Sunday, April 27, 2008

மதுரையில் பட்ட மேற்படிப்பு வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

மதுரையில் பட்ட மேற்படிப்பு வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

பட்ட மேற்படிப்பு படித்தவர்களின் வசதிக்காக தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகக் கிளை மதுரையில் அமைக்கப்படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் அறிவித்தார்.
பேரவையில் தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு அவர் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு விவரம்:-

""பட்ட மேற்படிப்பு, தொழிற்சார் கல்வி, நிர்வாகத் தகுதிக்கான பட்டம் பெற்றவர்கள் பதிவு செய்யவும், அவர்களை வேலைக்காக பரிந்துரை செய்யவும் மாநில அளவில் தொழில் - செயல் வேலைவாய்ப்பு அலுவலகம் தற்போது சென்னையில் செயல்பட்டு வருகிறது.
தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்களின் துயர் துடைக்கும் வகையிலும் தென் மாவட்டங்களில் உள்ள மனுதாரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மதுரையில் கிளை அலுவலகம் தொடங்கப்படும்.

வேலைவாய்ப்பு புதுப்பித்தல் சலுகை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவினைப் புதுப்பிக்க வேண்டும். 2006-ம் ஆண்டு பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு கடந்த ஆண்டு சிறப்பு புதுப்பித்தல் சலுகை அளிக்கப்பட்டது.

இப் புதுப்பித்தல் சலுகை மூலம் 35,826 பேர் பலன் அடைந்தனர். இச் சலுகை காரணமாக 2001-06-ம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்கள் மொத்தம் 3,80,138 பேர் பலன் அடைந்தனர்.

தற்போது 2007-ம் ஆண்டுக்கு சிறப்புப் புதுப்பித்தல் சலுகை மீண்டும் வழங்கப்படும். இதனால் சுமார் 40,000 மனுதாரர்கள் பலன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரொக்கப் பரிசு உயர்வு: அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு தற்போது நல்லாசிரியர் விருதுடன் அளிக்கப்படும் ரொக்கப் பரிசுத் தொகை ரூ.500-லிருந்து ரூ.1,000-மாக உயர்த்தப்படும்.
கட்டுமான கலைக்கழகம்: தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை அதிகரிக்கவும் மனித வளத்தை மேம்படுத்தவும் கட்டுமான கலைக்கழகம் நிறுவப்படும்.
ஏழு இடங்களில் இஎஸ்ஐ திட்டம்: தற்போதுள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருந்தகங்கள் மூலம் ஏழு புதிய பகுதிகளுக்கு இத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

கம்பம் நகராட்சி, முத்தல்லாபுரம் (தூத்துக்குடி), புதுக்கோட்டை கிராமம் (தூத்துக்குடி), சின்னமனூர் (தேனி), நாகர்கோயில் (புறநகர்), கன்னியாகுமரி (நகரம்) மற்றும் உத்தமபாளையம் நகராட்சி (தேனி).

சித்த மருத்துவப் பிரிவு: இஎஸ்ஐ நிறுவனத்தின் ஒப்புதலுடன் சிவகாசி, ஓசூர், திருச்சியில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.

கோவை, மதுரை தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளில் யோகா பிரிவு தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் தா. மோ. அன்பரசன்.

0 comments:

Free Blog CounterLG