Monday, April 21, 2008

இன்னும் 100 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அடி உயரும் வங்காளதேசம் முழுவதுமாக மூழ்கிவிடும்(?)


லண்டன், ஏப். 21.இன்னும் 100 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து விடும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வங்காளதேசம் முற்றிலுமாக மூழ்கி விடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.சீதோஷ்ண நிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மத்தியில் விவாதம் நடந்து வருகிறது. பூமி வெப்பமாகி வருவது பற்றியும் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடலின் நீர்மட்டம் கணிசமாக உயரும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வராம் ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் ஐரோப்பிய புவி அறிவியல் சங்க மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஞ்ஞானிகள், இன்னும் 100 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் 4 அடி உயரும் என்று அறிக்கை மூலம் தங்கள் கணிப்பை வெளியிட்டுள்ளனர்.இது குறித்து இந்த மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பிரவுட்மேன் கடல்சார் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வெட்லானா ஜெவ்ரேஜ்வா கூறியதாவது:-
கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக கடல் நீர்மட்டம் சீராக இருந்தது. 18ஆம் நூற்றாண்டில் 2 செ.மீ. மட்டுமே கடல் நீர்மட்டம் உயர்ந்தது. 19ஆம் நூற்றாண்டில் 6 செ.மீ. உயர்ந்தது. ஆனால், பனிபாளங்கள் உருகியதன் காரணமாக, 20ஆம் நூற்றாண்டில் கடல் நீர்மட்டம் 19 செ.மீ. உயர்ந்தது.

இந்த நூற்றாண்டைப் பொறுத்தவரை, கடல் நீர்மட்டம் அதிகமாக உயரும். ஏனென்றால், பனிப்பாறைகள் உருகி வருகின்றன. பனிப்பாளங்கள் நகர்ந்தபடி மறைந்து வருகின்றன. தண்ணீர் வெப்பமடைந்து வருகிறது. இந்த காரணங்களால், இந்த தூற்றாண்டு முடியும்போது, அதாவது சுமார் 100 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து விடும். சீதோஷ்ணநிலை மாற்றம் பற்றி ஆராயும் குழு, கடல் நீர்மட்டம், அரை அடி முதல் 2 அடிவரை உயரும் என்று கணித்துள்ளது. அது சரியல்ல. அதைவிட அதிகமாகவே உயரும்.இவ்வாறு அவர் கூறினார். பிரவுட்மேன் கடல்சார் ஆய்வுக்கூடத்தைச் சேர்ந்த சைமன் ஹோல்கேட் என்ற விஞ்ஞானியும் இதே கருத்தை தெரிவித்தார்.

சீதோஷ்ணநிலை மாற்றம் மற்றி ஆராய்ந்த குழுவின் கணிப்பு சரியல்ல என்றும் அவர் கூறினார். கடல் நீர்மட்டம் எவ்வளவு உயரும் என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே மாறுபட்ட கருத்து இருந்தபோதிலும் எந்த பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்பதில் அவர்கள் ஒருமித்த கருத்து கொண்டுள்ளளனர். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர்கள் கூறுகிறார்கள். வெள்ளத் தடுப்பு வசதிகளை செய்து கொள்ள வசதி இல்லாத வங்காளதேசம் போன்ற நாடுகள், முற்றிலுமாக மூழ்கி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.சீனாவில் கடல் நீர்மட்டம் 3 அடி உயர்ந்தால், அங்கு 7 கோடிக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வெளியேற வேண்டி இருக்கும் என்றும், வியட்நாம் நாட்டில் 10 சதவீத மக்கள் வெளியேற வேண்டி இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

0 comments:

Free Blog CounterLG