Saturday, May 3, 2008

பணவீக்கம் 7.57 விழுக்காடாக உயர்வு!

பணவீக்கம் கடந்த 42 மாதங்களாக (மூன்றரை வருடங்களாக) இல்லாத அளவிற்கு 7.57 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

அரிசி, பால், தேயிலை, காய்கறி மற்றும் சில உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில், பணவீக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு 7.57 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மொத்த விலை அட்டவணையின் அடிப்படையில் வெளியிடப்படும் பணவீக்க விகிதம், சென்ற வருடம் இதே காலகட்டத்தில் 6.07 விழுக்காடாக இருந்தது.

இதற்கு முன் 2004ஆம் ஆண்டு நம்பர் மாதம் 2ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அதிகபட்சமாக பணவீக்கம் 7.76 விழுக்காடாக இருந்தது.

ஏப்ரல் 19ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தேயிலை விலை 17 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதே மாதிரி பால், அரிசி, காய்கறி, இறைச்சி ஆகிய உணவுப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதே போல் டீசல் விலை 2 விழுக்காடு, உலை எரி எண்ணெய் 1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

வார்ப்பட இரும்பு குழாய்களின் விலை 51 விழுக்காடு, தேனிரும்பு 8 விழுக்காடு, உருக்குத் தகடு 2 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மத்திய அரசு விலைவாசி உயர்வால் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாஸ்மதி அல்லாத மற்ற ரக அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

அத்துடன் சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த கடந்த ஒரு மாதத்தில், வஙகிகளின் ரொக்க இருப்பு விகிதத்தை முக்கால் விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்தும், கடந்த 42 மாதங்களாக இல்லாத அளவாக, பணவீக்கம் 7.57 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Free Blog CounterLG