207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்
தமிழக திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் வகையில் 207 அர்ச்சகர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் கூறினார்.
பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்கு அமைச்சர் பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக கூறியதாவது:-
""திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய ஏதுவாக 207 அர்ச்சகர்களுக்கு தற்போது ஆறு பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 பேர், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 பேர் இப் பயிற்சியில் அடங்குவர்.
இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வரும் ஜூன் மாதம் முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
14 கோயில்களுக்கு தங்கத் தேர்: தமிழகத்தில் இந்த நிதியாண்டில் 14 கோயில்களுக்கு தங்கத் தேர் செய்யும் பணி முடிவடையும். கடந்த நிதியாண்டில் மயிலை முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் உள்பட மொத்தம் 8 கோயில்களில் தங்கத் தேர் செய்து தங்கரத உலா நடத்தப்பட்டது.
ஒரு கால பூஜை: தமிழகத்தில் தற்போது 10,947 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஒரு கால பூஜை நடத்த நிதி தேவைப்படும் மீதி உள்ள கோயில்களின் எண்ணிக்கை 1,567 மட்டுமே. இந்த 1,567 திருக்கோயில்களும் இந்த ஆண்டிலேயே ரூ.4 கோடியில் இத் திட்டத்தில் கொண்டுவரப்படும். இதையடுத்து ஒருகால பூஜைகூட இல்லாத திருக்கோயில்கள் எதுவும் இல்லை என்ற வரலாறு உருவாக்கப்படும்'' என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
Sunday, April 27, 2008
207 தமிழ் அர்ச்சகர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment