Friday, May 9, 2008

அரவானிகளுக்கு கணினிப் பயிற்சி

அரவானிகளுக்கு கணினிப் பயிற்சி

தமிழக அரசு சார்பில் அரவானிகளுக்கு எல்காட் நிறுவனம் கணினிப் பயிற்சி அளித்து வருகிறது.

அரசுத் துறை ஊழியர்களுக்கு கணினிப் பயிற்சியை எல்காட் நிறுவனம் ஜூன் 2007 முதல் வழங்கி வருகிறது. இதில் அகில இந்திய வானொலி நிலையம், தூர்தர்ஷன் ஆகியவையும் அடங்கும்.

3 நாள்கள் முதல் 5 நாள்கள் வரை நடைபெறும் இந்த பயிற்சியில் இதுவரை 442 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இன்னும் அதிகம் கற்க நினைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தொடக்கத்தில் தலைமைச் செயலகம், மாநகராட்சி ஊழியர்களுக்கு இலவசமாக இப்பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது பல்வேறு துறை
சார்ந்த ஊழியர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வணிக வரித் துறை ஊழியர்கள் 7 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க சுமார் ரூ.1.50 கோடி கட்டணம் வசூலித்து இருப்பதாகக் கூறுகிறார் எல்காட் துணை மேலாளர் வி.கிரிஜாஸ்ரீ.

இதன் தொடர்ச்சியாக, முதன் முறையாக 25 அரவானிகளுக்கு இம்மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் குறைந்தது 8-ம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்தவர்களாக உள்ளனர். பயிற்சி முடிந்த பின்பு அவர்கள் விரும்பினால் கூடுதல் பயிற்சியையும் பெறலாம்.

பயிற்சி குறித்து இளம்கலை மனோதத்துவ இயல் தேர்ச்சி பெற்ற ஷில்பா என்ற அரவானி கூறும் போது, எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் சுயமரியாதையோடு வாழ்வதற்கான தன்னம்பிக்கை பிறக்கும்.

இங்கு 8-வது படித்தவருக்கும் புரியும் வகையில் சொல்லித் தருகிறார்கள். பயிற்சியை சரியாக பயன்படுத்தி எங்களிடம் உள்ள திறமைகளை வெளிக் கொணர்வோம் என்றார்.

அறிவுக் கூர்மை உள்ள இவர்களுக்கு எல்லா மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்படும். திறமை வாய்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

மற்றவர்களைப் போல, அரவானிகளும் பொது நீரோடையில் கலக்க வேண்டும் என்று கூறுகிறார் எல்காட் நிர்வாக இயக்குநர் சி.உமாசங்கர்.
பயிற்சியில் பங்கேற்றுள்ள சேலம், கோவை, மதுரை, சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரவானிகளுடன் விப்ரோ, இன்போசிஸ் போன்ற பெரிய கணினி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இவர்களுக்கு, தகுதி அடிப்படையில் வேலை வழங்கவும் அந் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. இது, அரவானிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Free Blog CounterLG