Wednesday, April 16, 2008

சென்னையில் நடந்த திகில் படுகொலைகள், கொலைகாரன் சிக்கினான்?

சென்னை, ஏப்.16- சென்னையில் தொடர்ச்சியாக 4 பெண்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நேரில் பார்த்த காவலாளி அடையாளம் காட்டியதன் பேரில் வேலூரை சேர்ந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்தான் 4 பெண்களை கொன்ற `சைக்கோ' கொலைகாரனாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

அடுத்தடுத்து கொலை
சென்னை நகரில் கடந்த ஆண்டு நெஞ்சை பதற வைக்கும் வகையில் நடுத்தர வயதை சேர்ந்த 4 பெண்கள் கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டனர். மடிப்பாக்கத்தை சேர்ந்த பத்மினி, மேற்கு அண்ணாநகரை சேர்ந்த தமிழ்செல்வி, கொரட்டூரை சேர்ந்த கலையரசி, முகப்பேரை சேர்ந்த ஜெயமணி ஆகிய 4 பெண்களும்தான் கொடூரமாக கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள்.

திகில் நிறைந்த இந்த படுகொலை சம்பவங்கள் ஒரே மாதிரியாக நடந்தன. ஒரே கொலைகாரன் தான் 4 பேரையும் தீர்த்துக்கட்டியுள்ளான். கொலை சம்பவங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் நடந்தன. 4 பெண்களிடமும் `செக்ஸ்' வன்முறை எதுவும் நடக்கவில்லை. கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலிகள் மட்டும் கொள்ளை போய் இருந்தன. கொலைகள் நடந்த வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை. இந்த கொலை வழக்குகளில் போலீசாருக்கு முதலில் எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.

தமிழ்செல்வியை கொலை செய்துவிட்டு வெளியில் வரும்போது கொலைகாரனை காவலாளி ஒருவர் நேரில் பார்த்துள்ளார். இது ஒன்று மட்டும் தான் போலீசாருக்கு கிடைத்த சிறு தடயமாகும். ஆரம்பத்தில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் கொலைகாரனை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டனர். ஆனால், எந்த வித துப்பும் கிடைக்கவில்லை. கொலைகாரனின் படம் காவலாளி சொன்ன அடையாளத்தை வைத்து கம்ப்யுட்டரில் படம் வரையப்பட்டது. அதிலும் எந்த பலனும் இல்லை. இதனால், தனிப்படை போலீசார் சோர்ந்து போனார்கள்.

இதுவரை இந்த வழக்கில் ஆயிரம்பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். 500 பேரின் கைரேகையையும் எடுக்கப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இருந்தாலும், எந்த வித துப்பும் கிடைக்காமல் இருந்தது.

மனம் தளராமல் தொடர்ந்து விசாரணை நடத்தி எப்படியாவது குற்றவாளியை பிடித்தே தீரவேண்டும் என்று கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ஜெயகவுரி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் ரெங்கராஜன், சுகுமார், ஜான்ரோஸ் ஆகியோர் தலைமையிலான 3 தனிப்படைகள் மட்டும் தொடர்ந்து இந்த வழக்கில் விடா முயற்சியாக விசாரித்து வந்தனர்.

4 பெண்களையும் கொன்ற கொலைகாரன் `சைக்கோ' மனப்பான்மை படைத்தவன். நகை, பணத்துக்காக அவன் இந்த கொலைகளை செய்யவில்லை. பெண்கள் மீதுள்ள ஏதோ ஒரு வெறுப்பில் இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டுள்ளான் என்று போலீசார் முடிவுக்கு வந்தனர். வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இந்த 4 கொலைகளும் நடந்தன.

கம்ப்யுட்டர் மூலம் வரைந்த படத்தை வைத்து வேலூரை சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரை கொலைகாரனை நேரில் பார்த்த காவலாளி அடையாளம் காட்டினார். அதன் அடிப்படையில் வேலூர் நபர் தான் `சைக்கோ' கொலைகாரனாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். வேலூர் நபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடக்கிறது. இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, `இந்த 4 வழக்குகளிலும் குற்றவாளியை நெருங்கிவிட்டோம். இன்னும் ஓரிரு நாளில் நல்ல செய்தி சொல்கிறோம்' என்று கூறினார்கள்.

0 comments:

Free Blog CounterLG