சென்னை ஆஸ்பத்திரியில் இறந்ததாக கருதப்பட்டவர் உயிர் பெற்ற அதிசயம்
விபத்தில் படுகாயம் அடைந்து, சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரைக் கட்டிப்பிடித்து உறவினர்கள் அழுத போது அவர் உயிர் பெற்ற அதிசயம் நடந்தது.
இந்த அபூர்வ சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விபத்தில் காயமடைந்தவர்
சென்னை கூடுவாஞ்சேரியை அடுத்த காந்திநகர் 3-வது தெருவைச் சேர்ந்த மணவாளன் என்பவரின் மகன் குட்டி என்கிற புருஷோத்தமன். (வயது 27). கடந்த 16-ந் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கினார். ஏதோ ஒரு வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவரது நிலைமை மோசமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி கூறினார்கள். இதைத் தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இறந்ததாக தகவல்
அங்கு குட்டி என்கிற புருஷோத்தமனுக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மதியம் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக தகவல் வெளியானது.
இது பற்றி அறிந்த குட்டியின் உறவினர்களும், நண்பர்களும் இரவோடு, இரவாக குட்டிக்கு அஞ்சலி செலுத்தி கூடுவாஞ்சேரி, நந்திவரம் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார்கள். அவரது இறுதிச் சடங்குக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குட்டியின் மரணம் பற்றி அவரது உறவினர்களுக்கும் சொல்லி அனுப்பினார்கள்.
உயிர் பிழைத்த அதிசயம்
நேற்று காலையில் குட்டியின் உறவினர்கள் அவரது உடலைப் பெறுவதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். அங்கு குட்டியைக் கட்டி பிடித்து அவர்கள் கதறி அழுதனர்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. குட்டியின் கை, கால்கள் அசைந்தன. கண்களும் திறந்தன. இதனைப் பார்த்து குட்டியின் உறவினர்கள் ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் விரைந்து வந்து குட்டியை மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மகிழ்ச்சி வெள்ளம்
இறந்ததாக கூறப்பட்ட குட்டி கண் விழித்து பார்த்தார், உயிர் பிழைத்து விட்டார் என்ற செய்தி காட்டுத் தீ போல கூடுவாஞ்சேரி மற்றும் நந்திவரம் பகுதியில் பரவியது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அந்தப் பகுதியில் ஒட்டப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன.
கூடுவாஞ்சேரி மற்றும் நந்திவரம் பகுதியில் இந்த அதிசய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Monday, April 21, 2008
சென்னை ஆஸ்பத்திரியில் இறந்ததாக கருதப்பட்டவர் உயிர் பெற்ற அதிசயம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment