Thursday, April 24, 2008

மகன்களின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை-சிக்கலில் டி.ஆர்.பாலு!

மகன்களின் நிறுவனங்களுக்கு கேஸ் சப்ளை-சிக்கலில் டி.ஆர்.பாலு!

தனது மகன்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நலன் கருதி, அந்த நிறுவனங்களுக்கு எரிவாயு சப்ளை செய்யுமாறு பெட்ரோலியத் துறையை தான் கேட்டுக் கொண்டது உண்மைதான் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகன்களான டி.ஆர்.பி. செல்வக்குமார், கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும், டி.ஆர்.பி. ராஜ்குமார் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களில் டி.ஆர்.பாலுவின் இரு மனைவியரான டி.ஆர்.பி பொற்கொடி, டி.ஆர்.பி. ரேணுகா தேவி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர்.பிரச்சினை என்னவென்றால், தனது மகன்களுக்குச் சொந்தமான மேற்கண்ட இரு நிறுவனங்களுக்கும் சலுகை விலையில், நரிமணம் மற்றும் குத்தாலத்திலிருந்து இயற்கை எரிவாயுவை சப்ளை செய்ய டி.ஆர்.பாலு ஓ.என்.ஜி.சி மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார் என்பதுதான்.சுவாமி கிளப்பிய புயல்!:இதுதொடர்பாக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 1ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், டி.ஆர்.பாலுவின் இரு மகன்களுக்கும் சொந்தமான, அவரு இரு மனைவியரும் பெருமளவிலான பங்குகளை வைத்துள்ள கிங்ஸ் இந்தியா பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் கிங்ஸ் இந்தியா கெமிக்கல் நிறுவனம் ஆகியவற்றுக்கு சலுகை விலையில், எரிவாயுவை சப்ளை செய்யுமாறு ஓ.என்.ஜி.சி, மற்றும் கெய்ல் நிறுவனங்களுக்கு டி.ஆர்.பாலு உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி கெய்ல் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் செளபேயை தனது அலுவலகத்திற்கு அழைத்து, காவிரிப் படுகைப் பகுதியிலிருந்து தனது மகன்களின் நிறுவனங்களுக்கு எரிவாயுவை அனுப்புமாறு ஓ.என்.ஜி.சி. நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சர்மாவைக் கேட்டுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.ஆனால், இந்த இரு நிறுவனங்களுக்கும் கடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் சலுகை விலையில் எரிவாயு அளிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு மின் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அதற்குப் பலன் இல்லாததால், சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு இடைக்காலத் தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளது.'அதிகார துஷ்பிரயோகம்':எனவே டி.ஆர்.பாலு தனது மகன்களின் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் எரிவாயுவை சப்ளை செய்ய உத்தரவிட்டிருப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள டி.ஆர்.பாலு மீது ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 11, 12, 13 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் சுவாமி.பிப்ரவரி 28ம் தேதி பிரதமருக்கு ஒரு நினைவூட்டல் கடிதத்தையும் அனுப்பியுள்ளார் சுவாமி.மைத்ரேயன் கேள்வி-பாலு கோபம்!:இந் நிலையில் நேற்று இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் வெடித்தது.இதுகுறித்து ராஜ்யசபாவில் நேற்று அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் டி.ஆர்.பாலு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, எனது குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு எரிவாயு அளிக்க நான் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றியே எரிவாயு அனுமதி கோரப்பட்டது.தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நான் கிங்ஸ் கெமிக்கல்ஸ் மற்றும் கிங்ஸ் ஹை பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தேன். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இணைந்த பின்னர் அந்தப் பதவியை நான் விட்டு விட்டேன்.கெய்ல் நிறுவனத்துடன் இந்த இரு நிறுவனங்களும் கடந்த 1999ம் ஆண்டு 10 ஆயிரம் கியூபிக் மீட்டர் எரிவாயுவைப் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் 2003ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து நான் ராஜினாமா செய்தவுடன் இந்த ஒப்பந்தத்தை பாஜக அரசு ரத்து செய்து விட்டது.இதில் என்ன தவறு?:இதனால் மேற்கண்ட இரு நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. நிறுவனங்களை மூட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. அந்த நிறுவனங்களில் 40,000 ஷேர் ஹோல்டர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான ஊழியர்கள் உள்ளனர். அனைவரும் என்னை அணுகி தங்களது வேலை பறிபோகும் நிலை உள்ளது. எனவே நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கோரினர்.ஏராளமான தொழிலாளர்களின் நலன்கள் அவர்களின் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றை கருத்திற்கொண்டும், பங்குதாரர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் இப்பிரச்னையை பெட்ரோலிய அமைச்சர் முன்பாக எடுத்து வைத்தேன். இதில் என்ன தவறு இருக்கிறது?. நான் தவறு ஏதும் செய்யவில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் இல்லை என்று கோபமாக பதிலளித்த டி.ஆர்.பாலு அதன் பின்னர் அவையை விட்டு வெளியேறி விட்டார்.அதன் பின்னர் பேசிய திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, இது நாடாளுமன்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட விஷயம். அதை இங்கு எழுப்புவது சரியல்ல என்றார்.ஆனால் அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பி.ஜே.குரியன், இந்த எதிர்ப்பை நிராகரித்தார். இதனால் திமுக தரப்பில் சலசலப்பு ஏற்பட்டது.பின்னர் பேசிய புதுச்சேரி எம்.பியும், அமைச்சருமான நாராயணசாமி, அதிமுக உறுப்பினர் தனது புகாருக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்றார். அதற்கு மைத்ரேயன், இதுதொடர்பாக செய்தித் தாளில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதைக் காட்டித்தான் நான் கேட்கிறேன். ஆதாரத்தை நிரூபிக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.லோக்சபாவிலும் சிக்கல்!:இந்த நிலையில், லோக்சபாவிலும் பாலுவுக்கு நேற்று எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக பிரச்சினையைக் கொடுத்தன.தேசிய நெடுஞ்சாலைகளில் அவசரத் தேவையான ஆம்புலன்ஸ்கள், கிரேன்கள் மற்றும் பிற வசதிகள் போதுமான அளவு இல்லை என பல எம்.பிக்கள் குற்றம் சாட்டினர். லோக்சபா தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, எம்.பிக்கள் சார்பில் கூறுகையில், எம்.பிக்கள், தங்கள் தொகுதிக்குச் செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காணும் குறைகளை தெரிவித்துள்ளனர். இதற்கு தாங்கள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பாலுவை கேட்டுக் கொண்டார்.இதற்கு பாலு பதிலளிக்கையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை சார்பில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை சில, மாநில அரசுகள் செயல்படுத்த தவறி விட்டன. தற்போது, பெருகிவரும் வாகன போக்குவரத்து காரணமாக நெடுஞ்சாலைப் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் போதிய வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 comments:

Free Blog CounterLG