Friday, May 9, 2008

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரி விடுதலை

முன்னாள் திமுக அமைச்சர் தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக சித்தூர் செஷன்ஸ் நீதிபதி டி.துர்காபிரசாத் வியாழக்கிழமை தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் 20.5.2003-ல் மதுரையில் வாக்கிங் சென்றபோது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்.

அழகிரி உள்ளிட்ட 13 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை செய்தல்), 120 பி (கூட்டு சதி செய்தல்) மற்றும் 201 (தடயங்களை மறைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்கு மதுரையில் நடந்தால் அழகிரி ஆதரவாளர்கள் மிரட்டுவார்கள் என்றும் இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து கடந்த டிசம்பரில் இந்த வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த மார்ச் முதல் சித்தூர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் முத்துராமலிங்கம், வழக்கை விசாரணை செய்த டி.எஸ்.பி. முருகேசன் உள்ளிட்ட 82 பேர் சாட்சியம் அளித்தனர்.

தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் வழக்கறிஞர் ஜின்னா மொழிபெயர்த்தார்.

முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம். மன்னன் என்கிற மதுரை மன்னன், பி.ஈஸ்வர் கோபி, சிவகுமார் என்கிற கராத்தே சிவா, கார்த்திக், ஈஸ்வரன், மணி, பாலகுரு, பாண்டி என்கிற உதால பாண்டி, சீனி என்கிற சீனிவாசன், ராஜா, முபாரக் மந்திரி, சேட் என்கிற இப்ராகிம் சேட் ஆகிய 13 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அரசு தரப்பில் ராஜேந்திர ரெட்டி ஆஜரானார். அழகிரி உள்ளிட்டோர் சார்பில் வழக்கறிஞர்கள் விவி சந்திரசேகரன், பி. விஜயகிருஷ்ண ரெட்டி, சி. சுப்பிரமணியன், வேலூர் வரதராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
5 நிமிடத்தில் தீர்ப்பு: மாலை 3.50 மணிக்கு அழகிரியும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். மாலை 4.15 மணிக்கு நீதிபதி துர்காபிரசாத் இருக்கையில் அமர்ந்தார். தீர்ப்பை ஆங்கிலத்தில் நீதிபதி படித்தார். 5 நிமிடத்தில் தீர்ப்பை படித்துவிட்டு நீதிபதி தனது அறைக்கு திரும்பினார்.
சித்தூர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டவுடன் சுமார் 55 நாள்களில் இந்த வழக்கை விசாரணை செய்து சித்தூர் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

முதல்வரின் மகன் மீதான வழக்கு என்பதால் சென்னை மற்றும் வேலூரில் இருந்து செய்திகளை சேகரிக்க பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சியினரும் திமுகவினரும் வந்திருந்தனர்.

0 comments:

Free Blog CounterLG