா எலிசபெத் கூறினார்.

ஆனால், ஷகிலா அதற்கு மறுத்துவிட்டு, ஷிபா எலிசபெத்தை கொலை செய்வேன் என மிரட்டினார். இதனால், பயந்துபோன ஷீபா எலிசபெத், கடந்த 27-3-2006 அன்று, ஷகிலாவின் தந்தையை அனாதை இல்லத்திற்கு வரவழைத்து, நடந்த சம்பவங்களை கூறி, ஷகிலாவை தந்தையுடன் அனுப்பிவிட்டார்.

இதனால் வெங்கடேசன் ஆத்திரம் அடைந்தார். ஷீபா எலிசபெத்தை பழிவாங்க நினைத்தார். 28-3-2006 அன்று காலை 11 மணியளவில், ஷீபா எலிசபெத்தின் மகள் ரெபேக்கா சைக்கிள் ஓட்டி பயிற்சி பெற்றுக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேசன், "எரியும் மெழுகுவர்த்தியை கையில் பிடித்துக்கொண்டே சைக்கிள் ஓட்டு பார்க்கலாம்'' என்று கேட்டார். களங்கமில்லாத சிறுமி ரெபேக்கா, கையில் எரியும் மெழுகுவர்த்தியை பிடித்துக்கொண்டே சைக்கிள் ஓட்டினார்.

அப்போது திடீர் என்று வெங்கடேசன், மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து, அவள் மீது பின்னால் சென்று ஊற்றி விட்டார். இதனால், ரெபேக்கா உடலில் தீ பற்றி எரிந்தது. அவள் அலறினாள். அவளது சத்தத்தை கேட்டு, ரெபேக்காவின் தம்பி சாமுவேல் ஓடி வந்தான். அவன் மீதும் வெங்கடேசன் மண்எண்ணையை ஊற்றி தீவைக்க முயன்றான். ஆனால் சிறுவன் சாமுவேல் லேசான தீக்காயத்துடன் தப்பி ஓடி விட்டான்.

தீக்காயம் அடைந்த இருவரையும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரெபேக்கா இறந்து விட்டார். ரெபேக்கா சாகும் முன்பு, "வெங்கடேசன்தான் தன் மீது தீ வைத்தார்'' என்று நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்தார்.

இந்த கொலைப்பற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனையும், ஷகிலாவையும் கைது செய்தனர். இருவர் மீதான வழக்கு, பூந்தமல்லி விரைவு நீதி மன்றம் எண் 3-ல் நீதிபதி அசோகன் முன்னிலையில் நடைப்பெற்றது.

இந்த நிலையில் வழக்கு நடைபெற்றபோது ஷகிலா ஜாமீனில் வெளியே வந்தார். 2008-ம் ஆண்டு ஜனவரியில், ஷகிலாவை அவரது கணவர் அருள் கொலை செய்துவிட்டார். இதனால், சிறுமி கொலை வழக்கில், வெங்கடேசன் மீது மட்டும் விசாரனை நடைப்பெற்றது. இவ்வழக்கில், சிறுவன் சாமுவேல், வெங்கடேசனுக்கு எதிராக சாட்சியளித்தான்.

இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி அசோகன் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் அவர் கூறி இருப்பதாவது:-

குழந்தை என்றும் பாராமல் இரக்கமில்லாமல் கொலை செய்த வெங்கடேசனுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன், மேலும் இது போல சமுதாயத்தில் குற்றங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காகவே, இ.பி.கோ. 302 பிரிவின் கீழ், மரணதண்டனை விதிக்கலாம் என்று சட்டத்தில் உள்ளது. எனவே இவருக்கு தூக்குதண்டனை விதிக்கிறேன். மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கே.மோகன் ஆஜரானார்.

0 comments:

Free Blog CounterLG