Sunday, April 20, 2008

யூக வணிகத்திற்கு தடை விதிக்கப்படும்-கமல்நாத் சூசகம்




நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மாநில அரசுகள் ஒத்துழைப்பு தராதபட்சத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைப்பதற்காக யூக வணிகத்திற்கு தடை விதிக்க அரசு தயங்காது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத் கூறியிருக்கிறார்.

மேலும் ஸ்டீல் வர்த்தகத்தை எஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டுவருவது பற்றியும் அரசு முடிவெடுக்கும் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பதுக்கல் உள்ளிட்ட மோசடி வணிகத்தை தடுக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், மத்திய அரசின் முயற்சிகள் அர்த்தமற்றதாகி விடும் என்று கமல்நாத் குறிப்பிட்டார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பணவீக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும், அரசியல் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகளை தாம் இவ்வாறு கேட்டுக் கொள்வதாக கமல்நாத் குறிப்பிட்டார்.

பணவீக்க உயர்வு, விலைவாசி உயர்வு தொடர்பாக முதல் அமைச்சர்களின் கூட்டத்தை நிதியமைச்சர் ப. சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று கூறிய அவர், அதற்காக யூக வணிகத்தையும் தடை செய்ய நேரிடலாம் என்றார்.

ஸ்டீல் விலையைப் பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் சுமார் 49 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

என்றாலும் ஸ்டீல் வர்த்தகத்தை எஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டுவரும் திட்டம் உடனடியாக இல்லை என்றும், மாநில அரசுகள் ஸ்டீல் விலையைக் கட்டுப்படுத்தத் தவறினால், கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் எச்சரித்தார்

0 comments:

Free Blog CounterLG