Tuesday, April 22, 2008

அனைத்து ஊர்களிலும் நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

அனைத்து ஊர்களிலும் நூலகம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்து ஊர்களிலும் மக்கள் தொகை அடிப்படையில் படிப்படியாக நூலகங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் வேல்முருகன் (பா.ம.க.), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்), அப்பாவு (தி.மு.க.) ஆகியோர் நூலகம் திறப்பது, ஊழியர் நிரந்தரம் தொடர்பாக பேசியவற்றுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் விவரம்:-

""மக்கள்தொகை அடிப்படையில் மட்டுமே பகுதி நேர நூலகம் திறக்க அரசு முடிவு செய்கிறது. நூலகம் செயல்பட வாடகையில்லா இலவசக் கட்டடம், தலா ரூ.1,000 செலுத்தி இரண்டு பேர் புரவலர்களாகச் சேருதல், நூலக உறுப்பினர் காப்புத் தொகை ரூ.15-ம், ஆண்டு சந்தா ரூ.5 என மொத்தம் 200 பேர் நூலக உறுப்பினர்களாகச் சேர வேண்டும். சுமார் ரூ.2,000 மதிப்புள்ள தளவாடங்களை இலவசமாக வழங்க வேண்டும்.

இவற்றை மக்கள் பூர்த்தி செய்யும் நிலையில், பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமம், திருப்பூர் அருகே உள்ள பகுதிகளில் பகுதி நேர நூலகம் திறக்க ஆவன செய்யப்படும்.

450 பேர் பணி நிரந்தரம் எப்போது? தமிழகம் முழுவதும் நூலகங்களில் தினக் கூலிகளாக, பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றிய 1,000 பேரை தி.மு.க. அரசு ஏற்கெனவே பணி நிரந்தரம் செய்துள்ளது. இன்னும் தகுதியுள்ள 450 பேரை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து, வரும் 24-ம் தேதி நடைபெறும் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியாகும்'' என்றார் அமைச்சர்.

0 comments:

Free Blog CounterLG