Thursday, April 17, 2008

சேது சமுத்திரம் வழிபாட்டு இடம் அல்ல: உச்ச நீதிமன்றம்

“இந்த இடத்தை (ராமர் சேது) வழிபாட்டு இடம் என்று யார் சொன்னது? கடலின் நடுப்பகுதிக்குச் சென்ற யார் வழிபடப் போகிறார்கள்?,”
புதுடில்லி: சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராகக் கூறப்பட்டு வரும் சமய காரணங்களை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியிருக்கிறது.ராமர் சேது பாலம் அல்லது ஆடம்ஸ் பாலம் என்று அழைக்கப்படும் அந்த இடத்தை வழிபாட்டு இடமாக அழைப்பதில் உச்ச நீதிமன்றம் தனது மகிழ்ச்சியின்மையைத் தெரிவித்திருக்கிறது.

“இந்த இடத்தை (ராமர் சேது) வழிபாட்டு இடம் என்று யார் சொன்னது? கடலின் நடுப்பகுதிக்குச் சென்ற யார் வழிபடப் போகிறார்கள்?,” என்று நீதிமன்ற குழுவில் இடம்பெற்ற தலைமை நீதிபதி கே ஜி பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அந்த இடத்திற்கு மக்கள் போகிறார்கள், வழிபடுகிறார்கள் என்று சொல்லாதீர்கள் என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள்.ராமர் சேது இந்துக்களுக்கான வழிபாட்டு இடம் என்பதால் சேது சமுத்திர திட்டத்திற்கு தடை விதித்து அந்த இடத்தைப் பாதுகாக்கும்படி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு மேற்கூறியவாறு தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்துக்கள் புனித தலமாக கருதும் ராமர் சேதுவை பழங்கால நினைவிடமாக அறிவிக்க வேண்டும் என்றும் அதற்கு ஊறு விளைவிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார்.இது வழிபாட்டுக்குரிய இடம் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நானும் ஒவ்வோர் ஆண்டும் அங்கு வழிபடச் செல்கிறேன். நீதிபதி அவர்களே! உங்கள் நம்பிக்கை என்ன என்பதல்ல கேள்வி. இது நாட்டிலுள்ள மக்களின் நம்பிக்கை என்று அப்போது சுப்ரமணிய சுவாமி கூறினார்.ராமேஸ்வரத்துக்கு தென்கிழக்கில் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள கடல்பகுதியில் காணப்படும் 30 கிலோமீட்டர் நீள மேட்டுப் பகுதியே ராமர் சேது என அழைக்கப்படுகிறது. முன்னதாக இவ்விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை விளக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.இந்நிலையில், சுப்ரமணிய சுவாமி தவிர இவ்விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்த மற்றவர்கள் சார்பில் வேணுகோபால், அருண் ஜேட்லி ஆகியோர் வழக்கறிஞர்களாக ஆஜராயினர்.

மத்திய அரசாங்கம் தனது சர்ச்சைக்குரிய விளக்கத்தை மீட்டுக் கொண்டது என்றாலும் நீதிமன்றம் ஆணையிட்ட புதைபொருள் ஆய்வு விசாரணைகள் இன்னும் நடப்பில் உள்ளன என்றும் அவர்கள் நினைவுபடுத்தினர்.ஆனால் உயர் நீதிமன்றம் வழங்கிய ஆணையை நீதிமன்றத்திற்கு வலியுறுத்திச் சொல்ல மனுதாரர்களுக்கு அனுமதியில்லை என்றும் நீதிபதிகள் குழு சொன்னது.

நன்றி- தமிழ் முரசு

0 comments:

Free Blog CounterLG