சென்னை: ட்ரிபிள் எஸ் (S.S.S) பேருந்துகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியதை தொடர்ந்து, கூடுதல் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ட்ரிபிள் எஸ் பஸ்கள் சாதாரண எக்ஸ்பிரஸ் பஸ்களாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளன. தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 16ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்கட்சி தலைவர் விஜயகாந்த் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறினார்.
தமிழகத்தில் ட்ரிபிள் எஸ்', நான்ஸ்டாப்' என்ற பெயரில் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் சில முக்கிய வழித்தடங்களை குறிப்பிடுகிறேன். உதாரணமாக சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு ரூ.20ம், கடலூருக்கு ரூ.10ம், புதுவைக்கு ரூ.11ம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று பேசினார். இதையடுத்து மறுநாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அளித்த பேட்டியில், அரசாங்கத்தின் சார்பில் பேருந்து கட்டணங்களை உயர்த்தும் போது ரகசியமாக செய்ய முடியாது.
அவர் (விஜயகாந்த்) சில ஊர்களை குறிப்பிட்டு அந்த ஊருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதாக சொல்லியிருப்பது 'எஸ்.எஸ்.எஸ்.' பேருந்துகள் என்ற சிறப்பு பேருந்துகளுக்கான கட்டணம். அத்தகைய சிறப்பு பேருந்துக்களுக்கான கட்டணம் கூட அதிமுக ஆட்சிக் காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்டதே தவிர, தற்போது எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து விஜயகாந்த் மறைமுகமாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக அறிக்கை விடுத்தார். இதையடுத்து, சட்டசபையிலும் பொதுவிவாதத்தின் போது இந்த பஸ் கட்டணம் குறித்து கூறினார். அத்துடன் ஏப்ரல் 2ந் தேதி அன்று சட்டசபையில் பேசிய விஜயகாந்த், மறைமுக பஸ் கட்டண உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே முதலமைச்சர் இதனை கருணையுடன் பரிசீலித்து அனைத்து பஸ்களையும் குறைந்த கட்டணத்தில் இயக்க வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக ட்ரிபிள் எஸ் பேருந்துகள், எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக இயக்கப்படுகிறது. மறைமுகமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணமும் தற்போது வசூலிக்கப்படவில்லை. எக்ஸ்பிரஸ் பேருந்துகளுக்கான பழைய கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடுதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டு பழைய கட்டணம் வசூலிக்கப்படுவதை வரவேற்றுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Saturday, April 19, 2008
விஜயகாந்த் புகார் - பேருந்து கட்டணம் குறைப்பு.
Posted by udanadi at 4/19/2008 10:38:00 PM
Labels: கட்டணம், புகார், பேருந்து, விஜயகாந்த்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment