டெல்லியில் வரும் 22ம் தேதி துவங்கும் மாவட்ட, ஒன்றிய ஊராட்சித் தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த தமிழக அரசு, அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வரைவு சாசனம் தயாரித்து உள்ளதாகவும், அதில் 'ஊராட்சிகளை' மத்திய பட்டியலுக்கு மாற்றுவது, உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான மாநில அரசின் பொறுப்புகளை குறைப்பது போன்ற ஆட்சேபனைக்கு உரிய பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியதாகவும், அதில் ஆட்சேபத்துக்குரிய பரிந்துரைகளை வரைவு சாசனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே, மாநாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், முதல்வரின் கடிதத்தில் குறிப்பிட்ட ஆட்சேபனைக்குரிய பரிந்துரைகள் இன்னமும் நீக்கப்படாததால், டெல்லி மாநாட்டில் தமிழக பிரதிநிதிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதே கருத்தை வலியுறுத்தி மேற்குவங்க அரசும், டெல்லியில் நடைபெறும் ஊராட்சித் தலைவர் மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Monday, April 21, 2008
'ஊராட்சித்தலைவர் மாநாடு புறக்கணிப்பு ஏன்'
Posted by udanady at 4/21/2008 02:01:00 PM
Labels: டெல்லி, தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment